உங்க கார் வழக்கத்துக்கு மாறா வெப்பத்தை வெளியேத்துதா... அப்போது இதுல ஏதாச்சும் ஒன்னுதான் காரணமா இருக்கும்!
கார்களில் இருந்து திடீரென அதிகளவில் வெப்பம் வெளியேறுவதற்கான காரணங்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்து பார்க்கலாம்.

"இப்போதான் வெயில் கொளுத்தோ கொளுத்துனு கொளுத்துது அதனால் ஹீட் அதிகமா தெரியுது ஓகே. ஆனால், டிசம்பர்-ஜனவரி மாசத்துலகூட காருல இருந்து ரொம்ப அதிகமா சூடு வெளியாகுதுங்க" இப்படி ஒரு புகாரை கூறுமளவிற்கு உங்கள் காரில் இருந்து வெப்பம் வெளியாகிறதா?.. இதற்கு ஒரு சில காரணங்கள் மட்டும்தாங்க இருக்கு. அந்த காரணங்களில் முக்கியமானவை சிலது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குறைவான ஆயில் லெவல்கள் (Low Oil Levels)
குறைவான அளவில் எஞ்ஜின் ஆயில் இருப்பதனாலும் அதிகளவில் வெப்பம் ஏற்படும். எனவேதான், இது ரொம்ப முக்கியமானது என கூறப்படுகின்றது. ஆயில், எஞ்ஜினில் ஏற்படும் உராய்வை குறைத்து வெப்பத்தை குறைக்க உதவும். ஆகையால், சிறந்த லூப்ரிகேன்ட் ஆயிலை தேர்வு செய்தது சிறந்தது. இத்துடன், குறிப்பிட்ட கிமீ பயணத்திற்கு பின்னர் உரிய அளவிலும், தரமானதாகவும் ஆயில் இருக்கின்றதா என்பதையும் ஆராய வேண்டும்.

வாட்டர் பம்பில் கோளாறு (Faulty Water Pump)
வாட்டர் பம்ப், வாகனத்தில் இருந்து வெளியேறும் வெப்பத்தை தவிர்ப்பதில் இதுவும் முக்கிய பங்காற்றுகின்றது. ஆகையால், ஒவ்வொரு காரின் குளிரூட்டும் அமைப்பின் இதயமாக தண்ணீர் பம்ப் பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்த இதயத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பராமரித்து விடுங்கள். இதன் வாயிலாக அதிகம் வெப்பமாதலை உங்களால் தவிர்க்க முடியும்.

ரேடியேட்டர் பாதிப்பு (Cracked Car Radiators)
ரேடியேட்டரில் பாதிப்பு ஏற்பட்டாலும் காரில் இருந்து அதிகப்படியான வெப்பம் வெளியேறும். ரெடியேட்டரின் பணியே காருக்குள் நிலவும் வெப்பத்தை வெளியேற்றுவதாகும். எனவேதான் இதில் சிறு சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக எஞ்ஜினில் இருந்து அதிகப்படியான வெப்பம் வெளியேறுகின்றது.

ரேடியேட்டர் விசிறி (Bad Radiator Fan)
ரேடியேட்டரில் இருக்கும் மின் விசிறியானது காற்றோட்டத்தை உறுதிப்படுத்துகின்றது. இது தொடர்ச்சியாக காற்றை உட்செலுத்தி ரேடியேட்டர் முழுவதையும் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது. இந்த செயலில் பாதிப்பு ஏற்படும் எனில், அதாவது, ரேடியேட்டர் ஃபேன் முறையாக இயங்கவில்லை என்றால் வெப்பம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். ஆகையால் இதன் காரணத்தினாலும் கார்களில் இருந்து வெப்பம் வெளியேறலாம்.

