இந்தியாவுல இந்த மின்சார கார்களுக்கு எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம்.. 2023க்குள் அறிமுகமாக இருக்கும் டாப் 3 இ-கார்!
குறைவான விலையில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் டாப் 3 மின்சார கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் ஃபேமஸாக தொடங்கி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. எனவேதான், இப்போது சாலைகளில் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை நம்மால் காண முடிகின்றது. இதன் எண்ணிக்கை மேலும் பன் மடங்கு அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பல மடங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை விகிதம் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஏன், கடந்த 2020ம் ஆண்டைக் காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் மிக மிக அதிக எண்ணிக்கையில் மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

மிக தெளிவாகக் கூற வேண்டும் எனில் 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே 1,22,607 யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்களே விற்பனையாகி இருந்தன. ஆனால், 2021இல் அது 3,29,190 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது. இது 168 சதவீத வளர்ச்சியாகும். இந்த விகிதம் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் 2022 ஆம் ஆண்டில் இன்னும் பல மடங்கு உயரும் என இந்திய வாகன உலகைச் சேர்ந்த வல்லநுர்கள் கணித்திருக்கின்றனர்.

இந்த நிலைக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக உறுதியுடன் இருக்கின்றன. அதாவது, அதிகரித்து வரும் மின்வாக சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதுமுக மின் வாகனங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் அவை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன.

ஏற்கனவே இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன பிரிவுகளில் பன்முக தேர்வுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கத் தொடங்கிவிட்டன. இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியிலேயே சில வாகன உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் கூடிய விரைவில் சில புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடல்கள் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவற்றில் அதிக ஆவலைத் தூண்டிக் கொண்டிருக்கும் சில எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே பார்க்கலாம்.

மஹிந்திரா இ-கேயூவி (Mahindra e-KUV100)
மஹிந்திரா நிறுவனம் விற்பனைச் செய்த மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றே கேயூவி100. இது ஓர் மைக்ரே எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்தியாவில் மிக அமோகமான விற்பனையைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் சில காரணங்களுக்காக இவ்வாகன மாடலை மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் இருந்து வெளியேற்றியது.

இந்த நிலையிலேயே இவ்வாகனத்தை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மஹிந்திரா களமிறங்கியிருக்கின்றது. ஆனால், இம்முறை உள்ளெரிப்பு எஞ்ஜின் கொண்ட (எரிபொருளால் இயங்கும்) வாகனமாக அல்லாமல் மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

அதேவேலையில் நாட்டின் மிகவும் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகவும் அது எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 8.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் மஹிந்திரா இ-கேயூவி எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, இந்தியாவின் குறைந்த மின்சார காராக டாடா மோட்டார்ஸின் டிகோர் இவி காட்சியளிக்கின்றது.

இதன் விலை ரூ. 11.99 லட்சம் ஆகும். இதைவிட குறைவான விலையில் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் காருக்கே போட்டியளிக்கும் வகையில் மஹிந்திரா இ-கேயூவி வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக அல்ட்ராஸ் இருக்கின்றது. இந்த கார் மாடல் தற்போது உள்ளெரிப்பு எஞ்ஜின் கொண்ட தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த வரிசையில் மிக விரைவில் டாடா எலெக்ட்ரிக் தேர்வை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இதன் வருகை மிக மிக விரைவில் அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரீமியம் தர மின்சார வாகனமாக இது இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், ரூ. 15 - ரூ. 20 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் ஏதேனும் பண்டிகைக் காலத்தில் இக்காரின் அறிமுகம் பற்றிய அனைத்து தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா இ-எக்ஸ்யூவி 300 (Mahindra e-XUV 300)
மஹிந்திரா நிறுவனத்தின்கீழ் எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு எலெக்ட்ரிக் காராக இ-எக்ஸ்யூவி 300 இருக்கின்றது. இந்த காரின் வருகை டாடா நெக்ஸான் இவி மின்சார காருக்கு போட்டியாக அமையும். மஹிந்திரா நிறுவனம் 2023 அல்லது அது முடிவடைவதற்குள் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலே பார்த்த வாகன மாடல்களே மிக விரைவில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஏற்கனவே, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் போர்ஷே போன்ற சொகுசு வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் களமிறங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








