இந்தியாவில் இன்னும் எத்தனை சீன எலக்ட்ரிக் கார்கள் தான்ப்பா வரும்...!! பிஒய்டி-இன் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி
சுருக்கமாக பிஒய்டி (BYD) எனப்படும் பில்டு யுவர் ட்ரீம்ஸ் (Build Your Dreams) நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள அதன் அட்டோ 3 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் சமீபத்தில் களம்புகுந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்று பிஒய்டி ஆகும். இன்னும் சொல்ல போனால், முதன்மையானது என்று கூட சொல்லலாம். ஏனெனில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி-இன் இ6 எலக்ட்ரிக் காருக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் நல்லப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இ6 மாடலை தொடர்ந்து பிஒய்டி நிறுவனம் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் கார் இருட்டில் நிற்பதுபோல் காட்டப்பட்டுள்ளதால், தோற்றத்தை தெளிவாக காண முடியவில்லை. இருப்பினும், முன்பக்க எல்இடி ஹெட்லைட்களும், அவற்றை இணைக்கும் லைட் பாரும் ஒளிர்வதுபோல் காட்டப்பட்டுள்ளதால், அவற்றின் டிசைன் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய முடிகிறது.

மற்றப்படி காரை பற்றிய விபரங்கள் எதுவும் இந்த டீசரில் தெரிவிக்கப்படவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய எலக்ட்ரிக் கார் பிஒய்டி அட்டோ 3 என்கிற பெயரில் வெளிவரலாம். எம்ஜி இசட்.எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி போன்ற இந்தியாவின் சற்று விலைமிக்க எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ள இந்த புதிய பிஒய்டி எலக்ட்ரிக் காரின் அறிமுகம் வருகிற அக்டோபர் 11ஆம் தேதி இருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

சீன ஆட்டோமொபைல் நிறுவனமான பிஒய்டி இந்தியாவில் சமீபத்தில்தான் தனது முதல் பயணிகள் வாகன ஷோரூமை திறந்தது. சிங்கப்பூர், நியூசிலாந்து & ஆஸ்திரேலியா உள்ளிட்ட வலதுகை டிரைவ் கொண்ட மார்க்கெட்களில் ஏற்கனவே விற்பனையில் உள்ள பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் சிகேடி முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

அதாவது, பிஒய்டி அட்டோ 3 கார் பாதி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டும், பாதி பாகங்களாகவும் இறக்குமதி செய்யப்பட்டு நம் நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. உலகளவில் பிரபலமான டெஸ்லா கார்களுக்கு போட்டியாக எலக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக பிஒய்டி நிறுவனம் வடிவமைத்த இ பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல் தான் அட்டோ 3 ஆகும்.

டெஸ்லா கார்களுக்கே சவால்விடும் வகையில் இருக்க வேண்டும் என வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் அட்டோ 3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் சவுகரியத்திலும், மற்ற விஷயங்களிலும் அதன் போட்டி மாடல்களுக்கு (எம்ஜி இசட்.எஸ் & ஹூண்டாய் கோனா) கடும் போட்டியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

குறிப்பாக, பரிமாண அளவுகளில் பிஒய்டி அட்டோ 3 நன்கு பெரியதாக இருக்கும். இந்த காரின் நீளம் 4,455மிமீ, அகலம் 1,875மிமீ மற்றும் வீல்பேஸ் 2,720மிமீ ஆகும். இவ்வாறு உருவத்தில் பெரியதாக இருப்பதால், பிஒய்டி அட்டோ 3 காரின் உட்புற கேபினையும் நன்கு விசாலமானதாக எதிர்பார்க்கலாம். இதனால், சாலையில் செல்லும்போது போட்டி மாடல்களை காட்டிலும் இந்த பிஒய்டி எலக்ட்ரிக் காரின் நிலைப்பாடு செம்ம ஸ்டைலிஷானதாக இருக்கும் என்பது உறுதி.

சர்வதேச சந்தைகளில், பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் நிரந்தர காந்த ஒத்திசைவான எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி & 310 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இவ்வளவு இயக்க ஆற்றல் கிடைப்பதினாலேயே இந்த எலக்ட்ரிக் காரில் 0-வில் இருந்து 100 kmph வேகத்தை வெறும் 7.3 வினாடிகளில் எட்டிவிட முடிகிறது.

அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் எலக்ட்ரிக் மோட்டாரில் பெரிய அளவிலான 60.48kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. பேட்டரியின் அளவு பெரியதாக இருப்பதாலும், ஸ்மார்ட்டான பேட்டரி மேனேஜ்மெண்ட் தொழிற்நுட்பங்கள் பொருத்தப்படுவதாலும், இந்த பிஒய்டி எலக்ட்ரிக் காரில் சிங்கிள் சார்ஜில் அதிகப்பட்சமாக 420கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும்.

அதாவது, இதன் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 420கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 60.48kWh பேட்டரி தேர்வு மட்டுமின்றி, அளவில் சற்று சிறிய 49.92kWh பேட்டரி தேர்வும் அட்டோ 3 காரில் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி தேர்வில் காரின் ரேஞ்ச் 320கிமீ ஆகும். எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த அளவில்-சிறிய பேட்டரி தேர்வுடன் தான் இந்தியாவில் அட்டோ 3 மாடலை பிஒய்டி நிறுவனம் அறிமுகப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








