இந்த மார்ச் மாதம் அறிமுகமாக இருக்கும் கார்களின் பட்டியல் இங்கே... இத்தனை புதுமுகங்கள் அறிமுகமாக இருக்குதா!!
இந்த மார்ச் மாதத்தில் அறிமுகமாக இருக்கும் கார்களின் பாட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலை முழுமையான தகவலைக் காணலாம்.

நடப்பு 2022 மார்ச் மாதத்தில் அறிமுகமாவதற்கு சில புதிய கார் மாடல்கள் தயார் நிலையில் இருக்கின்றன. ஆகையால், இந்த மாதம் வாகன பிரியர்களுக்கு மிக சிறந்த மாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய கார் மாடல்கள் மட்டுமின்றி சில புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களும் இந்த மாதத்தில் அறிமுகமாக இருக்கின்றன.

எந்தெந்த நிறுவனத்தின் என்னென்ன புதுமுக கார் மாடல்கள் நடப்பு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia)
இந்த காரின் அறிமுகம் வரும் 3ம் தேதி அரங்கேற இருக்கின்றது. இந்த தேதியையே பிரீமியம் கார் உற்பத்தியாளர் ஸ்கோடா ஸ்லாவியாவின் வருகைக்கான நல்ல நாள் என நிர்ணயித்திருக்கின்றது. ரூ. 10 லட்சத்து 69 ஆயிரம் என்ற விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். நிறுவனம் 1.5 லிட்டர் வெர்ஷன் ஸ்லாவியா காரையே வரும் 3ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்டுகள் ஏற்கனவே (பிப்ரவரி 28ம் தேதி முதல்) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாரில், ஆக்டீவ் சிலிண்டர் தொழில்நுட்பம், குறிப்பிட்ட ட்யூன்-அப்பிற்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜினுடன் சேர்த்து 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் (Mercedes-Maybach S-Class)
இந்த சொகுசு காரும் இந்தியாவில் வரும் 3ம் தேதி அன்றே விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இரண்டாவது மேபேக் சொகுசு கார் மாடல் இதுவாகும். அதிக லக்சூரி அம்சங்களுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருப்பதால் வழக்கமான எஸ்-கிளாஸ் காரைக் காட்டிலும் அதிக அந்தஸ்துமிக்க காராக இது காட்சியளிக்கின்றது. ஆகையால், இதற்கு மேல் இடத்திலேயே புதிய மேபேக் எஸ்-கிளாஸ் அமர இருக்கின்றது. இந்த கார் இரு விதமான ட்ரிம்களில், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் (Volkswagen Virtus)
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் எஸ்யூவி காரை மிக சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு தற்போது நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையிலேயே நிறுவனம் மற்றுமொரு புதுமுக வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டுள்ளது. தனது வெண்டோ செடான் ரக காரை ரீபிளேஸ் செய்யும் விதமாக நிறுவனம் புதிய விர்சுஸ் காரை நாட்டில் களமிறக்க இருக்கின்றது.

மேலும், இக்காரை எம்க்யூபி ஏ0 ஐஎன் பிளாட்பாரத்தில் வைத்து உள்ளூரிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பெரிய உருவும், நவீன கால சிறப்பம்சங்கள் மற்றும் புதிய பவர்ஃபுல்லான இரு பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் அறிமுகம் வரும் 8ம் தேதி அரங்கேற இருக்கின்றது. அன்றைய தினம் விர்சுஸ் கார் பற்றிய இன்னும் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபேஸ்லிஃப்ட் லெக்சஸ் என்எக்ஸ் 350எச் (Lexus NX 350h facelift)
மார்ச் 8ம் தேதி ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் செடான் காரின் அறிமுகத்தை அடுத்து மறு நாளே (மார்ச் 9) இந்திய சந்தையை அலங்கரிக்கும் விதமாக லெக்சஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட என்எக்ஸ் 350எச் காரை நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன.

கடந்த ஜனவரி 19ம் தேதியில் இருந்து இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால், இக்காரின் விலை பற்றி விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் 9ம் தேதி அன்றே அறிவிக்கப்பட இருக்கின்றது. வெளிப்புறம், உட்புறம் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

2022 எம்ஜி இசட்எஸ் இவி (2022 MG ZS EV facelift)
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எம்ஜி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்தது. தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் திறனுடன் இதனை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, வெளிப்புற தோற்றத்திலும் நிறுவனம் மாற்றம் செய்திருக்கின்றது.

புதிய முன்-பின் பம்பர்கள், ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை மாற்றங்களாக 2022 எம்ஜி இசட்எஸ் இவி காரில் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இந்த வருகை மின் வாகன பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இதன் அறிமுகம் நடப்பு மாதத்தின் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்திற்குள் அரங்கேறி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்4 (BMW X4 facelift)
பிஎம்டபிள்யூ நிறுவனம் மிக சமீபத்தில் எக்ஸ்4 சொகுசு காரின் டீசர் படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்து இக்காரை வெளியீடு செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வு நடப்பு மாதம் அல்லது அடுத்து வரும் ஏதேனும் ஓர் மாதத்தில் அரங்கேற இருக்கின்றது. இக்காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஆகையால், இந்த மார்ச் மாதத்திற்குள் இதன் வெளியீடு அரங்கேறிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux)
டொயோட்டா ஹைலக்ஸ் ஓர் பிக்-அப் ட்ரக் ரக வாகனமாகும். இக்காருக்கான புக்கிங் பணிகள் ரூ. 1 லட்சம் என்ற முன் தொகையில் நாட்டில் தொடங்கியது. இந்த உச்சபட்ச தொகையில் புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அபரீதமான எண்ணிக்கையில் ஹைலக்ஸுக்கு புக்கிங்குகள் குவிந்தன.

ஆனால், எதிர்காலத்தில் இந்த அமோகமான வரவேற்பு காரை டெலிவரிக் கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறி டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸுக்கான புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தியது. உலகளவில் புகழ்பெற்றதே ஹைல்க்ஸ் பிக்-அப் ட்ரக். இக்காரில் 2.8 லிட்டர் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது201 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் (Toyota Glanza facelift)
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் பலேனோ-வின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலே டொயோட்டாவின் இந்த கிளான்ஸா கார் மாடல். இக்காரை புதுப்பித்தல்களுடன் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது டொயோட்டா நிறுவனம். இதனடிப்படையில் அக்காரை புதுப்பிக்கும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே இதன் வருகை மிக விரைவில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், துள்ளியமான வருகை பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இந்த மாதம் அல்லது அடுத்து சில வாரங்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட பலேனோ காரின் அறிமுகம் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








