10 பாயிண்டுகளில் 2022 மாருதி பலேனோ கார் பற்றி முழு விபரங்கள்! தெளிவா தெரிஞ்சுக்கலாம் வாங்க!
பத்து பாயிண்டுகள் வாயிலாக 2022 மாருதி பலேனோ கார் பற்றிய முழு விபரத்தையும் வழங்கியுள்ளோம். வாருங்கள் அவைகுறித்த முக்கிய தகவல்களைக் கீழே காணலாம்.

மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ காரை மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த மாதமே இதன் அறிமுகம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இக்காருக்கான புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. வெளி மற்றும் உட்புற தோற்றத்தில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் இப்புதிய பலேனோ காட்சியளிக்கின்றது.

இதுமட்டுமின்றி கூடுதலாக சில சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களும் பலேனோவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படி என்ன மாதிரியான மாற்றங்கள், என்னென்ன சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். பத்து முக்கிய பாயிண்டுகளின் வாயிலாகவே அதுகுறித்த தகவலைப் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அறிமுக தேதி:
மாருதி நிறுவனம் புதிய பலேனோ காரை வரும் 23ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. நெக்ஸா விற்பனையாளர்கள் வாயிலாகவும் புதுப்பிக்கப்பட்ட பலேனோ கார்களுக்கான புக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றது.

வெளிப்புற தோற்றம்:
மாருதி பலேனோவின் வெளி மற்றும் உட்புறத்தில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன் பக்கத்திற்கு புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் முன்புறம் முன்பைக் காட்டிலும் சற்று தாழ்வானதாக காட்சியளிக்கின்றது. இத்துடன், காரின் முன் பக்கத்திற்கு கூடுதல் அலங்காரம் சேர்க்கும் வகையில் புதிய அமைப்புக் கொண்ட க்ரில், கவர்ச்சியான பம்பர், பனி மின் விளக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் பம்பர் சற்றே கட்டுமஸ்தானதாக காட்சியளிக்கின்றது. இந்த தோற்றத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் குரோம் பட்டை ஒன்று பம்பர் மற்றும் க்ரில்லிற்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, பம்பரின் இரு முனைகளிலும் பனி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஹெட்லைட்டுடன் பகல் நேர எல்இடி மின் விளக்குகள் இணைந்து வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல் பின் பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வடிவிலான டெயில்கேட், சி வடிவ எல்இடி லைட் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுடன், இரு ஸ்டாப் லைட்டுகளையும் டச் செய்துக் கொண்டிருக்கும் வகையில் ஓர் குரோம் பட்டை நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

எத்தனை ட்ரிம்களில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்?
புதிய பலேனோ நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. சிக்மா (Sigma), டெல்டா (Delta), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்ஃபா (Alpha) ஆகிய ட்ரிம்களிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ஆரம்ப நிலை மாடலை தவிர மற்ற அனைத்திலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

நிறங்கள்:
புதிய மாருதி பலேனோ கார் ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். பியர்ல் ஆர்க்டிக் ஒயிட், ஸ்பிளெண்டிட் சில்வர், கிரேண்டியர் கிரே, செலஸ்டியல் ப்ளூ, ஒபுலெண்ட் சிவப்பு மற்றும் லக்ஸே பீஜ் ஆகிய நிற தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது.

சிறப்பம்சங்கள்:
மாருதி கார்களில் இதுவரை அறிமுகம் செய்யப்படாத சில சிறப்பு அம்சங்கள் புதிய பலேனோ காரில் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெட்ஸ்-அப் திரை, 9 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது) நேவிகேஷன், அலெக்ஸா வாய்ஸ் கமெண்ட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜிங், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்:
புதிய பலேனோ காரை இதுவரை இல்லாத அளவில் பாதுகாப்பானதாகவும், உறுதியானதாகவும் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்கள் மிக அதிகளவில் வழங்கப்பட உள்ளன. 6 ஏர் பேக்குகள், இஎஸ்பி, (Electronic Stability Program), இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் சிறுவர்கள் இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றால் இப்பிரீமியம் தர ஹேட்ச்பேக் அதிக பாதுகாப்பான காராக மாறியிருக்கின்றது. குறிப்பாக, அதிக உறுதியான ஸ்டீல்கள் இக்காரின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது பலேனோ கார் பிரியர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏஎம்டி கியர்பாக்ஸ்:
புதிய மற்றும் பெரிய மெக்கானிக்கல் அப்கிரேடாக 2022 பலினோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி வழங்கப்பட இருக்கின்றது. சிவிடி கியர்பாக்ஸ் வசதி நீக்கப்பட்டிருக்கின்றது. குறைந்த விலையில் இக்காரை வழங்க வேண்டும் என்பதற்காக ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

மைலேஜ்:
புதிய பலினோ 22.35 கிமீ வரை ஒரு லிட்டருக்கு மைலேஜ் கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஏஎம்டி தேர்வு சற்று அதிகமாக 22.94 கிமீ வரை மைலேஜ் வழங்குமாம். முந்தைய மாடல் 23.87 கிமீ வரையில் மைலேஜ் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கிடையாது:
புதிய மாடலில் 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் பெட்ரோல் எஞ்ஜின் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜினில் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் ஐடில் எஞ்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதியும் வழங்கப்படும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழக்கமான அம்சமாக வழங்கப்படும். அதேநேரத்தில் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷனலாக வழங்கப்பட இருக்கின்றது.

விலை எதிர்பார்ப்பு:
புதிய பலேனோ கார் அதிக பாதுகாப்பானதாகவும், அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. ஆகையால், சற்றே அதிக விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 6.5 லட்சம் தொடங்கி ரூ. 10.5 லட்சம் வரையிலான விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் பலேனோ ரூ. 6.14 லட்சம் தொடங்கி ரூ. 9.66 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications