குளிர் காலத்துல இ-வாகனங்களின் மைலேஜ் திறன் குறையுமா?.. தவிர்க்க ஏதாச்சும் வழி உண்டா?..
இந்தியாவில் மின்சார வாகனங்கள் சமீப காலமாக அதிக வேகத்தில் பிரபலமடைந்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் நம்பிக்கையை அவை பெற தொடங்கி இருக்கின்றன. இதன் விளைவாகவே அவற்றை சாலையில் நம்மால் அதிகளவில் காணவும் முடிகின்றது. இதுவே மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தொடங்கி இருக்கின்றனர் என்பதற்கு சான்றாகவும் இருக்கின்றது.
இந்த நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குளிர்காலத்தில் குறைவான ரேஞ்ஜ் திறனை வழங்கும் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில், அதாவது, வெயில் அதிகம் சுட்டெரித்த நாட்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தானாக தீ பிடித்து எரிந்து நாசமாகிய சம்பவங்கள் நாட்டில் அதிகளவில் அரங்கேறின. இந்த மாதிரியான சூழலில் குளிர் காலத்தில் அவை குறைவான ரேஞ்ஜ் திறனை வழங்கும் என்கிற தகவல்கள் வெளியாகி மின்சார வாகன பயன்பாட்டாளர்களுக்கு ஷாக் வைத்தியம் அளித்துள்ளது.

ஆனால், இது நிரந்தரமானது அல்ல, இது தற்காலிகமானதே என கூறப்படுகின்றது. இந்த தகவல் மின்சார இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பயன்பாட்டாளர்களுக்கு மன நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. சரி, என்னென்ன காரணங்களுக்காக மின்சார வாகனங்களின் மைலேஜ் திறன் குளிர்காலத்தில் குறைகிறது என தெரிந்துக் கொள்வோமா?, வாருங்கள் இது பற்றிய விரிவான பதிவிற்குள் போகலாம். அதிகப்படியான குளிரே மின்சார காரின் ரேஞ்ஜ் திறனை பாதிக்கின்றது.
இதுவே, எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ஜ் திறனை மட்டுமல்ல செயல் திறனையும் பாதிக்க் செய்வதாக கூறப்படுகின்றது. இதன் விளைவாக சில இ-வாகனங்கள் 40 சதவீதம் வரை ரேஞ்ஜ் திறனை குறைவாக வழங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இந்த தகவலை அமெரிக்கன் ஆட்டோமொபைல் அசோசியேஷனும் உறுதிப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் பல பகுதிகளில் குளிர் காலம் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. உதாரணமாக, சாலையில் வாகனங்கள்கூட செல்ல முடியாத அளவிற்கு பனி படர்ந்துக் காணப்படும். இந்த மாதிரியான நிலையே எலெக்ட்ரிக் வாகனங்களின் ஹீட்டிங் சிஸ்டத்தை பாதிக்கச் செய்து, ரேஞ்ஜை குறைக்கின்றன. வெயில் காலம் மீண்டும் தொடங்கும்பட்சத்தில் இந்த நிலை மாறி, வழக்கமான ரேஞ்ஜ் திறனை அந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளிப்படுத்தும்.

ஹீட்டிங் சிஸ்டம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது?
ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனம், அதாவது, எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் இயல்பான தன்மையே அவை அதிக வெப்பத்தை வெளியேற்றும் என்பதுதான். எஞ்ஜின் இயங்கத் தொடங்கிய உடன் அதில் இருந்து அளவுகடந்த வெப்பம் வெளியேறும். இந்த வெப்பம் காரின் பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், மின்சார மோட்டார் கொண்ட வாகனம் அப்படி இல்லை. காரின் கேபினையும், பயணிக்கு தேவையான வெப்பத்தை பெற பேட்டரியே உழைக்க வேண்டி உள்ளது. இந்த வேலையில் பேட்டரி களமிறங்குவதால் அதன் எனெர்ஜி காரை வெப்பமாக்குவதில் விரையமாகின்றது. இதன் விளைவாகவே குளிர் காலத்தில் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் திறன் பாதிக்கப்படுகின்றது.
பேட்டரி எவ்வாறு பாதிக்கப்படுகின்றது? அதிக குளிர்ச்சியான சூழல் பேட்டரியில் நடைபெறும் ரசாயன மற்றும் இயற்பியல் எதிர்வினைகளின் வேகத்தை குறைத்தல் அல்லது தடுக்கச் செய்கின்றன. இதன் விளைவாக பேட்டரி வழக்கமான நேரத்தைக் காட்டிலும் அதிக நேரத்தை சார்ஜேற்ற எடுத்துக் கொள்கின்றன. மின் மறுப்பு அதிகளவில் நடைபெறுவதனாலேயே இந்த நிலை அவற்றில் தென்படுகின்றன.

இதை எப்படி தவிர்ப்பது?
இதனை தவிர்ப்பதற்கான வழிகள் பெரிய அளவில் இல்லை. அதேவேளையில், இந்த அவலம் தற்காலிகமானதே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியதைப் போல் குளிர் காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும்போது இந்த நிலை தானாகவே சரியாக ஆகிவிடும். பெரும்பாலான மின்சார வாகனங்களில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது வழங்கும் தகவலின்படி உங்கள் வாகனத்தை ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஒருவேளை இந்த சிஸ்டம் உங்கள் காரின் பேட்டரி மிக குளிர்ந்த நிலையில் இருப்பதாக கூறினால், அப்போது, அதனை ஹைவோல்ட் அல்லது உயர் அழுத்த சார்ஜிங் செய்வதை தவிர்த்தல் வேண்டும். கடும் குளிர்காலத்தில் எந்தெந்த எலெக்ட்ரிக் கார்கள் எந்த அளவு ரேஞ்ஜை குறைவாக வழங்குகின்றன என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. ரீகரண்ட் எனும் தளம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ஃபோர்டு மஸ்டாங் 30 சதவீதம் வரை ரேஞ்ஜை குறைவாக வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
அப்படியானால், இந்த எலெக்ட்ரிக் கார் குளிர் காலத்தில் 440 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும். இதேபோல், ஹூண்டாய் கோனா 19 சதவீதம் வரை குறைத்து 425 கிமீ ரேஞ்ஜையும், டெஸ்லா மாடல் ஒய் 15 சதவீதம் வரை சார்ஜை குறைத்து 430 கிமீ ரேஞ்ஜையும், ஜாகுவார் ஐ-பேஸ் 3 சதவீதம் வரை சார்ஜை குறைத்து 470 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என அது தகவல் வெளியிட்டு உள்ளது.
Source: Recurrent
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications









