ஹோண்டா - சோனி இணைந்து உருவாக்க இருக்கும் இ-கார்... சம்பவம் செய்ய தயாராகும் இரு ஜாம்பவான் நிறுவனங்கள்!
வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹோண்டா (Honda)-வும், எலெக்ட்ரானிக்ஸ் உலகின் ஜாம்பவான் நிறுவனமான சோனி (Sony)-யும் மின் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக இணைந்திருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா (Honda) மற்றும் சோனி (Sony) ஆகிய இரு பிரபலமான நிறுவனங்களும் இணைந்து மின்சார காரை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானை தாயமாகக் கொண்டு இயங்கும் இவ்விரு நிறுவனங்களும் இதற்காக கூட்டணியைத் தொடங்கியுள்ளன.

இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே உலக சந்தைக்கான எலெக்ட்ரிக் கார்களை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க இருக்கின்றன. சோனி நிறுவனம் ஏற்கனவே மின் வாகன உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனி விஷன் 01 (இது ஓர் செடான் ரக மின்சார காராகும்) மற்றும் சோனி விஷன் 02 (இது எஸ்யூவி ரக மின்சார காராகும்) ஆகிய இரு விதமான எலெக்ட்ரிக் கார் உற்பத்தியிலேயே சோனி நிறுவனம் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே சோனி நிறுவனமும், ஹோண்டாவும் இணைந்து எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணியின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த மின்சார கார் வரும் 2025ம் ஆண்டிற்குள் வெளியீட்டைப் பெற்றுவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் இன்னும் மூன்று ஆண்டுகளில் முன்னணி நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் காரை சாலைகளில் பார்த்துவிட முடியும் என நம்பப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இரு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார் உருவாக்க பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், இந்த ஆண்டின் பிற் பகுதிக்கு உள்ளாகவே எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டாவின் மின்சார கார் தயாரிப்பு ஆலையில் வைத்தே மின்சார கார் உருவாக்கப்பட இருக்கின்றது. இதுபோன்ற முக்கியமான செயல்பாடுகளுக்காகவே இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இதன் வாயிலாக வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பம் பகிர்மானம் போன்ற முக்கிய செயல்களை இரு நிறுவனங்களும் இணைந்தே செய்ய இருக்கின்றன.

இந்த காருக்கு உலக மின் வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஹோண்டாவின் தயாரிப்புகளுக்கு உலக மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் கிடைத்து வருகின்றது. இதேபோல், சோனி தயாரிப்புக்கும் மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை நிலவுகின்றது.

இந்த நிலையானது, எதிர்காலத்தில் இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வரும் மின்சார காருக்கு மிக சிறப்பான வரவேற்பை வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் சோனி மற்றும் ஹோண்டாவின் புதிய கூட்டணி எப்படி இருக்கும் என்பதை வரும் ஆண்டுகளே நமக்கு காண்பிக்க இருக்கின்றன.

ஆகையால், இந்நிறுவனங்கள் உருவாக்க இருக்கும் மின்சார கார் மட்டுமல்ல, இரு நிறுவனங்களின் கூட்டணி எப்படி செயல்படஇருக்கின்றது என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் உலகின் ஜாம்பவானான சோனி, மின் வாகன உற்பத்தி மட்டுமின்றி புதிய இ-மொபிலிட்டி சேவையையும் தொடங்குவதற்காக திட்டமிட்டிருக்கின்றது. இது வர்த்தக ரீதியாக பயன்படும் வகையில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








