வேற லெவல்... இந்த காரின் அழகை வர்ணிக்க இரு கண்கள் போதாது.. நீளமான வால் பகுதியுடன் புதுமுக பகானி கார் அறிமுகம்!
பிரபல சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான பகானி (Pagani), ஹூவர்யா கோடலுங்கா (Huayra Codalunga) எனும் புதுமுக சூப்பர் காரை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முற்றிலும் அழகோவியமாக உருவாகியிருக்கும் இந்த கார் பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனங்களில் பகானி (Pagani)-யும் ஒன்று. இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் அரிய மற்றும் சூப்பர் கார் தயாரிப்பில் கைதேர்ந்த நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பெயருக்கு தான் தகுதியான நிறுவனம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் தரமான தயாரிப்பை பகானி தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

ஹூவர்யா கோடலுங்கா (Huayra Codalunga) எனும் புதுமுக சூப்பர் காரையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை பகானி வெளியீடு செய்வது இதுவே முதல் முறையாகும். மிகவும் நீளமான வால் பகுதியுடன் இக்காரை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இந்த ஸ்டைல் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் ஹூவர்யா கோடலுங்கா உருவாக்கப்பட்டிருப்பதை நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.

இதன் ஸ்டைல் மட்டுமில்லைங்க காரில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் சிலவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. உதாரணமாக காரின் கதவைக் கூறலாம். பறவை அதன் இறக்கைகளை விரிப்பதைப் போல் இக்காரின் கதவுகள் திறக்கும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், இந்த காரின் இரு கதவுகளையும் திறக்கப்பட்ட நிலையில் பார்க்கும்போது, ஆக்ரோஷமான கழுகு ஒன்று அதன் இறக்கைகளை விரித்துக் கொண்டு எதிராளியை பார்ப்பதைப் போன்று இருக்கும்.

இத்தகைய மிக சூப்பரான தோற்றம் கொண்டதாகவே பகானியின் ஹூவர்யா கோடலுங்கா சூப்பர் கார் இருக்கின்றது. இந்த ஸ்டைல் மட்டுமில்லைங்க காரின் விலையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. பல கோடி ரூபாய்க்கு இக்காரை பகானி விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ஐரோப்பிய சந்தையில் சுமார் 7 மில்லியன் யூரோக்களுக்கு அது விற்பனைச் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் இந்திய மதிப்பு ரூ. 57 கோடிகள் ஆகும். இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும். இதைவிட அதிக விலையில் விற்கப்பட்டாலும் சந்தேகப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பகானி நிறுவனம் இந்த சூப்பர் காரை மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. வெறும் ஐந்து அலகுகளை மட்டுமே நிறுவனம் தயார்படுத்தியிருக்கின்றது. ஆமாங்க, இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மட்டுமே ஹூவர்யா கோடலுங்கா கார்கள் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருக்கின்றன.

அனைத்து ஐந்து அலகுகளும் மேட் பெயிண்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. மற்றுமொரு சிறப்பு விஷயம் என்னவென்றால் இக்காரை தனது கோச்பில்ட் ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கியிருக்கின்றது. 1960களில் மிகவும் ஃபேமஸாக இருந்தவையே இந்த கோச்பில்ட் ஸ்போர்ட்ஸ் கார்கள் ஆகும்.

மேலும், இக்காரை மிகவும் எடைக் குறைவான வாகனமாகவும் பகானி உருவாக்கியிருக்கின்றது. இதற்காக கார்பன் ஃபைபர் பேனல்கள் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. காரின் நீளம் 360 மி.மீட்டராக., இருக்கின்றது. குறிப்பாக, இதன் வால் பகுதியாலயே இக்கார் அதிகம் நீளம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

காரின் முகப்பு பகுதியில் கவர்ச்சியான தோற்றத்திற்காக ட்வின்-பேரல் ரக ஹெட்லைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், இரு ஏர் வெண்டுகளுடன் கூடிய ஸ்மூத்தான மூக்கு பகுதி, அகலமான ஏர் டேம்களும் காரில் உள்ளன. இந்த மாதிரியான அம்சங்களினாலயே ஹூவர்யா கோடலுங்கா சூப்பர் கார் மிக மிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.
இந்த காரின் உட்பகுதியும் கண்களைக் கவரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. காரில் உள்ள இருக்கைகள் நுபக் லெதரால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, ஸ்விட்ச் கியர்கள் அனைத்திலும் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல பிரீமியம் மற்றும் லக்சூரி அம்சங்கள் பல இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

காரின் உட்புறத்தை பார்த்தாலே என்ன மாதிரியான் ஆடம்பர வசதிகளுடன் அக்கார் இருக்கின்றது என்பதை உங்களால் உணர முடியும். ஹூவர்யா கோடலுங்கா காரில் செராமிக் கோட்டிங்கிலான டைட்டானியம் எக்சாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒற்றை கருவியின் எடை மட்டுமே 4.4 கிலோவாகும். அதேநேரத்தில் காரின் ஒட்டுமொத்த எடை 1,280 கிலோவாக இருக்கின்றது.
பகானி நிறுவனம் இந்த காரில் 840 பிஎஸ் மற்றும் 1100 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய வி12 பெட்ரோல் மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. டிரான்ஸ்மிஷனுக்காக 7 ஸ்பீடு சீக்குவன்சியல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டாரின் உச்சபட்ச வேகம் போன்ற பிற முக்கிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், இந்த வாகனம் ராக்கெட்டுகளுக்கு நிகரான வேகத்தில் பயணிக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications








