இந்திய கார்களை இனி யாராலும் குறை சொல்ல முடியாது! சர்வதேச அளவில் நாட்டிற்கு புகழ் தேடி தந்த கார் மாடல்கள்...
சர்வதேச அளவில் இந்தியாவிற்கு புகழ் தேடி தந்த ஏழு கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சாலை விபத்தால் இறப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, இந்தியாவில் சாலை விபத்துகளும், அதைச் சார்ந்து ஏற்படும் உயிரிழப்புகளும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த அவலமான நிலையில் இருந்து இந்தியாவை விடுவிக்கும் விதமாக அரசும், வாகன உற்பத்தியாளர்களும் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு சார்பில் வாகன போக்குவரத்து விதிகளை கடுமையாக்குதல் மற்றும் விதிமீறல்களுக்கு உச்சபட்ச அபராதம் அல்லது தண்டனையை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், மறு பக்கம் வாகன உற்பத்தியாளர்கள் அவர்கள் சார்பில் அதீத பாதுகாப்பு திறன் கொண்ட வாகனங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

என்ன மாதிரியான விபத்தை சந்தித்தாலும் காருக்குள் இருப்பவர்களுக்கு சிறு துளியளவும் பாதிப்பு ஏற்படாத வகையில் காக்கும் கார்களையே இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் உருவாக்க ஆரம்பத்திருக்கின்றன. இந்த மாதிரியான பாதுகாப்பு திறன் கொண்ட கார்கள் ஏற்கனவே சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் குளோபல் என்சிஏபி அமைப்பால் நடத்தப்பட்ட மோதல் ஆய்வில், நாங்கள் மிகுந்த உறுதியானவர்கள், எங்களுக்குள் பயணிக்கும் பயணிகளைப் பாதுகாப்பு கவசம் கொண்டு பாதுகாப்போம் என சில மேட்-இன்-இந்தியா கார்கள் நிரூபித்துக் காண்பித்திருக்கின்றன. இந்த இந்திய தயாரிப்பு கார்கள் எவை, அவற்றின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300)
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திராவும் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முதன்மையான கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்யூவி 300 இருக்கின்றது. இந்த கார் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்து ஐந்து ஸ்டார்களை பெற்ற வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் பல இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றினாலும், அதிக உறுதித் தன்மையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலும் இக்கார் அதிக பாதுகாப்பானது என்ற புகழை அடைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, குளோபல் என்சிஏபி-யின் புகழ்பெற்ற விருதான ஃசேஃபர்ஸ் சாய்ஸ் விருதை இந்த கார் வென்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி இடம் இத்தகைய விருதை பெறும் முதல் கார் இதுவே ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700)
மஹிந்திரா நிறுவனத்தின் இந்த தயாரிப்பும் அதிக பாதுகாப்பு என்ற புகழைப் பெற்ற வாகனமாக இருக்கின்றது. இந்த காருக்கு தற்போது இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இக்காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஏழு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பிளைண்ட் ஸ்பாட் வியூவ் மானிட்டரிங் சிஸ்டம், அட்வான்ஸ்ட் டிரைவர் சிஸ்டம், ஃபிரண்ட் கொள்ளிசன் வார்னிங், தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த மாதிரியான சூப்பரான பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அது மோதல் ஆய்வில் மிக மிக அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது.

டாடா பஞ்ச் (Tata Punch)
டாடா நிறுவனத்தின் மலிவு விலை காராக பஞ்ச் இருக்கின்றது. விலை குறைவானதாக காராக இது இருந்தாலும் பாதுகாப்பிற்கு சற்றும் குறைவில்லாத காராக அது காட்சியளிக்கின்றது. இது உறுதிப்படுத்தும் வகையில் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை இக்கார் பெற்றிருக்கின்றது. சொல்ல போனால் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் மிக அதிக ரேட்டிங்கை பஞ்ச் பெற்றிருக்கின்றது. ஆனால், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு 4 ஸ்டார்களையே பஞ்ச் பெற்றது.

டாடா நெக்ஸான் (Tata Nexon)
டாடா பஞ்ச் மட்டுமில்லைங்க நிறுவனத்தின் மற்றுமொரு அதிக பாதுகாப்பு திறன்மிக்க காராக நெக்ஸான் இருக்கின்றது. இந்த காரே குளோபல் என்சிஏபி இடம் அதிகம் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் வாகனம் ஆகும். இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி காராகும். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் என பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz)
டாடா நிறுவனத்தின் மற்றுமொரு பாதுகாப்பு வசதிகள் நிறைந்த காராக அல்ட்ராஸ் இருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷத்தில் ஐந்து ஸ்டார்களையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் மூன்று ஸ்டார்களையும் இந்த கார் பெற்றிருக்கின்றது. இதில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக், ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், இபிடி, இசோஃபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun)
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தைக்காக உள்நாட்டில் வைத்து தயாரிக்கும் கார் மாடல்களில் டைகுனும் ஒன்று. இந்த மேட்-இன்-இந்திய தயாரிப்பே சமீபத்தில் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் மிக சிறந்த பாதுகாப்பு புள்ளிகளைப் பெற்று அசத்தியிருக்கின்றது. ஐந்து ஐந்து ஸ்டார்களைப் பெற்று அதீத பாதுகாப்பான கார் என்பதை அது நிரூபித்துள்ளது.

ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்சி, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், மல்டி கொல்லிசன் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் மும்முனை சீட் பெல்டுகள் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு கருவிகளினாலேயே டைகுன் அதீத பாதுகாப்பான கார் என்ற புகழைச் சூடியிருக்கின்றது.

ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq)
ஃபோக்ஸ்வேகன் டைகுன் உருவாக்கப்படும் அதே பிளாட்பாரத்தை தழுவியே ஸ்கோடா நிறுவனம் குஷாக் காரை உருவாக்குகின்றது. ஆகையால், இரு கார்களிலும் ஓரே மாதிரியான சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோல், குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலும் இரு கார்களும் ஒரே மாதிரியான பாதுகாப்பு ரேட்டிங்குகளையேப் பெற்றிருக்கின்றன. ஆமாங்க, இந்த காரும் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








