ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்... எல்லாமே மைலேஜை வாரி வழங்கும்!
இந்தியாவில் பத்து லட்ச ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 10 சிஎன்ஜி கார்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் ஒவ்வொரு காரின் விலை மற்றும் மைலேஜ் விபரம் ஆகியவைகுறித்த தகவலைக் காணலாம்.

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக இப்போது சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிகளவில் கார்கள் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.
இவற்றில் அதிக மைலேஜ் தரும் திறனிலும் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 10 சிஎன்ஜி கார் மாடல்களை பற்றியே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி ஆல்டோ 800 (Maruti Alto 800):
மாருதி சுஸுகி ஆல்டோ 800, இதுவே இந்தியாவிலேயே மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார் மாடலாகும். நிறுவனம் இந்த கார் மாடலின் எல்எக்ஸ்ஐ எனும் வேரியண்டிலேயே சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்குகின்றது. இதன் விலை ரூ. 5.55 லட்சம் ஆகும். இந்த காரில் 0.8 லிட்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 41 பிஎஸ் மற்றும் 60 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. ஆல்டோ 800 சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 31.59 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ (Maruti S-Presso):
மாருதி சுஸுகியின் மற்றுமொரு விலை குறைவான சிஎன்ஜி கார் மாடலாக எஸ்-பிரஸ்ஸோ இருக்கின்றது. எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ எனும் இரு விதமான தேர்வுகளில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இவையிரண்டிலும் 1.0 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 57 பிஎஸ் பவரையும், 82.1 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஆல்டோவை போலவே இந்த சிஎன்ஜி கார் மாடலையும் நிறுவனம் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்குகின்றது. இந்த சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 32.73 கிமீ வரை மைலேஜ் தரும். இதன் விலை ரூ. 6.42 லட்சம் மற்றும் ரூ. 6.82 லட்சம் ஆகும்.

டாடா டியாகோ (Tata Tiago):
சந்தையில் சிஎன்ஜி கார்கள் பிரிவில் போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த போட்டியைச் சமாளிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் டியாகோ கார் மாடலில் எக்கசக்கமான சிஎன்ஜி தேர்வுகளை விற்பனைக்கு வழங்குகின்றது. எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் டிடி ஆகிய ஐந்து வேரியண்டுகளிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

இந்த அனைத்து வேரியண்டுகளிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 73 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.49 கிமீ வரை இக்கார் மைலேஜ் தரும். இவற்றின் விலையும் ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாகும். குறிப்பாக, இதன் ஆரம்ப நிலை தேர்வான எக்ஸ்இ ரூ. 7.18 லட்சத்திற்கே விற்பனைக்குக் கிடைக்கின்றது. டியாகோ சிஎன்ஜியின் அதிகபட்ச விலையே ரூ. 8.86 லட்சமாகும்.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Wagon R):
மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலை போலவே வேகன்ஆர் கார் மாடலையும் எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ எனும் இரு விதமான தேர்வுகளிலேயே சிஎன்ஜி ஆப்ஷனை விற்பனைக்கு வழங்குகின்றது. இவற்றின் விலை ரூ. 7.20 லட்சம் மற்றும் ரூ. 7.73 லட்சம் ஆகும். இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 34.05 கிமீ வரை மைலேஜ் தரும்.

மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Celerio):
மாருதி சுஸுகி செலிரியோவின் விஎக்ஸ்ஐ எனும் ஒற்றை தேர்வில் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷனை விற்பனைக்கு வழங்குகின்றது. இதன் விலை ரூ. 7.51 லட்சம் ஆகும். இந்த சிஎன்ஜி காரே இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி வாகனமாகும். இது ஒரு கிலோவிற்கு 35.6 கிமீ வரை மைலேஜ் தரும். 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த அதிகபட்ச ரேஞ்ஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios):
ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மலிவு விலை சிஎன்ஜி காராக கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது. மக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்தா ஆகிய வேரியண்டுகளிலேயே சிஎன்ஜி தேர்வை நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது. இவை ரூ. 8.13 லட்சம், ரூ. 8.72 லட்சம் மற்றும் ரூ. 9.56 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இதன் மைலேஜ் திறன் 28 கிமீ ஆகும். ஆமாங்க, ஒரு கிலோவிற்கு இக்கார் 28 கிமீ வரை பயணிக்கும்.

டாடா டிகோர் (Tata Tigor):
டாடா மோட்டார்ஸ் அதன் டியாகோ சிஎன்ஜி கார் மாடலை போலவே டிகோர் சிஎன்ஜியையும் அதிக அளவிலான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது. ஒட்டுமொத்தமாக ஆறு விதமான தேர்வுகளில் டிகோர் சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்எம், எக்ஸ்இசட், எக்ஸ்இசிட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் டிடி, எக்ஸ்இசட் பிளஸ் லெதர் பேக் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லெதர் பேக் டிடி ஆகியவையே அவை ஆகும். ரூ. 8.44 லட்சம் தொடங்கி ரூ. 9.91 லட்சம் வரையிலான விலையில் இவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. டிகோர் சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 26.49 கிமீ வரை மைலேஜ் தரும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Swift)
மாருதி சுஸுகி அதன் புகழ்பெற்ற கார் மாடலான ஸ்விஃப்ட்டையும் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 30.90 கிமீ வரை மைலேஜ் தரும். 1.2 லிட்டர் டூயல் ஜெட் மோட்டாரே இந்த சூப்பரான ரேஞ்ஜை வழங்கக் கூடியதாக உள்ளது. விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ எனும் இரு விதமான தேர்வுகளில் ஸ்விஃப்ட் சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 8.75 லட்சம் மற்றும் 9.49 லட்சம் ஆகும்.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Dzire)
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிற சிஎன்ஜி கார் மாடல்களைப் போலவே பெரியளவில் இல்லாமல் வெறும் இரட்டை தேர்வுகளில் மட்டுமே டிசையர் சிஎன்ஜியையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஆகியவற்றிலேயே சிஎன்ஜி தேர்வு வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 9.22 லட்சம் மற்றும் ரூ. 9.97 லட்சம் ஆகும். டிசையர் சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 31.12 கிமீ வரை மைலேஜ் தரும்.

மாருதி சுஸுகி பலினோ மற்றும் டொயோட்டா க்ளான்ஸா (Maruti Baleno/Toyota Glanza)
சமீபத்திய அறிமுகங்களாக பலினோ சிஎன்ஜி மற்றும் க்ளான்ஸா சிஎன்ஜி கார்கள் இருக்கின்றன இவற்றின் விலை ரூ. 9.29 லட்சம் மற்றும் 9.46 லட்சம் ஆகும். அலங்கார விஷயத்தில் மட்டுமே வித்தியாசத்துடன் காணப்படும் இந்த கார் மாடல்கள் எஞ்ஜின் மற்றும் மைலேஜ் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. அந்தவகையில், இக்கார் ஒரு கிலோவிற்கு 30.61 கிமீ வரை மைலேஜ் தரும்.


Click it and Unblock the Notifications








