எப்போனு தெரியல... ஆனா நிறைய காத்திருக்கு! இந்தியால இத்தனை சிஎன்ஜி கார்கள் விற்பனைக்கு வரபோகுதா?..
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ள சிஎன்ஜி கார்களின் லிஸ்டை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியா முதற்கொண்டு உலக நாடுகள் அனைத்தும் 'தூய்மையான இயக்கம்' எனும் திட்டத்தை நோக்கிய தங்களது பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டே இந்த பயணத்தை உலக நாடுகள் தொடங்கியிருக்கின்றன. அதாவது, பயணங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக (பாதிப்பு விளைவிக்காதவையாக) மாற்றும் முயற்சியில் அவை (உலக நாடுகள்) களமிறங்கியிருக்கின்றன.

இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மாற்று வாகனங்களை பயன்பாட்டிற்கும் கொண்டு வரும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக சிஎன்ஜி வாகனங்கள் தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதன் விளைவாக வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன. ஏற்கனவே சந்தையில் பல தரப்பட்ட சிஎன்ஜி கார்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றநிலையில், இன்னும் பல சிஎன்ஜி வாகனங்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுமாக உள்ளன. அவற்றின் பட்டியைலேயே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, விரைவில் விற்பனைக்கு வர உள்ள சிஎன்ஜி கார்களின் பட்டியலை பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG)
டாடா நிறுவனம் ஏற்கனவே டிகோர் மற்றும் டியாகோ கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்துடன், கூடுதலாக அல்ட்ராஸ் சிஎன்ஜி தேர்வையும் டாடா விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில்தான் இந்த கார் மாடலில் தானியங்கி வேரியண்டை டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சிஎன்ஜி தேர்வையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் அது களமிறங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் சிஎன்ஜி அல்ட்ராஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பை படங்கள் கடந்த சில தினங்களுக்கு வெளியாகி அல்ட்ராஸ் சிஎன்ஜி வருகையை உறுதிப்படுத்தியது. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா நிறுவனத்தின் இந்த சிஎன்ஜிக்கு சந்தையில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. அல்ட்ராஸ் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராகும். ஆகையால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பு அதிகப்படுத்தும் நோக்கிலேயே சிஎன்ஜி அல்ட்ராஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

மாருதி சுஸுகி பலினோ சிஎன்ஜி (Maruti Suzuki Baleno CNG)
மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே அதன் பெரும்பாலான கார் மாடல்களை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அது சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு வழங்காத வாகன மாடல்கள் மிக சில என கூறலாம். அவற்றையே தற்போது சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மாருதி சுஸுகி களமிறங்கியிருக்கின்றது.

இதன் அடிப்படையில் சமீபத்தில் நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஸ்விஃப்ட் காரை சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக லிஸ்டில் உள்ள கார் மாடலே பலினோ சிஎன்ஜி. விரைவில் இதன் வருகை இந்திய சந்தையில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகைக்கும் இந்தியாவில் பல மடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

மாருதியின் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காரே இந்த பலினோ. இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியாகவே சிஎன்ஜி பலினோ களமிறக்கப்பட உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரிலேயே சிஎன்ஜி தேர்வு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு ரூ. 8.4 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா பஞ்ச் சிஎன்ஜி (Tata Punch CNG)
டாடா நிறுவனத்தின் மலிவு விலை கார்களில் ஒன்றே பஞ்ச். அல்ட்ராஸ் காரைப் போலவே டாடா நிறுவனம் இந்த காரையும் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தின் அதிக பாதுகாப்பான கார் மாடலில் இந்த பஞ்ச் கார் மாடலும் ஒன்று. இந்த விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை அது குவித்துள்ளது.

இத்தகைய சூப்பரான காரையே நிறுவனம் விரைவில் சிஎன்ஜி தேர்வுடன் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. தற்போது விற்பனையில் உள்ள பஞ்ச் காரில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், நேச்சுரல்லி அஸ்பையர்டு பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 86 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாரையே சிஎன்ஜிக்கு ஏற்ப ட்யூன்-அப் செய்து நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG)
மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்திலேயே விட்டாரா பிரெஸ்ஸா எனும் பெயரை தூக்கிவிட்டு பிரெஸ்ஸா என்கிற பெயரில் அந்த காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் மாடலிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷன் லிட்டருக்கு 19.80 கிமீ தொடங்கி 20.15 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைபோலவே அதிக மைலேஜ் தரும் வாகனமாகவே சிஎன்ஜி பிரெஸ்ஸா விற்பனைக்கு வர இருக்கின்றது.

கியா கேரன்ஸ் சிஎன்ஜி (Kia Carens CNG)
கியா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் கேரன்ஸ்-ம் ஒன்று. இது ஓர் எம்பிவி ரக காராகும். இந்த கார் மாடலை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்துடன் மூன்றாவது தேர்வாக சிஎன்ஜி தேர்வையும் விற்பனைக்கு வழங்கும் நடவடிக்கையிலேயே கியா நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. தற்போது, கிடைத்துக் கொண்டிருக்கும் சூப்பரான வரவேற்பு இதன் சிஎன்ஜி வெர்ஷனுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








