புதிய பெயரில் களம்காண இருக்கிறது டாடா நெக்ஸான் இவி... என்ன பேருல'ங்க வர இருக்குது?.. இதோ முக்கிய தகவல்கள்!
டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) புதிய பெயரில் சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த நெக்ஸான் இவி மின்சார காரை அதிக திறன் வாய்ந்த காராக அப்கிரேட் செய்து வருவதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இப்புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் இவி (Nexon EV) மிக விரைவில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது.

இந்த நிலையில், புதிய நெக்ஸான் இவிகுறித்த அதிகாரப்பூர்வ டீசர் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. டீசர் படத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் இவி புதிய பெயரில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அது நெக்ஸான் இவி மேக்ஸ் (NEXON EV MAX) எனும் பெயரில் வர உள்ளது.

இதனையே தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் வரும் மே 11ம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சில டாடா கார் விற்பனையாளர்கள் இந்த மின்சார காருக்கான புக்கிங் பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் பன்மடங்கு சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாக புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் உருவாகி வருகின்றது. அதாவது, அதிக ரேஞ்ஜை தரக் கூடிய பெரிய பேட்டரி பேக் வசதியுடன் அது விற்பனைக்கு வர உள்ளது. இன்னும் மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யில் 30.2kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதைவிட பெரிய பேட்டரி பேக்காக 40kWh பேட்டரி பேக் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ரேஞ்ஜ் திறன் 400 கிமீட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால்தான் ஒட்டுமொத்த மின்சார வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் அதிக ரேஞ்ஜ் தரக்கூடிய எலெக்ட்ரிக் காராக மட்டுமே இருக்காது. அது அதிக திறன் வெளிப்பாட்டை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 136 பிஎஸ் திறன் வரை வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கணிசமான காஸ்மெட்டிக் அப்டேட்டுகளும் புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி 100 கிலோ கூடுதல் எடையுடன் இக்கார் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக டிஸ்க் பிரேக்குகள் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் இணைப்பு தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், நடுதர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் இடம் பெற இருக்கின்றன.

தற்போது விற்பனையில் உள்ள நெக்ஸான் இவி காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆகையால், இந்திய மின்சார கார் விற்பனையில் இக்கார் டாப் இடத்தில் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக நிறுவனம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 2,322 யூனிட் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் ச செய்திருக்கின்றது. 2021 ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் இது 300 சதவீதம் அதிகம் விற்பனை வளர்ச்சியாகும்.

இத்தகைய மிக சிறப்பான விற்பனையை சந்தித்துக் கொண்டிருக்கின்றன இந்த தருணத்திலேயே நிறுவனமே புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரை சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதுமட்டுமின்றி டிகோர் இவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன், புதுமுக அல்ட்ராஸ் இவி மற்றும் சியாரா இவி உள்ளிட்ட மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications