1000 கிமீ ரேஞ்ஜ், 8 இருக்கைகள், அனைத்து வீல் இயக்கம்! அசத்தல் அம்சங்கள் கொண்ட இ-கார்... இப்பவே வாங்க தூண்டுதே!
ஒற்றை சார்ஜில் 1000 கிமீ பயணம், 8 பேர் அமரக் கூடிய வகையில் இருக்கை அமைப்பு மற்றும் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் ஓர் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியாவில் டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. வாகன உலகம் சார்ந்து வெளி வரும் தகவல்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. உலக நாடுகளிலும் இதுபோன்ற ஓர் நிலையே நிலவுவதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும், எந்த பக்கம் திரும்பினாலும் மின் வாகனங்களின் அறிமுகம் பற்றிய தகவலே அதிகளவில் உலாவிக் கொண்டிருக்கின்றன. இப்பதிவிலும் நாம் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். ஃப்ரெஸ்கோ மோட்டார்ஸ் (Fresco Motors) எனும் வெளிநாட்டு ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம், ஓர் சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கான்செப்ட் மாடலாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சிறப்பம்சங்கள் பலரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக காரின் சீட் கெபாசிட்டி நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் இருக்கின்றது. ஒரே நேரத்தில் 8 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் காரிலும் இத்தகைய அதிக எண்ணிக்கை இருக்கை அமைப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது மட்டுமில்லைங்க ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக ஆயிரம் கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இது மாதிரியான சூப்பர் திறன்களுடனேயே ஃப்ரெஸ்கோ மோட்டார்ஸ் புதுமுக எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கின்றது. இந்த சிறப்பம்சங்களை எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அதுகுறித்த தகவலை இங்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எக்ஸ்எல் (XL) எனும் பெயரிலேயே அந்த அதிக சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மெல்லிய செடான் உருவத்தில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மினி வேன், எம்பிவி தோற்றத்திலும் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் கார் காட்சியளிக்கின்றது.

இந்த காரின் அதிக இட வசதியை குறிக்கும் வகையிலேயே எக்ஸ்எல் எனும் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையே அது குறிக்கின்றது. ஆனால், கார் குறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் படமோ, அது எட்டு பேர் அமர்ந்து செல்ல ஏதுவான வாகனம்தானா என சந்தேகிக்கும் வகையில் இருக்கின்றது.

அதேநேரத்தில் காருக்குள் வழங்கப்பட்டிருக்கும் இருக்கைகளினால் இது சாத்தியம் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஃப்ரெஸ்கோ நிறுவனம் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் காரில் நான்கு மின் மோட்டார்களை பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. இது அனைத்து வீல்களையும் இயங்கச் செய்வதற்கு உதவும்.

இத்துடன், டூ-வே சார்ஜிங் போர்ட் மற்றும் ஆயிரம் கிமீ ரேஞ்ஜ் வழங்கும் திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளிட்டவை எக்ஸ்எல் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று பன்முக சிறப்பு வசதிகளை தாங்கியவாறு எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு வருவதனால் அது பல மடங்கு அதிக விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஃப்ரெஸ்கோ எக்ஸ்எல் ஒரு லட்சம் யூரோக்கள் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 86 லட்ச ரூபாய் ஆகும். எலெக்ட்ரிக் காரை நிறுவனத்தின் சி.இ.ஓ.,-வும், சேர்மேனுமான எஸ்பென் க்வல்விக் என்பவரே டிசைன் செய்திருக்கின்றார்.

இவரின் மிக சிறப்பான வடிவமைப்பு திறனை வெளிக்காட்டும் வகையில் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் கார் அமைந்துள்ளது. புதுமையான தோற்றத்தில் அது காட்சியளிக்கின்றது. ஃப்ரெஸ்கோ நிறுவனம் இதுபோன்று சூப்பர் திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்குவது இது முதல் முறையல்ல.

நிறுவனம் 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 2019ம் ஆண்டில் ரிவெரீ (Reverie) எனும் கான்செப்ட் மாடலை அது வெளியீடு செய்தது. இந்த எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், இரண்டே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனை கொண்டிருக்கின்றது.
ஆனால், இந்த காரின் உற்பத்தியை இன்று வரை தொடங்கவில்லை. அதேநேரத்தில், இதன் வருகையை மின் வாகன ஆர்வலர் பலர் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே மற்றுமொரு அதிக சிறப்பு வசதிகள் கொண்ட எக்ஸ்எல் எலெக்ட்ரிக் காரையும் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. ரிவெரீ எலெக்ட்ரிக் காரை போலவே எக்ஸ்எல் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கும் என்கிற தகவலையும் ஃப்ரெஸ்கோ வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








