வெகு விரைவில் விற்பனைக்கு வர உள்ள டாப் 5 டீசல் கார்கள்... இந்த கார்களுக்கு காத்திருப்பது ஒர்த்தானதுதானா?
வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் டாப் 5 டீசல் கார்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் டீசல் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இருப்பினும், அரசின் கடும் நெருக்கடி காரணமாக அவற்றின் தேர்வுகளின் எண்ணிக்கை மிகக் குறைந்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு தரம் நடைமுறைக்கு வந்த பின்னர் டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்குக் குறைந்துவிட்டது.

அதேநேரத்தில் டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் விலையையும் அது உயர்த்திவிட்டது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் பிரபலமான டீசல் கார் மாடல்களை நாட்டில் இருந்தே அகற்றிவிட்டன. ஆகையால், மக்களின் பிரியமான டீசல் எஞ்ஜின் கார்கள் பல விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகியது.

இருப்பினும், இந்தியர்களின் தேடல் டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களாக இருக்கின்றன. கிடைக்கும் தன்மை பல மடங்குக் குறைந்துக் காணப்படுகின்ற நிலையிலும் அவற்றின் மீதான மோகம் மக்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையை உணர்ந்து சில வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் பிரபலமான கார் மாடல்களில் டீசல் எஞ்ஜின் தேர்வை வழங்கி வருகின்றனர்.

இத்துடன், புதுமுக டீசல் எஞ்ஜின் வாகனங்களையும் களமிறக்கி வருகின்றனர். அந்தவகையில், மிக விரைவில் இந்திய சந்தையை அலங்கரிக்க இருக்கும் டீசல் எஞ்ஜின் கொண்ட டாப் ஐந்து கார்களின் பட்டியலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux)
இந்திய சந்தையில் டொயோட்டா ஹைலக்ஸ் கார் 20 ஜனவரி 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டது. மிக விரைவில் இக்காரின் விலை அறிவிக்கப்பட இருக்கின்றது. 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜின் உடனே இக்கார் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 201 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் தேர்வுகள் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இது 4X4 டிரைவ்ட்ரைன் அம்சம் கொண்ட காரும் கூட. இதுமட்டுமின்றி, ஆக்டீவ் டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிஃப்ரென்சியல் லாக் உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிக்-அப் ட்ரக்கின் வருகை இசுஸு வி-க்ராஸ் காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜீப் மெரிடியன் (Jeep Meridian)
காம்பஸ் கார் மாடலின் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட வாகனமே இந்த மெரிடியன். இக்காரின் அறிமுகம் வரும் மே மாதம் அரங்கேற இருக்கின்றது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், அனைத்து வீல் இயக்கம் வசதியும் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

டீசல் எஞ்ஜினை பொருத்த வரை 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்ஜினே இக்காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் மெரிடியனில் எதிர்பார்க்கப்படுகின்றது.

2022 ஹூண்டாய் க்ரெட்டா (2022 Hyundai Creta)
2022 புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா நவம்பர் 2021லேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவில் இன்னும் இக்கார் விற்பனைக்கு வரவில்லை. வரும் தீபாவளி பண்டிகைக்குள் இதன் விற்பனை அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. கியர்பாக்ஸை பொருத்த வரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் தானியங்கி உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. இக்கார் இந்திய சந்தையில் கியா செல்டோஸ், மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி அஸ்டர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக உள்ளது.

ஹூண்டாய் டக்சன் (Hyundai Tucson)
உலகளவில் ஹூண்டாய் டக்சன் நான்காம் தலைமுறை விற்பனையில் இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் இதன் வருகை இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றது. இந்த நிலையை மாற்றும் வகையில் மிக விரைவில் இக்கார் இந்தியாவில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. பாராமெட்ரிக் க்ரில், இன்டக்ரேடட் எல்இடி டிஆர்எல்-கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்களுடன் டக்சன் விற்பனைக்கு வர உள்ளது.

ஹூண்டாய் டக்சன் காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜினே இடம் பெற இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 182 பிஎச்பி பவர் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும். 4 வீல் இயக்கம் சிஸ்டம் அம்சம் டக்சனின் உயர்நிலை வேரியண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி ஹைபிரிட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)
இந்தியர்களின் எதிர்பார்ப்பில் பெரிதும் இடம் பிடித்திருக்கும் கார் மாடலே மஹிந்திரா ஸ்கார்பியோ. இக்காரின் புதிய தலைமுறை மிக விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஏற்கனவே இக்கார் இந்திய சாலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. மஹிந்திராவின் புதிய எம்பளத்துடன் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டீசல் எஞ்ஜின் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், அனைத்து வீல் இயக்கம் போன்ற சிறப்பம்சங்களும் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








