வர பிப்ரவரி மாசம் எத்தன கார்கள் அறிமுகமாக இருக்கு தெரியுமா? நம்பவே மாட்டீங்க நிறைய கார்கள் பட்டியல்ல இருக்கு!
வரும் பிப்ரவரி மாதம் அறிமுகமாக இருக்கும் கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வெளியிட்டுள்ளோம். வாருங்கள் அவைகுறித்து பார்க்கலாம்.

கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டிலும் இந்திய வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக சில புதிய கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையை உற்சாகப்படுத்தும் வகையில் சில புதுமுக கார்கள் இந்த ஜனவரி மாதத்தில் அறிமுகமாகியிருக்கின்றன.

இதைபோலவே அடுத்து வரும் பிப்ரவரி மாத்தையும் பிசியாக்கும் வகையில் சில புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன. அந்தவகையில், என்னென்ன கார் மாடல்களை அடுத்த மாதம் எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2022 பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 7 புதிய கார்களின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றது. அவற்றின் பட்டியல் இதோ:
ஃபேஸ்லிஃப்ட் மாருதி சுசுகி பலினோ (Maruti Baleno facelift)
மாருதி சுசுகி நிறுவனம் அதன் ஃபேஸ்லிஃப்ட் பலினோ காரை வரும் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்முக சிறப்பு வசதிகளை இக்காரில் மாருதி நிறுவனம் அப்பேட்டாக வழங்கியிருக்கின்றது. வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றம் இதனடிப்படையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

2022 பலினோ காரின் முன்பக்கம் முன்பை காட்டிலும் தட்டையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், காரின் முன்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட க்ரில், எல்இடி டிஆர்எல்-களுடன் கூடிய புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பின் பக்கத்தில் அகலமான டெயில்-லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற மாற்றங்களால் முன்பை காட்டிலும் கூடுதல் பிரீமியம் தர காரமாக பலினோ மாறியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட பலினோ காரின் ஸ்பை படங்கள் வெளியாகின. அது பலினோ ஸ்போர்ட்டியான மற்றும் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது. மேலும், பெருமளவிலான மாற்றங்கள் காரின் உட்பகுதியிலேயே செய்யப்பட்டிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது.

கியா கேரன்ஸ் (Kia Carens)
இந்தியாவின் எம்பிவி வாகன பிரிவை மிக விரைவில் அலங்கரிக்க இருக்கின்றது கியா கேரன்ஸ். இக்கார் எம்பிவி ரக வாகனமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் சில எஸ்யூவி கார்களுக்கும் போட்டியளிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப பிரமாண்ட தோற்றம் மற்றும் கவர்ச்சிகர அம்சங்களுடனேயே இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இக்காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த பணி தொடங்கிய வெறும் 24 மணி நேரங்களிலேயே கேரன்ஸுக்கு 7 ஆயிரத்து 738 முன் பதிவுகள் குவிந்தன. மூன்று வரிசை இருக்கை அமைப்பு மற்றும் ஆறு அல்லது ஏழு இருக்கைகள் தேர்வுகளை இக்கார் வழங்க உள்ளது.

இக்கார் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் (140 பிஎஸ் பவர் திறனுடன்), 1.5 லிட்டர் பெட்ரோல் (115 பிஎஸ் பவருடன்), 1.5 லிட்டர் டர்போ டீசல் (115 பிஎஸ் பவருடன்) ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே கேரன்ஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதே எஞ்ஜின் தேர்வே செல்டோஸ் கார்களில் கியா வழங்கி வருகின்றது.

ஆடி க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் (Audi Q7 facelift)
புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் இந்திய சந்தையை அடுத்த மாதம் அலங்கரிக்கும் மற்றுமொரு காராக ஆடி க்யூ7 இருக்கின்றது. இந்த காரின் அறிமுகம் வரும் பிப்ரவரி 3ம் தேதி அரங்கேற இருக்கின்றது. க்யூ7 காரின் உள் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்களை ஆடி செய்திருக்கின்றது.

இந்த மாற்றங்களால் இப்புதுப்பிக்கப்பட்ட ஆடி க்யூ7 அதிக ஸ்போர்ட்டியான மற்றும் கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறியிருக்கின்றது. இந்த கார் பிரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஏற்கனவே இவற்றிற்கான புக்கிங் பணிகளை ஆடி நிறுவனம் தொடங்கிவிட்டது.

க்யூ7 காரில் 3.0 லிட்டர் வி6 டிஎஃப்எஸ்ஐ எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 335 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் இந்த மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. மேலும், குவாட்ரோ அனைத்து வீல் இயங்கும் சிஸ்டமும் இந்த காரில் இடம் பெறும்.

மினி கூப்பர் எஸ்இ (Mini Cooper SE)
மினி நிறுவனம் கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காரை அடுத்த மாதம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வருகையை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணி தொடங்கி மிக மிக விரைவிலேயே முதல் பேட்ஜ் கூப்பர் எஸ்இ கார் விற்று தீர்ந்துவிட்டன.

இக்காரில், 32.6 kWh பேட்டரி பேக்கை நிறுவனம் வழங்குகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இக்காரில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 184 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும். இத்தகைய திறன்களுடனேயே வரும் பிப்ரவரி மாதம் மினி கூப்பர் எஸ்இ சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

எம்ஜி இசட்எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் (MG ZS EV facelift)
இந்தியாவில் தற்போது குறைவான எண்ணிக்கையிலேயே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றாக எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் இருக்கின்றது. இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது எம்ஜி.

தற்போது விற்பனையில் இருக்கும் எம்ஜி இசட்எஸ் இவி காரில் 44.5 kWh பேட்டரி இடம் பெற்றிருக்கின்றது. இதனை அப்கிரேடின் வாயிலாக 51 kWh மாற்றியிருக்கின்றது, எம்ஜி. ஆகையால், இதன் ரேஞ்ஜ் திறன் அதிகரித்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுபோன்று இன்னும் சில புதிய அம்சங்களும் புதுப்பிக்கப்பட்ட இசட்எஸ் இவி காரில் இடம் பெற்றிருக்கின்றன.

ஜீப் காம்பஸ் டிரையல்ஹாவ்க் (Jeep Compass Trailhawk)
ஜீப் காம்பஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக நடப்பாண்டு பிப்ரவரியில் புதிய காம்பஸ் டிரையல்ஹாவ்க் காரை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இக்காரின் வருகையை இந்திய ஆட்டோமொபைல் துறை எதிர்பார்த்து வருகின்ற நிலையில், இதன் வருகையை இப்போதே உறுதிப்படுத்தும் வகையில் ஜீப் நிறுவனம் செயல்பட தொடங்கியிருக்கின்றது. 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் தேர்வில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

லெக்சஸ் என்எக்ஸ் 350 எச் (Lexus NX350h)
லெக்சஸ் ஏற்கனவே என்எக்ஸ் 350எச் சொகுசு காருக்கான புக்கிங் பணிகளை தொடங்கிவிட்டது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் அடுத்த மாதம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வெளிப்புறம் மற்றும் உட்புறம் பன்மடங்கு புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இக்காருக்கு சொகுசு வாகன பிரியர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த எதிர்பார்ப்பிற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் லெக்சஸ் என்எக்ஸ் 350எச் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








