டயர் வெடிப்பிற்கு இத்தனை காரணங்கள் இருக்கா!! தவிர்க்க 9 எளிய வழிமுறைகள்
ஒரு வாகனத்தை சாலையுடன் தொடர்புப்படுத்துவது அதன் டயர்கள் தான். ஒரு காரில் என்ஜினிற்கு இணையாக உழைக்கக்கூடியவை டயர்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால் என்ஜின் அணைத்திருக்கும் நேரத்தில் கூட டயர்கள் காரை தாங்கி நிற்கும். ஆட்டோமொபைல் வாகனங்கள் முதல்முறையாக உருவாக ஆரம்பித்த காலத்தில் இருந்து அதிக பிடிமானத்தையும், ஆயுட்காலத்தையும் மற்றும் நம்பகத்தன்மையையும் வழங்கும் விதத்தில் டயர்கள் உருவாக்கத்தில் பல்வேறு தொழிற்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

டயர்கள் தானே என்று நம்மால் எளிதாக எடுத்து கொள்ள முடியாது. ஏனெனில் நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் செல்லும்போது கார் ஒன்றில் டயர் வெடிக்க நேர்ந்தால், அது அதன் ஓட்டுனரை முற்றிலுமாக கண்ட்ரோல் இழக்க செய்து நம்மால் எதிர்பார்க்கவே முடியாத விபத்திற்கு அடுத்த சில வினாடிகளில் கொண்டு சென்றுவிடும். அத்தகைய சூழலை தவிர்க்க உதவும் 9 வழிமுறைகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

அவ்வப்போது டயர் அழுத்தத்தை அளவிடல்
நடக்கக்கூடாது என எவரொருவரும் விரும்பக்கூடிய மேற்கூறப்பட்ட சம்பவத்தை தவிர்க்க முதன்மையான வழி, டயரில் காற்றழுத்தத்தை அவ்வப்போது கண்காணித்து கொண்டே இருப்பதுதான். இதற்காகவே தற்போதைய மாடர்ன் கார்களில் டயர்களின் காற்றழுத்தத்தை அளவிடும் அமைப்பு (TPMS)-ஐ நிலையான தேர்வாக தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க துவங்கிவிட்டன.

டயரின் வெடிப்புகளை அடையாளம் காணுதல்
குறிப்பாக, நெடுத்தூர நெடுஞ்சாலை பயணங்களுக்கு முன்பாக டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது போல் டயரில் உள்ள வெடிப்புகளையும் சரிப்பார்த்து கொள்வது நல்லது. ஏதேனும் குறைகளை டயர்களில் காண நேர்ந்தால், எந்தவொரு சமரமும் இன்றி அவற்றை மாற்றி கொண்டு பயணத்தை மேற்கொள்வது நல்லது.

போதிய ஓய்வு நேரம்
எந்த வாகனத்தில் பயணித்தாலும் சரி, நெடுந்தூர பயணங்களின் போது போதிய ஓய்வு கட்டாயம் அவசியமாகும். விரைவு பேருந்துகளில் கூட ஓட்டுனர் ஏதேனும் ஒரு பகுதியில் சற்று நேரம் பேருந்தை நிறுத்துவார். அதேபோன்று கார் ஓட்டுனர்களும் நெடுஞ்சாலையின் ஓரமாக காரை நிறுத்தி என்ஜினிற்கும், டயர்களுக்கும் சற்று ஓய்வை வழங்க வேண்டும். 2 மணிநேர பயணத்திற்கு ஒரு முறையாவது ஓய்வை எடுக்க வேண்டும் என்கின்றனர் கார் ஆர்வலர்கள்.

அதிவேகம் வேண்டாம்
அதிவேகம் எப்போதுமே விபத்திற்குதான் வழிவகுக்கும். இது டயர்களின் விஷயத்திலும்தான். அதிக வேகத்தில் செல்லும்போது சாலையுடனான உராய்வு அதிகரித்து டயர்கள் வெப்பமடைகின்றன. ஆதலால் தொடர்ந்து அதிவேகத்தில் பயணிக்கும்போது இந்த வெப்பம் அதிகரித்து டயர்கள் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கோடைக்காலங்களில்.

சமமற்ற டயர்களை தவிர்த்தல்
உள் இழுக்கப்பட்ட/மேல்நோக்கி உப்பிய டயர்கள் தான் அதிகளவில் வெடிப்பிற்கு காரணமாக எந்தவொரு மெக்கானிக்கும் கூறுவர். இத்தகைய டயர்களில் பக்கவாட்டிற்கு அதிகளவில் அழுத்தம் உருவாகிறது. பொதுவாக, இவ்வாறான குறைகள் டயர்களில் சரியான காற்றழுத்ததை பராமரிக்காததால் ஏற்படுகிறது.

பழுதான டயர்களை உடனடியாக மாற்றுதல்
பழுதான டயர்களை யாரும் தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டுச்செல்ல விரும்பமாட்டர். இருப்பினும் பழுதான டயரில் சிறு சிறு பயணங்களை மேற்கொள்ள தயங்கமாட்டர். ஏனெனில் சிறுச்சிறு பயணங்களின்போது கூட டயர்கள் வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதை பலர் மறந்துவிடுகின்றனர்.

மலிவான டயர்கள் வேண்டாம்
டயர்கள் தான் எந்தவொரு வாகனத்திலும் முக்கியமான மற்றும் சாலையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பாகம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம். ஆதலால் இதன் விஷயத்தில் காசை பார்க்க வேண்டும். ஏனெனில் மலிவான டயர்கள் தரம் குறைந்தவைகளாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வாறான டயர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சோதனையில் தேராதவையாக கூட இருக்கலாம்.

பிரபலமற்ற பிராண்ட் வேண்டாம்
மேற்கூறப்பட்ட அதே காரணம் தான். மலிவான டயர்கள் பெரும்பாலும் பிரபலமற்ற பிராண்டில் இருந்தே விற்பனைக்கு வரும். குறிப்பாக சீனாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து. இவை அழுத்தத்தை சரியாக கையாளததால் வெடிப்பிற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆதலால் முன்னணி பிராண்டில், அரசாங்க தர சான்றை பெற்ற டயர்களாக பார்த்து தேர்வு செய்யுங்கள்.

அதிக சுமையை தவிர்க்க
காரில் அதிக சுமையை ஏற்றுவது நேரடியாக டயர்களின் மீது சுமையை ஏற்றுவது போன்றே ஆகும். சுமையை ஏற்றுவதினால் சஸ்பென்ஷனுக்கு இணையாக, டயர்கள் அழுத்தத்தை சந்திக்கின்றன. இதனால் அதிக சுமையின்போதே டயர்கள் வெடிப்பிற்கு நிறைய வாய்ப்புள்ளது. இதனால் டயர்களை கருத்தில் கொண்டு சுமையை அளவிட்டு ஏற்றி செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








