ஏற்கனவே வளைச்சு வளைச்சு பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இனி இந்த வண்டிகள வச்சு கெத்தா ஓட்ட முடியாது போலிருக்கே!!
பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. அந்தவகையில், மக்கள் நெரிசல் அதிகம் மிகுந்த தலைநகர் டெல்லி மிக அதிகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் அங்கு பழைய வாகன விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அதிக மாசை ஏற்படுத்தும் பழைய வாகனங்களுக்கு எதிராக டெல்லி போக்குவரத்துக் காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. வாகனங்களை பறிமுதல் செய்தல், உச்சபட்ச அபராதத்தை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளையே டெல்லி அரசு பழைய வாகனங்களுக்கு எதிராக எடுத்து வருகின்றது.

இதுமட்டுமின்றி, மிகக் கடுமையாக மாசை ஏற்படுத்தும் வாகனங்களின் பதிவுகளையும் டெல்லி அரசு ரத்து செய்து வருகின்றது. அந்தவகையில், அக்டோபர் 17ம் வரை 50 லட்சத்திற்கும் அதிகமான பழைய வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், பெரும்பாலான வாகனங்கள் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழைய டீசல் எஞ்ஜின் கொண்டவை ஆகும்.

கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே இந்த அதிரடி நடவடிக்கையில் டெல்லி போக்குவரத்துக் காவல்துறை ஈடுபட்டு வருவது கவனித்தகுந்தது. இந்த நிலையிலேயே சுமார் இந்த நான்கு ஆண்டு கால நடவடிக்கையில் 53.38 லட்சம் பழைய வாகனங்களின் பதிவுகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெருமளவில் தலைநகர் டெல்லியில் பழைய வாகனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது.

மேலும், பழைய வாகனங்களை பயன்படுத்தி வருபவர்களும் தங்களின் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர். பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. 46 லட்சத்திற்கும் அதிகமான பெட்ரோல் மோட்டார் கொண்ட வாகனங்களே தடையை மீறி பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

அவை அனைத்தையும் தற்போது கூண்டோடு டெல்லி போக்குவரத்துக் காவல்துறை பயன்பாட்டில் இருந்து அகற்றியிருக்கின்றது. நகரத்தில் உள்ள வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், புதிய வாகனங்களை வாங்குவதை உத்வேகப்படுத்தும் வகையிலும் இந்த அதிரடி நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

புதிய வாகனங்கள் பலதரப்பட்ட மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. ஆகையால், தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் பல வாகனங்கள் மாசைக் குறைவாக வெளிப்படுத்தக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. இந்த மாதிரியான வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வருவதனால் வாகனங்களால் உருவாகும் காற்று மாசின் அளவு பல மடங்கு குறையும் சூழல் உருவாகும்.

அரசு மாசை குறைக்கும் பொருட்டு பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ளவில்லை. அது வெகுவிரைவில் புதிய மாசு உமிழ்வு விதியை அறிமுகம் செய்ய இருக்கின்றது. பாரத் ஸ்டேஜ் 6 (BS-VI)-இன் 2ஆம் கட்டத்தையே அரசு நடைமுறைக்ககுக் கொண்டு வர இருக்கின்றது. இந்த புதிய திட்டம் 2023 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கின்றது.

தற்போது இருப்பதைக் காட்டிலும் மிகக் குறைவான மாசை வெளிப்படுத்தக் கூடியதாக வாகனங்களை மாற்றுவதே இந்த பிஎஸ்6 2-வின் முக்கிய நோக்கமாகும். இந்த விதியையே அடுத்த ஆண்டு முதல் அரசு நடைமுறைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் பிஎஸ்6 2ஆம் கட்டத்திற்கு இணங்க வாகனங்க உற்பத்தி செய்ய தாயராகி வருகின்றனர்.

ஒரு சில நிறுவனங்கள் ஏற்கனவே இந்த பணியில் களமிறங்கிவிட்டன. அரசின் இந்த புதிய விதியால் வாகனங்களின் விலை உயரும் அபயாம் ஏற்பட்டுள்ளது. பிஎஸ்6 2ஆம் கட்டத்திற்காக புதிய உதிரி பாகத்தை வாகனங்களில் சேர்க்கப்பட வேண்டியிருப்பதால் இந்த விலையுயர்வு கட்டாயம் அரங்கேறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து ஒழித்துக் கட்டும் பணியில் டெல்லி அரசு களமிறங்கியிருக்கின்றது.

இதேபோல் நாட்டின் பிற பகுதிகளிலும் போக்குவரத்துக் காவல்துறையினர் பழைய வாகனங்களுக்கு எதிராக, குறிப்பாக, அதிக மாசை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். ஆகையால், போலீஸாரின் கடுமையான நடவடிக்கைக்கு முன்னரே நம்முடைய பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்து புதிய வாகனத்தை வாங்குவது அல்லது வேறு வழியில் அதை கொடுத்துவிட்டு (ஸ்கிராப் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு) லாபம் பார்த்துவிடுவது நல்லது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








