இந்தியாவில் களமிறங்க தயார்நிலையில் சீன நிறுவனத்தின் மின்சார கார்! இப்பவே வெடவடத்து நிற்கும் ஹூண்டாய், எம்ஜி!
பிரபல சீன நிறுவனமான பிஒய்டி இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா இவி மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி ஆகிய மின்சார கார்களுக்கு போட்டியாக அதிநவீன வசதிகள் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட அட்டோ 3 எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மின்சார கார் குறித்த கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் விரிவாகக் காணலாம், வாங்க.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிஒய்டி (BYD). தற்போது உலகளவில் மின் வாகன உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனமே இந்தியாவில் அதன் புகழ்மிக்க எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது.

ஏற்கனவே இந்நிறுவனம் பிஒய்டி இ6 (BYD e6) எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் எம்பிவி எலெக்ட்ரிக் ரக காராகும். இந்த காரை கேப் சர்வீஸ் (வாடகை சேவை) நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டுநிலையில், சமீபத்திலேயே தனிநபர் பயன்பாட்டிற்கும் இக்காரை வாங்கிக் கொள்ளலாம் என பிஒய்டி அறிவித்தது.

இந்த நிலையிலேயே புதிய ஓர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பிஒய்டி களமிறங்கியிருக்கின்றது. இந்தியாவிற்காக அட்டோ 3 (BYD Atto 3) எனும் எலெக்ட்ரிக் காரையே அது ஒதுக்கியிருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும். இந்த வாகனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா இவி (Hyundai Kona EV) உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இந்த இரு மின்சார கார்களும் அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் கார்களாகும். இவற்றிற்கே டஃப் கொடுக்கும் விதமாக பன்முக பிரீமியம் அம்சங்களுடன் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. ஸ்போர்ட்டியான தோற்றத்தில்ம் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. சர்வதேச சந்தையில் நேர்த்தியான ஹெட்லேம்ப், முழுமையாக அடைக்கப்பட்ட ஸ்டைலிலான கிரில், கவர்ச்சியான அலாய் வீல்கள், குரோம் லைன்களால் அலங்கரிக்கப்பட்ட ஜன்னல்கள், சரிவான ரூஃப்லைன் மற்றும் இணைக்கப்பட்ட டெயில் லேம்புகள் உள்ளிட்டவற்றுடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான அம்சங்களுடனேயே இந்திய சந்தையிலும் பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, கூடுதல் சிறப்பம்சங்களாக பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் அன்லாக் டெயில்கேட், ரூஃப் ரெயில்கள் மற்றும் அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்களுடம் இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காரின் வெளிப்புறம் மட்டுமில்லைங்க உட்பக்கமும் அல்ட்ரா லக்சூரியஸ் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

காரின் உட்பக்கத்தை அலங்கரிக்கும் விதமாக குரோம் அக்செண்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, கூடுதல் பிரீமியம் வசதியை வழங்கும் பொருட்டு 12.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், எலெக்ட்ரிக் பவர் அசிஸ்டட் ஸ்டியரிங் வீல், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய பிரீமியம் டைரக் எச்டி ஆடியோ சிஸ்டம், டைப் சி மற்றும் டைப் ஏ யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் உள்ளிட்டவையும் இடம் பெற இருக்கின்றன.

இத்துடன், டிரைவர் மற்றும் முன் பக்க பயணிக்களுக்கு ஹீட்டட் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் வாய்ஸ் கமேண்ட் வசதியும் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, அடாஸ் தொழில்நுட்பமும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த அம்சமானது பல்வேறு பாதுகாப்பு செயல்களை செய்ய உதவிய இருக்கும்.

அவசர காலத்தில் தானாக பிரேக் பிடித்தல், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், மோதல் ஏற்படுவதற்கு முன்னரே எச்சரிக்கும் வசதி, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், டிராஃபிக் குறித்த அலர்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளையே அடாஸ் அம்சம் மேற்கொள்ளும். இவற்றுடன் கூடுதல் பாதுகாப்பு வசதிகளாக பன்முக ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஹில் டெசன்ட் கன்ட்ரோல் ஆகியவையும் வழங்கப்பட உள்ளன.

பேட்டரி பேக்கை பொருத்தவரை 49.92 kWh அல்லது 60.48 kWh தேர்வுகளே வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை ஒரு முழு சார்ஜில் 480க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை தரும் திறன் கொண்டவை ஆகும். மேலும், இந்த அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வெறும் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக் கூடிய மின் மோட்டார்களே பயன்படுத்தப்பட இருக்கின்றன.

பிஒய்டி நிறுவனம் இந்த காரை சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரம்புதூரில் அமைந்து தன்னுடைய வாகன உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரிக்க இருக்கின்றது. ஆகையால், சற்று குறைவான விலையில் இந்த மின்சார கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து நிறுவனம் அடுத்தடுத்த எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருதல் மற்றும் உற்பத்தி பணிகளை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இருப்பதாக பிஒய்டி தெரிவித்துள்ளது.

Source:economictimes
பிஒய்டி நிறுவனம் வரவிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனம் பன்முக எலெக்ட்ரிக் கார்களை அங்கு காட்சிப்படுத்த இருக்கின்றது. ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களை காட்சிப்படுத்த அது திட்டமிட்டுள்ளது. இந்த நிலையிலேயே நிறுவனம் ஆரம்ப புள்ளியாக அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








