18 நிமிடங்களில் முழுமையாக விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்த காருக்கு இவ்ளோ சூப்பரான வரவேற்பா?..
சிட்ரோன் (Citroen) விற்பனைக்குக் கொண்டு வந்த ஓர் கார் வெறும் 18 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு பிரீமியம் ரக கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சிட்ரோன் (Citroen) நிறுவனம் அண்மையில் அதன் ஸ்பெஷல் எடிசன் கார் ஒன்றிற்கான விற்பனையை ஆன்லைன் வாயிலாக தொடங்கியது. காருக்கான விற்பனை பணிகள் தொடங்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே அது விற்பனைக்கு அறிவித்த அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன.

இந்த விறுவிறுப்பான விற்பனைக் குறித்த தகவலை சிட்ரோன் நிறுவனம் தற்போது மட்டற்ற மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கின்றது. நிறுவனம் அமி (Ami) எனும் குவாட்ரிசைக்கிள் ரக வாகனத்தை ஐரோப்பிய சந்தை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலின் 'மை அமி பக்கி' (My Ami Buggy) எனும் சிறப்பு பதிப்பு வாகனத்தையே அண்மையில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த சிறப்பு பதிப்பு வாகனத்தையே வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வாங்கியிருக்கின்றனர். இது ஓர் சிறப்பு பதிப்பு எலெக்ட்ரிக் காராகும். இக்காரின் ஐம்பது யூனிட்டுகளை மட்டுமே சிட்ரோன் விற்பனைக்குக் களமிறக்கியது.

தற்போது அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன. கடந்த வாரம் புதன் (ஜூன் 22) அன்றே இக்காருக்கான புக்கிங் பணிகள் இணையம் வாயிலாக தொடங்கப்பட்டன. அது தொடங்கிய வெறும் 18 நிமிடங்களில் அனைத்து மை அமி பக்கி கார்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கிவிட்டனர். மிக வேகமான ஓர் வாடிக்கையாளர் 2 நிமிடம் 53 செகண்டுகளை செலவிட்டு அமி பக்கி எலெக்ட்ரிக் காரை வாங்கியிருக்கின்றார்.

முற்றிலும் மாறுபட்ட தோற்றம் மற்றும் மிக சூப்பரான பிரீமியம் அம்சங்கள் ஆகியவற்றை இந்த கார் கொண்டிருப்பதனாலயே பலர் இக்காரை அதிக ஆர்வத்துடன் வாங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 50 யூனிட்டுகள் மட்டுமே அமி பக்கி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டநிலையில், அந்த காரை 1,800 பேர் வாங்குவதற்கு முன் வந்திருக்கின்றனர்.

ஆனால், மிக வேகமாக செயல்பட்ட வாடிக்கையாளர்களுக்கே காரை புக் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அவ்வாறு, அதிக வேகமாக செயல்பட்டு சிறப்பு பதிப்பு அமி காரை புக் செய்த முதல் வாடிக்கையாளரை கூடுதலாக சிறப்பிக்க சிட்ரோன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நிறுவனம் முதல் வாடிக்கையாளரின் பெயரை அவருக்கான பக்கி அமி எலெக்ட்ரிக்கில் பொறித்து வழங்க இருக்கின்றது.

சிட்ரோன் நிறுவனத்தின் மிக சிறப்பாக விற்பனையாகும் வாகனமாக அமி உள்ளது. இதுவரை 21 ஆயிரம் யூனிட்டுகள் வரை அக்கார் விற்பனையாகியிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை 15 வயது சிறுவர்களாலும் இயக்க முடியுமாம். இது ஓர் குவாட்ரிசைக்கிள் ரக வாகனம் என்பதால் ஐரோப்பாவில் இதற்கு அனுமதி உண்டு.

இந்த நிலையிலேயே இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய லிமிடெட் எடிசன் அமி பக்கி காரை சிட்ரோன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு ஐரோப்பிய மக்கள் மத்தியில் மிக மிக சூப்பரான வரவேற்பும் கிடைத்திருக்கின்றது. வழக்கமான அமி காரைக் காட்டிலும் சற்று மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டதாக புதிய சிறப்பு பதிப்பு மை அமி பக்கி இருக்கின்றது.

இதன் கூரை கேன்வாஸ் மூலம் மாற்றியமைக்க முடியும். மேலும், கதவுகளுக்கு பதிலாக உலோக குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பிரத்யேக நிறம் மற்றும் கிராஃபிக்குளாலும் லிமிடெட் எடிசன் அமி உருவாக்கப்பட்டிருக்கின்றது. 9,790 யூரோக்கள் என்ற விலையிலேயே அது விற்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 8.17 லட்சம் ஆகும். இது தோராயன விலையே ஆகும். இத்தகைய அதிக விலையிலேயே அமி பக்க விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 69 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிமீ வேகம் ஆகும். டிஜிட்டல் திரை, விநோதமான உருவ தோற்றம் மற்றும் பன்முக பயன்பாட்டு வசதி ஆகியவற்றைக் கொண்ட வாகனமாகவும் அமி உள்ளது. இதன் விளைவாகவே இந்த வாகனத்திற்கு ஐரோப்பா, மொராக்கோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








