முந்தையதை விட அதிக பயண தூரம், கூடுதல் அம்சங்கள்! விரைவில் இந்தியா வருகிறது 2022 எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்
மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை அலங்கரித்து வரும் மின்சார கார் மாடல்களில் எம்ஜி (MG) நிறுவனத்தின் இசட்எஸ் இவி (ZS EV)-யும் ஒன்று. இதற்கு தற்போது இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

இந்த கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே மிக விரைவில் எம்ஜி நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் ஏற்கனவே செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில நாட்களில் இதன் வருகையை எதிர்பார்க்கலாம் என நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட இசட்எஸ் இவி கார் ஒரு முழுமையான சார்ஜில் எத்தனை கிலேமீட்டர் ரேஞ்ஜ் வழங்கும், புதுப்பித்தலின் அடிப்படையில் என்ன புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலை எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டிசைன்
எம்ஜி இசட்எஸ் இவி காரின் டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, மறு வடிவமைப்பு செய்யப்பட்ட புதிய பம்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் முகப்பு பகுதியில் மிக முக்கியமான மாற்றமாக உடல் நிறத்திற்கு ஏற்ற க்ரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக முகப்பு பகுதியை மூடும் வகையில் உள்ளது.

முன்னதாக க்ரில் பகுதியிலேயே காரை சார்ஜ் செய்வதற்கான போர்ட் வழங்கப்பட்டிருந்தது. எம்ஜி லோகோவின் பின் பகுதியிலேயே சார்ஜிங் இடம் பெற்றிருக்கும். புதுப்பித்தலின் அடிப்படையில் முழுமையாக மூடப்பட்ட க்ரில் இம்முறை பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதன் இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. எம்ஜி லோகோவிற்கு அருகிலேயே அது இடம் பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி 17 இன்ச் அலாய் வீல்களும் இக்காரின் கவர்ச்சியான தோற்றத்தை அலங்கரிக்கும் வகையில் இடம் பெற இருக்கின்றது. இத்துடன், எல்இடி ஹெட்லேம்ப், இன்டக்ரேடட் எல்இடி டிஆர்எல்கள், எல்இடி வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்பட்ட இசட்எஸ் இவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

உட்பக்கமும், சிறப்பம்சங்களும்:
வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், 10.1 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் திரை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஏற்கனவே வழங்கப்பட்ட அம்சங்களான ரோடரி டயர் கியர் க்னாப், டிரைவிங் மோட்கள் மற்றும் ரீஜெனரேட்டிவ் செய்யக் கூடிய சுவிட்சுகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜிங், ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் அசிஸ்டண்ட், தானியங்கி பிரேக்கிங் வசதி உடன் கூடிய அடாஸ் , தானியங்கி ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் இக்காரில் புதிதாக எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், கார் இணைப்பு தொழில்நுட்பம், ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட்/டெசன்ட் கன்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக்:
எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்தவரை எந்த மாற்றமும் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கன்றன. தற்போது விற்பனையில் இருக்கும் மின் மோட்டார் பிஎம்எஸ்எம் (Permanent Magnet Synchronous Motor) தொழில்நுட்பம் கொண்டது. இது அதிகபட்சமாக 141 எச்பி பவர் மற்றும் 353 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

அதேநேரத்தில், அதிக ரேஞ்ஜ் வழங்கும் வகையில் இதில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. 51 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேட்டரி பேக் ஒற்றை முழுமையான சார்ஜ் திறனில் 450 கிமீ வரை பயணிக்கும். தற்போது விற்பனையில் இருக்கும் பேட்டரி பேக்கோ ஒரு முழுமையான சார்ஜில் 419 கிமீ வரை மட்டுமே செல்லும்.

மேலே பார்த்தது போன்ற சிறப்பு வசதிகளுடனேயே 2022 எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு வர இருக்கின்றது. இது ரூ. 22 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கார் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








