சீன நிறுவனத்தின் இந்த கார் பெட்ரோல் விலை உயர்வில் இருந்து மட்டுமல்ல எமனின் பாசக்கயிறு கிட்ட இருந்தும் காக்கும்
பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரை சீன கார் உற்பத்தியாளரான பிஒய்டி நேற்றைய தினமே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் பிஒய்டி, அதன் அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை நேற்றைய தினம் (அக்டோபர் 11) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிக அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த வாகனமாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

நிறுவனம் நீண்ட நாட்களாக இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்தநிலையில், இந்தியாவிற்கான இரண்டாவது மின்சார தயாரிப்பாக அட்டோ 3-யை பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

அரசின் மின் வாகன ஊக்குவிப்பு பணிகளாலும், பெட்ரோல் - டீசல் வாகனங்களைக் காட்டிலும் அதிக பயன்பாட்டு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் மின்சார வாகனங்களுக்கு நாட்டில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதேவேலையில், இவை பெட்ரோல், டீசல் விலையுயர்வில் இருந்து நம்முடைய பர்சை காக்கும் கடவுளாகவும் காட்சியளிக்கின்றன.

இதுபோன்ற பன்முக காரணங்களினாலேயே மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அமோக வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே புதிதாக விற்பனைக்கு புதிதாக வந்திருக்கும் பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் பர்சை காப்பாற்ற வாகனமாக மட்டுமல்லாமல், பயணிகளின் உயிரைக் காக்கும் வசதிகளுடனும் விற்பனைக்கு வந்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் யூரோ என்சிஏபி இந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இது நடத்திய சோதனையில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கின்றது. சீன நிறுவனத்தின் தயாரிப்பு இத்தகைய சூப்பரான பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பது ஒட்டுமொத்த வாகன உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் 91 சதவீத புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 89 சதவீத புள்ளிகளையும், பாதுகாப்பு அம்சங்கள் விஷயத்தில் 74 புள்ளிகளையும் இக்கார் பெற்றிருக்கின்றது. இதன் சூப்பரான புள்ளிகளின் காரணத்தினாலேயே பிஒய்டி அட்டோ 3 ஐந்து ஸ்டார்களை தற்போது குவித்துள்ளது. இந்த உச்சபட்ச ரேட்டிங்கிற்கு காரில் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு உபகரணங்களுக்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த காரில் 7 ஏர் பேக்குகள், லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவையும் அடாஸ் 3 அதிகபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற காரணமாக இருக்கின்றது. அதேவேலையில், நாம் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய தகவல் ஒன்று இருக்கின்றது. அது, யூரோ என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது இடது பக்கம் டிரைவிங் வசதிக் கொண்ட அட்டோ 3 கார் மாடல் என்பதாகும்.

அதேவேலையில், இந்த ரேட்டிங் வலது பக்க ரைடிங் வசதிக் கொண்ட அட்டோ3க்கும் பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், இக்கார் மாடலை உருவாக்க நிறுவனம் ஒரே பிளாட்பாரத்தையே பயன்படுத்துகின்றது. ஆகையால், அனைத்திற்கும் இந்த பாதுகாப்பு ரேட்டிங் பொருந்தும் என கூறப்படுகின்றது.

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் பணத்தை மிச்சப்படுத்தும் காராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்க முடியும். துள்ளியமாக கூற வேண்டும் என்றால் 521 கிமீ ஃபுல் சார்ஜில் பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 60.48 kWh பேட்டரி பேக்கே அட்டோ 3-இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் நெக்ஸான் இவி மேக்ஸைக் காட்டிலும் இது அதிக ரேஞ்ஜ் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் ஓர் ஃபுல் சார்ஜில் 437 கிமீ வரையில் மட்டுமே ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே நெக்ஸான் இவி மேக்ஸிற்கு போட்டியளிக்கும் வகையில் விரைவில் இக்காருக்கு மிக அதிகளவில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஒய்டி நிறுவனம் இன்னும் இக்காரின் விலையை அறிவிக்கவில்லை. தற்போது வரை வெளியீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இத்துடன், ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. காரின் டெலிவரி பணிகள் வரும் 2023 ஜனவரியிலேயே தொடங்கப்பட இருக்கின்றது. முதல் கட்டமாக 500 பேருக்கு எலெக்ட்ரிக் காரை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








