காரில் WiFi இன்ஸ்டால் செய்வது எப்படி?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப சுலபம்!
காரில் வைஃபை வசதியை ஏற்படுத்துவது எப்படி என்கிற தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த மாடர்ன் உலகம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இணையத்தை மாற்றியிருக்கின்றது. உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகிய மூன்று மட்டுமே அத்தியாவசிய தேவைகளாக இருந்தநிலையில் இவற்றுடன் இன்டர்நெட் மற்றும் செல்போன்களும் இணைந்துள்ளன. கடந்த காலங்களில் செல்போனுக்காக கிட்னியை விற்ற செய்தியைக் கூட நாம் கேள்விப் பட்டிருப்போம்.

அந்தளவிற்கு இன்றைய கால இளைஞர்கள் செல்போனை மிக முக்கியமான தேவையாகக் கருதுகின்றனர். செல்போனை மட்டுமல்ல இணைய சேவையையும் முக்கிய தேவையாக கருதுகின்றனர். இவ்வாறு நம் மக்கள் நினைப்பதனால்தான் இணைய சேவையின் கட்டணத்தை செல்போன் தொலை தொடர்பு நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், நாம் மாதந்தோறும் ரீசார்ஜை தவறாமல் செய்து வருகின்றோம்.

இந்த அளவிற்கு இணைய சேவை மிக முக்கியமானதாகக் கருதப்படுவதன் காரணத்தினாலேயே உற்பத்தியாளர்கள்கூட தங்களுடைய புதுமுக (நவீன கால) கார்களை WiFi (வைஃபை) வசதிக் கொண்ட விற்பனைக்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால், இந்த அம்சம் விலையுயர்ந்த உயர்நிலை கார்களில் மட்டுமே தற்போது வழங்கப்படுகின்றது. மலிவு விலை கார்களில் இந்த அம்சம் இடம்பெறாத சூழலே தற்போது வரை தென்படுகின்றது.

இந்த நிலை பட்ஜெட் கார் விரும்பிகள் மத்தியில் சற்றே சோகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு வேதனையில் உள்ள கார் உரிமையாளர்களுக்கு உதவும் விதமாக, நாமாகவே காரில் வைஃபை வசதியை உருவாக்குவது எப்படி என்கிற டிப்ஸை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

காருக்குள் நிரந்தர ஒயர்லெஸ் வைஃபை வசதியை ஏற்படுத்த பல வழிகள் உள்ளன. செல்போனை ஹாட்ஸ்பாட் கருவியாக மாற்றிக் கொள்ளலாம். இல்லையெனில் தனியாக வைஃபை டாங்கிளை வாங்கி காரில் நிரந்த இணைய வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, ஒபிடி-ll சாதனத்தின் வாயிலாகவும் காருக்குள் நிரந்தர இணையை உருவாக்க முடியும். இதனை எவ்வாறு செய்வது? இதோ அதுகுறித்த தகவல்களே கீழே வழங்கப்பட்டுள்ளன.

மொபைல் ஹாட்ஸ்பாட்:
நம்மில் பலர் இப்போது ஒரு மொபைலில் ரீசார்ஜ் செய்துவிட்டு அதில் கிடைக்கும் நெட்டையே வீட்டின் டிவி, லேப்டாப் மற்றும் பிற செல்போன் அல்லது டேப் ஆகியவற்றை இணைந்து பயன்படுத்துகின்றனர். இதேபோல், ரன்னிங்கில் இருக்கும்போது இதே செல்போன்களை ஹாட்ஸ்பாட்டாக மாற்றி அதன் வாயிலாக ஒயர்லெஸ் வைஃபை வசதியைப் பெற்று கொள்ள முடியும். இதேபோல்தான் டாங்கிளும் செயல்படும்.

இந்த வழியில் காருக்குள் வைஃபையை பயன்படுத்தும்போது சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உதாரணமாக, குறிப்பிட்ட அந்த செல்போன் அல்லது டாங்கிள் உரிமையாளர் காரை விட்டு வெளியேறினால் காருக்குள் கிடைக்கும் இணைய சேவையை அடியோடு துண்டிக்கப்படும். மீண்டும் அந்த நபர் வரும் வரை காத்திருக்க வேண்டும் அல்லது வேறொரு ஹாட்ஸ்பாட்டிற்கு காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஒயர்லெஸ் மோடம் மற்றும் ரூட்டர்:
காரின் கேபினுக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஒயர்லெஸ் வைஃபை மோடம் மற்றும் ரூட்டர்கள் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், இவை டாங்கிள் அல்லது மைஃபை சாதனங்களைக் காட்டிலும் மிக அதிக விலைக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. அதேவேலையில், வழக்கமான வைஃபை சாதனங்களைக் காட்டிலும் அதிக நம்பகத் தன்மைக் கொண்டவையாக ஒயர்லெஸ் மோடம் மற்றும் ரூட்டர்கள் இருக்கின்றன.

இவற்றில் அதிக வேக இணைய சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கருவிகளைப் பொருத்த வேண்டும் எனில் சில பிரத்யேக தொழில்நுட்ப கருவிகளை காரில் சேர்க்க வேண்டியிருக்கும். இதனாலேயே இந்த செயலுக்கு அதிக தொகை செலவாகின்றது. இவ்வாறு செய்வதன் வாயிலாக தடையில்லா இணைய சேவையையும், உயர்ந்த தர இணைப்பையும் நம்மால் பெற முடியும்.

ஓபிடி சாதனம்
ஓபிடி சாதனங்கள் மொபைல் ஹாட்ஸ்பாட் மற்றும் டாங்கிளைக் காட்டிலும் சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், இதைக் காட்டிலும் ஒயர்லெஸ் மோடம் மற்றும் ரூட்டர்கள் தரம்மிக்கதாகக் காட்சியளிக்கின்றது. இந்த கருவியை காரின் ஓபி-ll போர்ட்டில் சொருகுவதனால் இணைய சேவையை மட்டுமின்றி கார் பற்றிய சில முக்கிய விபரங்களையும் நம்மால் அறிந்துக் கொள்ள முடியும்.

அந்தவகையில், கார் இருக்கும் இருப்பிடம், காரின் பயண வரலாறு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலே பார்த்த மூன்றில் ஏதேனும் ஒன்றை செய்தால் உங்கள் காரில் வைஃபை வசதியை தடையில்லாமல் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








