இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியல்! டாடாவோட தயாரிப்பு இந்த பட்டியல்ல இருக்கா!!
இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எங்கேயோ ஒன்று, இரண்டு என தென்பட்டு வந்த மின்சார வாகனங்கள் தற்போது மிக அதிகளவில் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் முக்கிய நகர சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் நடமாட்டம் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. மின்சார இருசக்கர வாகனங்களை போலவே எலெக்ட்ரிக் கார்களும் எண்ணிக்கையில் உச்சத்தில் இருக்கின்றன.

இதை வைத்து பார்க்கையில் இந்தியர்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் மிக வேகமாக பிரபலமாகிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் கார்களை புதிதாக வாங்க விரும்புவர்களுக்கு உதவும் விதமாக, இந்தியாவில் மிக அதிக ரேஞ்ஜ் தரும் திறனில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

அதாவது, ஓர் முழு சார்ஜில் மிக மிக அதிக தூரம் பயணிக்கக் கூடிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். விலை உடன் கார்குறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த உலகில் ஓர் முழு சார்ஜில் 520 மைல்கள் (836 கிமீ) ரேஞ்ஜ் தரக் கூடிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளன. ஆனால், இந்தியாவிலோ 600 கி.மீட்டரே., உச்சபட்ச ரேஞ்ஜாக இருக்கின்றது.
பிஎம்டபிள்யூ ஐ4 (BMW i4)
சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ-வின் ஐ4 மாடலே இந்தியாவின் டாப்-ஹையஸ்ட் ரேஞ்ஜ் தரக் கூடிய எலெக்ட்ரிக் காராக இருக்கின்றது. இந்த கார் ஓர் முழு சார்ஜில் 590 கிமீ வரை பயணிக்கும். இந்த காரை மிகக் குறைவான வேகம் மற்றும் தேவையற்ற மின்சாதன பொருட்களை ஆஃப் செய்துவிட்டு இயக்கும்போது கூடுதல் ரேஞ்ஜ் தரக் கூடியதாக மாற்ற முடியும் என கூறப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரில் 83.9 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்குடன் சேர்த்து 340 எச்பி பவர் மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் ஐ4 காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் மணிக்கு 190 கிமீ வேகத்தில் இயங்கக் கூடியது.

இதுமட்டுமில்லைங்க, வெறும் 5.7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இந்த மோட்டார் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் சொகுசு மின்சார கார் ரூ. 69.90 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4 மேட்டிக் பிளஸ் (Mercedes-AMG EQS 53 4Matic+)
இந்தியாவின் இரண்டாவது அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காராக மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4 மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை மிக மிக சமீபத்திலேயே மெர்சிடிஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுகமாக ரூ. 2.45 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 586 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த காரில் உள்ள மின் மோட்டார் 761 எச்பி பவர் மற்றும் 1020 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரின் அதிக ரேஞ்ஜ் தரும் வெர்ஷன் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வாகனம் ஓர் ஃபுல் சார்ஜில் 750 கிமீ வரை ரேஞ்ஜ் தருமாம்.

கியா இவி6 (Kia EV6)
கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். இந்த காருக்கு ரூ. 59.65 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஓர் பிரீமியம் கிராஸோவர் ரக எலெக்ட்ரிக் காராகும். 77.4 kWh பேட்டரி பேக்கே இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 528 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த காரை இருவிதமான தேர்வுகளில் கியா வழங்குகிறது. ஒற்றோ மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் என்ற இவ்விரு விதமான தேர்வுகளிலேயே கியா இவி6 விற்பனைக்குக் கிடைக்கும். ஒற்றை மோட்டார் 229 எச்பி மற்றும் 350 என்எம் டார்க்கையும், இரட்டை மோட்டார் தேர்வு 325 எச்பி மற்றும் 605 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆடி இ-ட்ரான் ஜிடி (Audi e-tron GT)
ஆடி இ-ட்ரான் ஜிடி இந்த எலெக்ட்ரிக் கார் இருவிதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் ஸ்டாண்டர்டு மாடல் 475 எச்பி பவரையும், 630 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதேபோல் இதன் உயர்நிலை வேரியண்டான ஆர்எஸ் 646 எச்பி பவர் வரை வெளியேற்றும். ஆனால், இரு வேரியண்டுகளிலும் ஒரே மாதிரியான பேட்டரி பேக்கே பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக் அதிகபட்சமாக 481 முதல் 500 கிமீ வரையில் ரேஞ்ஜை தரும் திறன் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் கார் ரூ. 1.66 கோடி என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆடி இ-ட்ரான் மற்றும் போர்ஷே டேகேன் (Audi e-tron/Porsche Taycan)
ஆடி இ-ட்ரான் மற்றும் போர்ஷே டேகேன் ஆகிய இரு வெவ்வேறு பிராண்டுகளின் எலெக்ட்ரிக் கார் மாடலும் ஒரே மாதிரியான ரேஞ்ஜையே வழங்குகின்றன. இதில், இ-ட்ரான் எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்பேக் பாடி ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. 50 மற்றும் 55 என இரு விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 1.01 கோடி தொடங்கி ரூ. 1.19 கோடி வரையிலான விலையில் இந்த எலெக்ட்ரிக் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதேபோல் போர்ஷே டேகேன் இருவிதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டேகேன் செடான் மற்றும் டேகேன் கிராஸ் டூரிஸ்மோ ஆகிய தேர்வுகளிலேயே இந்த மின்சார வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மின்சார வாகனம் ரூ. 1.53 கோடி தொடங்கி ரூ. 2.34 கோடி வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








