அதிக பூட் ஸ்பேஸ் உடைய எஸ்யூவி கார்கள்!.. இவை இருந்தா லக்கேஜ் வைப்பதற்கு இடம் இல்லைன்ற பேச்சுக்கே இடமிருக்காது!
நாட்டில் அதிக பூட் ஸ்பேஸ் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து எஸ்யூவி கார்கள் பட்டியலை இந்தப் பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த கூடுதல் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

எஸ்யூவி கார்கள் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் மத்தியில் பிரபலமானதாக காட்சியளிக்கின்றன. ஒரு சிலர் இக்காரை அதிக இட வசதிக்காகவும், ஒரு சிலர் அதன் பிரமாண்டமான தோற்றத்திற்காகவும் வாங்கி வருகின்றனர். இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு காரணங்களை எஸ்யூவி காரை வாங்குவதற்கு அதன் பிரியர்கள் கூறி வருகின்றனர்.

அதிக லெக் ரூம், இந்தியாவின் கரடு-முரடான சாலைக்கு ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் சிலர் எஸ்யூவி கார்களை வாங்குகின்றனர். இன்னும் சிலர் அதிக பூட் ஸ்பேஸை எஸ்யூவி கார்கள் கொண்டிருக்கின்ற காரணத்திற்காக வாங்குவதாக கூறுகின்றனர்.

எஸ்யூவி கார்கள் என்றாலே மிக தாராளமான இட வசதிக்கு பெயர்போனவையாக காட்சியளிக்கின்றன. அதேநேரத்தில், குறிப்பிட்ட சில எஸ்யூவி கார்கள் இந்தியர்களின் மன நிலை அறிந்து சற்று கூடுதலான இட வசதியுடன் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், அதிக பூட் ஸ்பேஸ் வசதியுடன் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து எஸ்யூவி கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி ஹெக்டர் (MG Hector)
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து விற்பனைக்கு கொண்டு வந்த கார் ஹெக்டர். நாட்டின் மிக சிறந்த எஸ்யூவி கார்களில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. இதேபோல், சிறந்த பூட் ஸ்பேஸ் கொண்ட எஸ்யூவி கார்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. 587 லிட்டர் பூட் ஸ்பேஸை இக்கார் கொண்டிருக்கின்றது. ஓர் பெரிய குடும்பம் தங்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்ல போதுமான பூட் ஸ்பேஸ் இதுவாகும்.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளை இக்கார் தாங்கியிருக்கின்றது. இணைய வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற நவீன கால அம்சங்கள் பல ஹெக்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன் ரூ. 13.94 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.5 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 14.16 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

டாடா ஹாரியர் (Tata Harrier)
டாடா மோட்டார்ஸ் தயாரித்து வரும் சூப்பரான கார் மாடல்களில் ஹாரியர்-ம் ஒன்று. பிரமாண்டமான தோற்றம் கொண்டிருக்கும் இந்த கார் 425 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கின்றது. எம்ஜி ஹெக்டர் காரைக் காட்டிலும் இது பல மடங்கு குறைவு என்றாலும் போதியளவு தங்களுக்கு தேவையான லக்கேஜ்களை ஓர் குடும்பம் ஏற்றி செல்ல ஏதுவானதாக காட்சியளிக்கின்றது.

டாடா நிறுவனம் இந்த காரை டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்குகின்றது. மேனுவல் மற்றும் தானியங்கி என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இதில் வழங்கப்படுகின்றன. ரூ. 14.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து ஹாரியர் எஸ்யூவி கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒட்டுமொத்தமாக 18 வேரியண்டுகளிலும் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta)
ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவின் டாப் செல்லிங் எஸ்யூவி காராகும். செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ற காராக இது காட்சியளிக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 10.23 லட்சம் என்ற ஆரம்ப விலையிலேயே கிடைக்கின்றது. இதுபோன்ற பன்முக சிறப்புகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே மக்கள் மத்தியில் பிரபலமான எஸ்யூவி காராக காட்சியளிக்கின்றது.

இந்த காரின் பூட் ஸ்பேஸ் 433 லிட்டர் ஆகும். டாடா ஹாரியர் எஸ்யூவி காரைக் காட்டிலும் அதிக பூட்ஸ் ஸ்பேஸ் அளவு இதுவாகும். ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட எஸ்யூவி காரை விரும்புவோர்களுக்கு இது மிக சிறந்த தேர்வாக இருக்கும். இக்காரில், வாய்ஸ் எனேபிள்ட் சன்ரூஃப், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், பேடில் ஷிஃப்டர்கள், தானியங்கி ஏர் ஃப்யூரிஃபையர் உட்பட எக்கசக்க சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸ் (Kia Seltos)
எஸ்யூவி கார் பிரிவில் இந்தியாவில் மிக சிறப்பான விற்பனையைப் பெறும் கார் மாடல்களில் ஒன்றாக கியா செல்டோஸ் இருக்கின்றது. இந்த காரும், ஹூண்டாய் க்ரெட்டாவும் பூட் ஸ்பேஸ் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. ஆம், 433 லிட்டர் பூட் ஸ்பேஸை இது கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 15 லட்சம் ஆகும்.

ரெனால்ட் கைகர் (Renault Kiger)
இந்தியாவின் மலிவு விலை எஸ்யூவி காராக ரெனால்ட் கைகர் இருக்கின்றது. நம்முடைய இந்த அதிக பூட் ஸ்பேஸ் எஸ்யூவி கார்கள் பட்டியலில் மிகவும் குறைவான அளவைக் கொண்டதாக இக்கார் காட்சியளிக்கின்றது. 405 லிட்டர் பூட் ஸ்பேஸை இதுக் கொண்டிருக்கின்றது. அராய் வெளியிட்ட தகவலின்படி இந்த கார் ஒரு லிட்டருக்கு 18.24 கிமீ வரை மைலேஜ் வழங்கும்.

மேலே பார்த்த அனைத்து எஸ்யூவி கார்களும் ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடியவை ஆகும். அதேநேரத்தில் மேலே கொடுக்கப்பட்ட விலை விபரங்கள் எக்ஸ்-ஷோரூம் விலை மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications