காரின் நடு இருக்கைகளில் இந்த அம்சம் கட்டாயம் இருக்கணும்... வருகிறது மத்திய அரசின் புதிய உத்தரவு!
கார்களின் நடு இருக்கையில் 'Y' வடிவ சீட் பெல்டுகளை மத்திய அரசு கட்டாயமாக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் புதிய நடவடிக்கையாகக் காரின் பின் பக்க மிடில் இருக்கையில் 'Y' வடிவ சீட் பெல்டுகளைக் கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு களமிறங்கியிருக்கின்றது.

'Y' வடிவ சீட் பெல்ட் என்பது மும்முனை கொண்ட சீட் பெல்டாகும். இதனையே பின் பக்கத்தில் உள்ள நடு இருக்கையில் அமரும் பயணிகளுக்கு மத்திய அரசு விரைவில் கட்டாயமாக்க இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான கார்களில் முன் மற்றும் பின் புறத்தில் உள்ள ஜன்னல் இருக்கை பயணிகளுக்கு மட்டுமே மூன்று புள்ளி பாதுகாப்பு அமைப்பு கொண்ட சீட் பெல்டுகள் வழங்கப்படுகின்றன.

இத்துடன், நடு பகுதியில் அமர்பவர்களுக்கு, அவர்களின் மடிப் பகுதியில் கட்டிக் கொள்ளும் வகையில் சீட் பெல்டுகள் வழங்கப்படுகின்றன. இதனையே மாற்றியமைக்கும் பொருட்டு மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட இருக்கின்றது. இந்த புதிய விதி பயணிகள் கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பயணிகள் கார்களின் பாதுகாப்பை பன் மடங்கு அதிகரிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் வாகன விபத்துகளும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இதனைக் குறைக்கும் பொருட்டே மத்திய-மாநில அரசுகள் போக்குவரத்து மற்றும் வாகனங்கள் சார்ந்து பல்வேறு அதிரடி புதிய விதிகளை உருவாக்கி வருகின்றன. இதன் வரிசையில் மிக விரைவில் இந்த ஒய் வடிவ சீட் பெல்ட் காரின் பின் இருக்கையின் மையப்பகுதிக்குக் கட்டாயமாக்கப்பட இருக்கின்றது.

இந்த அம்சத்தின் வாயிலாக பின்னிருக்கையின் நடு பகுதியில் அமர்பவர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும். இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைப் பெறுவதற்காக முதலில் அரசு வரைவு அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னரே பல தரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் புதிய வரைவை உருவாக்கி மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும். இந்த ஒய் வடிவ சீட் பெல்டானது முதன் முதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ நிறுவனமே அறிமுகப்படுத்தியது. பின் பகுதியின் மைய இருக்கையில் அதிக ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறி நிறுவனம் இந்த பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த வசதி எதற்காக அறிமுகம் செய்யப்பட்டதோ அதனை நிறைவேற்றும் வகையில் நல்ல பலனை வழங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே ஒய் வடிவ சீட் பெல்டிற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மிக விரைவில் அதனை கட்டாயமாக்குவதற்கான முயற்சியில் இந்திய அரசு களமிறங்கியிருக்கின்றது.

மிகச் சமீபத்தில் அரசு அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஆறு ஏர் பேக்குகளைக் கட்டாயமாக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இது தொடர்பான கருத்து கேட்பு பணியில் தற்போது அரசு களமிறங்கியிருக்கின்றது. இப்பணிகள் கடந்த ஜனவரி 14ம் தேதியில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் புதிய விதி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இந்தியாவில் ஹெல்மெட்டை போலவே சீட் பெல்டும் கட்டாயம். இதை அணியாமல் பயணித்தால் அபராதம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பயணிகளின் பாதுகாப்பில் அதிக பங்கினை வகிப்பதால் இத்தகைய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








