பெட்ரோல், டீசல் கார்களை சிஎன்ஜி வாகனங்களாக மாற்றி கொள்ள அனுமதி... சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!
பிஎஸ் 6 தர பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி வாகனங்களாக மாற்றிக் கொள்ள அதிகாரப்பூர்வ அனுமதியை மத்திய அரசாங்கம் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதைக் குறைக்கும் பொருட்டு மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, பழைய வாகனங்களின் பயன்பாட்டை ஒழிக்கும் விதமான நடவடிக்கையில் அரசு மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களின் பயன்பாட்டிற்கும், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டிற்கும் அரசு தடை விதித்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் டீசல் வாகன பயன்பாட்டைக் குறைத்து மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஊக்குவிப்பின் அடிப்படையில் மின் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம், வரி சலுகை உள்ளிட்டவற்றை அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, மற்றொரு பக்கம் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி ரக வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாகவே அரசு தற்போது ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிஎஸ்6 தர பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி-யில் ஓடும் வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது.

அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பாரத் ஸ்டேஜ் - VI பெட்ரோல் வாகனங்களை சிஎன்ஜி மற்றும் எல்பிஜி-இல் இயங்கும் வாகனமாகவும், 3.5 டன் ரக பிஎஸ் 6 டீசல் மோட்டார் வாகனங்களை சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்ககளாக மாற்றிக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களைப் போல் சிஎன்ஜி மற்றும் எல்பிஜியில் இயங்கும் வாகனங்களும் அதிகளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

சமீபத்தில்கூட மாருதி சுஸுகி அதன் புகழ்பெற்ற ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் மாடலில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இத்துடன், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஆல்டோ கே10 காரில் சிஎன்ஜி வெர்ஷனை நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர இன்னும் சில மாடல்களையும் அது சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகின்றது.

இதேபோல், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் சிஎன்ஜி தேர்வில் அதன் பிரபலமான வாகன மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே அரசு ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிஎஸ்6 தர பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களாக அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதே, பெட்ரோல் -டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை மேலும் பூஸ்ட் செய்யும் வகையிலேயே அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது.

முன்னதாக பிஎஸ்4 தர வாகனங்கள் மட்டுமே சிஎன்ஜி மற்றும் எஸ்பிஜி வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையிலேயே பிஎஸ்6 தர வாகனங்களையும் சிஎன்ஜி, எல்பிஜி வாகனங்களாக மாற்றிக்கலாம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன உரிமையாளர்கள் நல்ல வரேவற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே நடப்பாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டநிலையில் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கின்றது. வாகன உலகத்தைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த திட்டம் முன்மொழியப்பட்டிருக்கின்றது. அரசின் இந்த நடவடிக்கை, பெட்ரோல்- டீசல் வாகனங்களைக் காட்டிலும் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்கள் குறைவான மாசை வெளியேற்றும் என்பதனாலயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக ஓர் பெட்ரோலில் இயங்கும் வாகனத்தைக் காட்டிலும் சிஎன்ஜியால் இயங்கும் வாகனம் 5 முதல் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை குறைவான கார்பன்-டை ஆக்ஸைடை வெளியேற்றும். இதுமட்டுமின்றி, தற்போதைய பெட்ரோல்- டீசலைக் காட்டிலும் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி சற்றுக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

மேலும், அவற்றின் மைலேஜும் அதிகம். வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்கள் 15 முதல் 25 கிமீ வரை ஒரு லிட்டருக்கு மைலேஜ் தரும் எனில் சிஎன்ஜி வாகனங்கள் 28க்கும் அதிகமான கிமீ மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் மக்கள் மத்தியில் இந்த வாகனங்கள் மிக வேகமாக பிரபலமைடந்துக் கொண்டிருக்கின்றன.

இதுதவிர, மாசையும் அவைக் குறைவாக வெளியற்றும் என்ற காரணத்தினாலும் மக்கள் அவற்றிற்கு பேராதரவை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையிலேயே தங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை எந்த தடையும் இன்றி சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களாக மாற்றிக் கொள்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








