இந்த மின்சார காரை ஹோண்டா தனிஆளா தயாரிக்கல.. இன்னொரு புகழ்பெற்ற நிறுவனமும் கை கொடுத்திருக்கு! அது எது தெரியுமா?
ஹம்மர், கடிலாக் போன்ற புகழ்பெற்ற கார்களை தயாரிக்கும் ஜிஎம் (GM) நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா (Honda) நிறுவனம் உருவாக்கியிருக்கும் ப்ரோலோக் எலெக்ட்ரிக் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. ப்ரோலோக் (Prologue) எனும் பெயர் கொண்டிருக்கும் எஸ்யூவி ரக காரையே நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. வெளியீட்டை முன்னிட்டு ஹோண்டா நிறுவனம் அக்காரின் கணிசமான படங்களையும் ரிலீஸ் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவே நிறுவனம் காரின் படங்களை அதிகாரப்பூர்வமாக ஹோண்டா வெளியிடுவது முதல் முறையாகும். ஹோண்டா நிறுவனம் இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியின்கீழே உருவாக்கியிருக்கின்றது. இது ஓர் உலக சந்தைக்கான எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் ஆகும். முதலில் வட அமெரிக்காவிலேயே இக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

இதன் பின்னரே ஒன்றன் பின் ஒன்றாக பிற உலக நாடுகளில் இக்காரை ஹோண்டா விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவிலும் ஹோண்டா நிறுவனம் ப்ரோலோக் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ வார்த்தை எதையும் நிறுவனம் வெளியிடவில்லை.

ஏற்கனவே, இந்திய மின் வாகன சந்தையில் போட்டிகள் மிகுந்து காணப்படுகின்றன. இருப்பினும், இந்த போட்டியில் வெற்றியாளனாக ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை டாடா மோட்டார்ஸே இருக்கின்றது. நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் கார்களும் பட்ஜெட் விலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் பிற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கும் எலெக்ட்ரிக் கார்கள் சற்று விலைக் குறைவானதாகவேக் காட்சியளிக்கின்றன.

டாடா டியாகோ இவி-யின் படம் உதாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாகவே இந்தியாவின் மின்சார கார் பிரிவில் டாப் செல்லிங் எலெக்ட்ரிக் கார்களாக டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் காட்சியளிக்கின்றன. இந்த இடத்தை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ளும் விதமாக சமீபத்தில் டாடா நிறுவனம் டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே, ஒட்டுமொத்த நாட்டின் மிக மிக மிலவு விலைக் கொண்ட மின்சார காராகும்.

இதற்கு ரூ. 8.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதுபோன்று மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியிலேயே பிற கார் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா நிறுவனம் அதன் முதல் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காரை முதல் முறையாக வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த மின்சார காரை ஜெனரல் மோட்டார்ஸ் அதன் அல்டியம் பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, தனது புகழ்மிக்க கடிலாக் லைரிக், செவ்ரோலட் பிளேசர் மற்றும் ஹம்மர் ஆகிய கார்களின் உருவாக்க பாணிகளை கையாண்டே ஹோண்டாவின் ப்ரோலாக் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜெனரல் மோட்டார்ஸின் இந்த கார்களில் காணப்படக் கூடிய பல அம்சங்களை ப்ரோலோக்கிலும் நம்மால் காண முடியும்.

படங்களைத் தொடர்ந்து ப்ரோலோக்கின் வீல் பேஸ், அகலம் மற்றும் உயரம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. இது ஹோண்டா சிஆர்வி-யைக் காட்டிலும் 203 மிமீ நீளமான வீல் பேஸிலும், 127 மிமீ அகலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், 21 அங்குல வீல் இக்காரில் பயன்படுத்தப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

மேலும், 11 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 11.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கண்கவர் வண்ண அலங்கரிப்புஉள்ளிட்டவற்றையும் ஹோண்டா-ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டணி இந்த காரில் வழங்கியிருக்கின்றது. இத்தகைய சிறப்பம்சங்களுடனேயே இந்த எலெக்ட்ரிக் கார் வெகு விரைவில் உலக சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதன் முதல் வருகை 2024 ஆம் ஆண்டில் அரங்கேற இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கும், என்ன மாதிரியான திறன் கொண்ட பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் உள்ளிட்டவை இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 510 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் திறனில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை நிறுவனம் அதன் சிட்டி செடான் காரை தழுவி உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் இக்காரின் வெளியீடு அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








