தலை கீழா நின்னாலும் வாங்க முடியாது! மார்ச் 7ம் தேதிதான் விற்பனைக்கு வந்துச்சு! அடேங்கப்பா இப்படி ஒரு வரவேற்பா!
2022ம் ஆண்டுக்கான எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) மின்சார கார் ஒட்டுமொத்தமாக விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

எம்ஜி (MG) நிறுவனம் கடந்த 7ம் தேதி அன்று அதன் புதுப்பிக்கப்பட்ட இசட்எஸ் இவி (ZS EV) மின்சார காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இக்கார் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

இதற்கு எம்ஜி இசட்எஸ் இவி காரை இந்தியர்கள் வாங்கி குவித்ததே காரணமாக அமைந்துள்ளது. அது எப்படி!, மக்கள் அதிகளவில் வாங்கி குவித்ததால ஓர் கார் விற்பனைக்குக் கிடைக்காமல் போகுமானு கேக்குறீங்களா?., இதற்கான விளக்கம் இதோ, எம்ஜி நிறுவனம் நடப்பாண்டில் இந்தியாவில் விற்பனை செய்வதற்கென குறிப்பிட்ட அளவு யூனிட்டுகளை மட்டுமே ஒதுக்கியது.

அவை அனைத்தையுமே இந்தியர்கள் தற்போது வாங்கிவிட்ட காரணத்தினாலயே தற்காலிக விற்பனைத் தடை புதிய இசட்எஸ் இவி மின்சார காருக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதாவது, 2022 ஆம் ஆண்டிற்கான அனைத்து யூனிட் எம்ஜி இசட்எஸ் இவி காரும் புக் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால், இக்காருக்கான புக்கிங் பணிகளை எம்ஜி நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றது.

எதிர்பார்த்திராத அளவில் வரவேற்புக் கிடைத்திருப்பதனால் இந்த நிலை உருவாகியிருக்கின்றது. அதேநேரத்தில், தற்போது பேஸ்லிஃப்ட் இசட்எஸ் இவி மின்சார காருக்கு டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுவதனால், அக்காருக்கு மீண்டும் புக்கிங் பணிகள் நடப்பாண்டிலேயே தொடங்கப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.

பன்முக புதுப்பித்தல் அம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் கார் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. குறிப்பாக, பெரிய பேட்டரி பேக்குடன் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. பழைய வெர்ஷனில் 44 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், புதிய வெர்ஷனில் 50.3 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அதிக ரேஞ்ஜ் திறன் வழங்கக் கூடியதாக காட்சியளிக்கின்றது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 461 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், பழைய வெர்ஷனோ ஒற்றை முழு சார்ஜில் 419 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கும். இந்த சிறப்பு வசதி மட்டுமில்லைங்க, உருவ தோற்றத்திலும் இக்கார் கணிசமான மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

முழுமையாக மூடப்பட்ட அமைப்புடைய கிரில், எந்த மின்சார காரிலும் இடம் பெற்றிராத வகையிலான பெரிய அளவில் பனோரமிக் சன்ரூஃப், ஐந்து ஸ்போக்குகள் கொண்ட 17 இன்ச் அலாய் வீல்கள், எம்ஜி எம்பளத்திற்கு அருகில் சார்ஜிங் போர்ட் (முன்னதாக லோகோவிற்கு பின் பக்கத்திலேயே இந்த வசதி இடம் பெற்றிருந்தது), குரோம் இன்செர்ட்டுகள் உள்ளிட்டவை ஃபேஸ்லிஃப்ட் எம்ஜி இசட்எஸ் இவி காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுமட்டுமின்றி பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், அடாஸ் தொழில்நுட்பம், 10 இன்ச் அளவுள்ள தொடுதிரை சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் சிஸ்டம், பின்பக்க இருக்கையாளர்களுக்கு ஏசி வெண்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் 2022 இசட்எஸ் இவி காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், ஆறு ஏர் பேக்குகள், லேன் சேஞ்ஜ் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், ஹில் டெசண்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

எம்ஜி நிறுவனம் இசட்எஸ் இவி மின்சார காரின் உயர் நிலை வேரியண்டான எக்ஸ்க்ளூசீவ்-ஐ தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 25 லட்சத்து 88 ஆயிரம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இதைவிட குறைந்த விலை வேரியண்டாக எக்ஸைட் காட்சியளிக்கின்றது. ரூ. 21,99,800 இதன் விலையாகும்.

ஆனால், இந்த வேரியண்ட் வரும் ஜூலை மாதத்திலிருந்தே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆகையால், ஃபேஸ்லிஃப்ட் எம்ஜி இசட்எஸ் இவி இரு விதமான வேரியண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள எக்ஸ்க்ளூசீவ் வேரியண்டின் டெலிவரி பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








