7 பேர் போற மாதிரி சூப்பரா ஒரு கார் வருது... உங்க குடும்பத்துல ஆட்கள் அதிகம்னா யோசிக்காம வாங்கலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் சி3 (Citroen C3). இது 5 இருக்கைகளை கொண்ட கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போது 5 இருக்கைகளை கொண்ட கார்களின் 7 இருக்கை வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் போக்கு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த வரிசையில் சிட்ரோன் நிறுவனமும் சி3 காரின் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது. சிட்ரோன் நிறுவனம் தற்போதைய நிலையில் சிசி4 (CC4) என்ற குறியீட்டு பெயரில் இந்த காரை அழைக்கிறது. இது 3 வரிசைகளை கொண்ட 7 சீட்டர் கார் ஆகும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளுக்காக சிட்ரோன் நிறுவனம் இந்த காரை உருவாக்கி வருகிறது.

ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், சிட்ரோன் சி3 காரின் 7 சீட்டர் வெர்ஷன் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 2023ம் ஆண்டின் பண்டிகை காலத்திற்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போதைய நிலையில் சிசி4 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டாலும்,சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிஎம்பி மாடுலர் பிளாட்பார்ம் அடிப்படையில் சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் கார் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2.62 மீட்டர்களாகவும், ஒட்டுமொத்த நீளம் 4.40 மீட்டர்களாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் டிசைனை பொறுத்தவரையில், இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் சிட்ரோன் சி3 காரை போன்றேதான், இந்த 7 சீட்டர் காரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் நிறுவனம் இந்த 7 சீட்டர் காரை தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து பார்க்கையில், சிட்ரோன் சி3 காரின் டிசைனும், சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரின் டிசைனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகதான் இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.
சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரில், ஸ்பிளிட் ஹெட்லைட்கள் வழங்கப்படலாம். ஆனால் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய லோகோ வழங்கப்படுமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் சிட்ரோன் சி3 காரில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இதில், முதலாவது இன்ஜின் அதிகபட்சமாக 81 பிஹெச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் இரண்டாவது இன்ஜின் 108 பிஹெச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான், சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சிட்ரோன் நிறுவனம் சி3 காரின் 7 சீட்டர் வெர்ஷன் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வரும் 2023ம் ஆண்டின் தொடக்கத்திலேயே சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo) இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனவே வரும் பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு புதிய எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு நீங்கள் திட்டமிட்டிருந்தால், சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். சிட்ரோன் சி3 காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள காரணத்தால்தான், 7 சீட்டர் வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் என அடுத்தடுத்து புதிய வெர்ஷன்களை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








