டெல்லி ஏர்போர்ட்டில் களமிறங்க போகும் புதிய வண்டிகள்... எல்லா பக்கமும் இந்த மாதிரிதான் கொண்டு வரணும்!
டெல்லி விமான நிலையத்தில் புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (Indira Gandhi International Airport) அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் பயன்பாட்டிற்கு 62 எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கவுள்ளதாக டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (Delhi International Airport Limited - DIAL) தற்போது அறிவித்துள்ளது.

இந்த 62 எலெக்ட்ரிக் வாகனங்களும் வரும் மாதங்களில் வாங்கப்படவுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இந்த 62 எலெக்ட்ரிக் வாகனங்களும் வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 டன் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு இந்த 62 எலெக்ட்ரிக் வாகனங்களும் உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு இடங்களில் ஹை-வோல்டேஜ் ஃபாஸ்ட் சார்ஜர்களை டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் பொருத்தவுள்ளது. அத்துடன் தற்போது உள்ள ஐசி இன்ஜின் வாகனங்களுக்கு பதிலாக படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் திட்டமிட்டுள்ளது.

தற்போது 62 எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், 62 எலெக்ட்ரிக் வாகனங்களையும் மாடிஃபிகேஷன் செய்து தருவது தொடர்பாகவும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பயன்பாட்டிற்காக எந்த எலெக்ட்ரிக் வாகனங்களும் வாங்கப்படவுள்ளன? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விஷயத்தில், மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் மற்றும் தனியார் நிறுவனங்களும் கூட மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

விமான நிலையங்கள், அரசு துறை அதிகாரிகளுக்கு முன்பெல்லாம் வழக்கமான பெட்ரோல், டீசல் இன்ஜின் வாகனங்கள் மட்டுமே வாங்கப்படும். ஆனால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களும் அதிகளவில் வாங்கப்பட்டு வருகின்றன. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கூட சமீபத்தில் எலெக்ட்ரிக் கார்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துறையின் பயன்பாட்டிற்காக 25 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் சமீபத்தில் வழங்கப்பட்டன. இந்த எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தமிழக அரசும் தற்போது ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது.

ஆனால் தமிழகத்துடன் ஒப்பிடும்போது டெல்லி போன்ற மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் பல மடங்கு முன்னேறி சென்று விட்டன. டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை தீவிரமாக இருப்பதால், பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தீவிரமாக ஊக்குவிக்கப்படுகிறது. தனியார் எலெக்ட்ரிக் கார் மற்றும் எலெக்ட்ரிக் டூவீலர் போன்ற வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், பொது போக்குவரத்தில் நிறைய எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்வதற்கும் டெல்லி அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களும் அதிகளவில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

டெல்லியை பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது சிஎன்ஜி போன்ற மற்ற மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து கொண்டே வருகிறது. சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், பல்வேறு நிறுவனங்களும் தற்போது சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளன.

இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. இதுதவிர ஹூண்டாய், டாடா போன்ற நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் வரும் மாதங்களில் தங்களின் சிஎன்ஜி கார் லைன்-அப்பை புதிய தயாரிப்புகள் மூலம் மேலும் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