தெர்மோஸ்டேட்டில் பிரச்னை (Faulty Thermostat)
வெப்ப நிலையை ஒரே சீராக வைத்திருப்பதே தெர்மோஸ்டேட் பொறியமைப்பின் முக்கிய பணியாகும். அதாவது வெப்பத்தைச் சீராக காக்கும் கருவி. இதன் ஊடாகவே கூலண்ட் பயணிக்கும். ஆகையால், தெர்மோஸ்டேட்டில் ஏதேனும் பிரச்னை என்றால் இப்பணியில் பாதிப்பு ஏற்படும். இது திடீரென காரின் உஷ்ன நிலை அதிகரிக்கச் செய்துவிடும்.

டிரைவ் பெல்ட்டில் பழுது (Broken Belts)
வாகனங்களில் ஏற்படும் வெப்பச் சிக்கல்களைத் தீர்மானிப்பதில் பெல்ட்களும் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. உங்கள் காரின் டிரைவ் பெல்ட்கள் தளர்வாகவோ அல்லது பழுதடைந்தோ இருந்தால், அதன் வெளிப்பாடு அதிக வெப்பமாதலாக இருக்கும். எனவேதான் அவ்வப்போது டிரைவ் பெல்ட்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என வாகன துறை வல்லநுர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கூலிங் சிஸ்டத்தில் கசிவு (Cooling System Leaks)
காரின் எஞ்ஜினில் இருந்து வெளி வரும் வெப்பத்தைக் குறைக்க கூலிங் சிஸ்டம் பெரும் உதவியாக இருக்கின்றது. இந்த சிஸ்டத்தில் இருக்கும் கூலிங் அமிலம் கசியுமானால், கூலிங் செய்யும் பணி முழுமையடையாது. சிறிய விரிசல் மற்றும் பிற பாதிப்புகளால் இந்த கசிவு பிரச்னை ஏற்படுகின்றது.

இதனை அப்படியே விட்டால் நாளடைவில் பெரிய சிக்கல்களுக்கு வழி வகுக்கும். ஆகையால், உங்கள் காரின் கூலிங் சிஸ்டத்தை முறையாக பராமரிப்பது சிறந்தது. அதேநேரத்தில், உங்கள் காரின் வெப்பம் திடீரென அதிகரிக்க இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்.

முறையற்ற குளிரூட்டும் கலவையை பயன்படுத்துதல் (Improper Coolant Concentration)
முறையற்ற குளிரூட்டும் கலவையை பயன்படுத்துவதனாலும் உங்கள் காரில் இருந்து அதிகம் வெப்பம் வெளியேறலாம். ஆம், முறையற்ற குளிரூட்டும் பொருட்கள் அதன் பணியை ஒழுங்காக செய்யாது. ஆகையால், மலிவு விலையில் கிடைக்கின்றது என கூறி கண்டதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்பதே எங்களின் அறிவுறுத்தலாக இருக்கின்றது. ஏனெனில், இதுவும் உங்கள் வாகனம் அதிகம் வெப்பத்தை வெளியேற்றக் காரணமாக இருக்கலாம்.

கூலண்ட் கிளாம்ப் ஒழுங்காக பொருத்தப்படாமல் இருப்பது (Loose Coolant Hose Clamp)
உங்கள் காரில் திடீரென வெப்பம் வெளியேற இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். ஆகையால், கண்டத போட்டு அலசிட்டு இருக்காம கூலண்ட் செல்லும் ஹோஸின் கிளாம்ப் ஒழுங்க அது சேர வேண்டிய இடத்தோட இணைந்திருக்கா என்பதையும் ஒரு முறை சரி பார்த்திடுங்க. ஏன்னா, இதுக்காக மெக்கானிக்குகள் கிட்ட போகும்போது சிலர் உண்மைய மறைச்சு உங்கள் காசை பிடுங்க நேரிடலாம்.

மேலே பார்த்தவையே கார்களில் இருந்து அதிக வெப்பம் வெளியாவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆகையால், உங்கள் கார் உள்ள வெப்பநிலை அளவுகோல் திடிரென வாகனம் அதிகம் வெப்பமாக இருப்பதாக காண்பித்தால் அதை அவ்வளவு எளிதாக விட்டுவிடாமல் மேற்கூறியவற்றில் எந்த பிரச்னையைக் கார் சந்தித்திருக்கின்றது என்பதை ஆராய்ந்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








