அவங்க சொன்னதவிட ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கே... 2022 பலேனோ இவ்ளோதான் மைலேஜ் தருதா... ரியல் லைஃப் டெஸ்டில் ஷாக்!
2022 பலேனோ (2022 Maruti Baleno) காரின் ரியல் உலக மைலேஜ் விபரம் பற்றிய தகவலை இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக பலேனோ (Baleno) விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் 2022 வெர்ஷன் பிப்ரவரி 23ம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இக்காருக்கு பிரீமியம் வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையிலேயே இக்காரின் 2022 வெர்ஷனை அறிமுகப்படுத்தி பலேனோ கார் காதலர்களை மாருதி சுஸுகி நிறுவனம் குஷிப்படுத்தியது.

2022 பலேனோவின் மேனுவல் வேரியண்ட் 22.35 கிமீ மைலேஜையும், ஏஎம்டி வேரியண்ட் 22.94 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்று அளித்துள்ளது. இந்த மைலேஜ் திறனை நிஜ வாழ்க்கையிலும் 2022 பலேனோ வழங்குகின்றதா என்ற ஆராய்ச்சியையே ஓர் இளைஞர் செய்துள்ளார்.

இதுகுறித்த வீடியோவையும் அந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அவரது யுட்யூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த சோதனையின் முடிவுகள் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். டிஎஸ்டி கார்ஸ் எனும் யுட்யூப் சேனல் வாயிலாகவே அவ்வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இளைஞர் மைலேஜ் டெஸ்டை செய்வதற்கு முன்னர் 2022 பலேனோ காரின் ஃப்யூவல் டேங்கை முழுமையாக நிரப்பியிருக்கின்றார். இதன் பின்னர், மைலேஜ் திறனை தெளிவாக தெரிந்துக் கொள்வதற்காக ட்ரிப் மீட்டரை பூஜ்ஜியத்திற்கு வரும்படி அவர் ரீசெட் செய்தார். தொடர்ந்து, பன்முக டிரைவிங் ஸ்டைலைக் கையாண்டு அவர் காரை ஓட்டினார்.

ஆரம்பத்தில் பலேனோ நகரத்திற்குள் பயணித்தது. லேசான வாகன நெரிசல்களுக்கு இடையில் ஆறு கிமீ தூரம் மட்டுமே நகரத்திற்குள் வைத்து இயக்கப்பட்டது. இதன் பின்னரே நெடுஞ்சாலைக்குள் காரை இளைஞர் செலுத்தினார். மணிக்கு சுமார் 80 கிமீ முதல் 85 கிமீ வேகத்தில் அவர் காரை சாலையில் இயக்கி இருக்கினார். இந்த நிலையில் திடீரென நெடுஞ்சாலையிலும் அவர் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

நகர்புற சாலையில் சந்தித்ததைவிட மிக மோசமான வாகன நெரிசலை சந்தித்ததாக அவர் வீடியோவில் பதிவு செய்திருக்கின்றார். சுமார் 25 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார். இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இடையிலேயே வெற்றி கரமாக 2022 பலேனோ காரின் மைலேஜ் டெஸ்டை அவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

இந்த பயணத்தில் 2022 பலேனோ ஒட்டுமொத்தமாக 89.3 கிமீ வரை பயணித்திருக்கின்றது. இந்த பயணத்திற்கு 5.69 லிட்டர் எரிபொருள் செலவாகியிருப்பதும் கண்டறியப்பட்டது. மீண்டும் எரிபொருள் தொட்டியை நிரப்பியதன் வாயிலாக இது கண்டறியப்பட்டது. இதை வைத்து பார்க்கையில் ஒரு லிட்டருக்கு 15.69 கிமீ வரை மாருதி பலேனோ மைலேஜ் வழங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஆனால், காரில் இடம் பெற்றிருந்த திரையோ ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ வரை மைலேஜ் வழங்கும் குறிப்பிட்டிருந்தது. எனவே, இது வழங்கும் தகவலும் மிக சரியானதாக இல்லை என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, எந்த காரும் மிகவும் சரியான மைலேஜ் விபரங்களை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

காலியான சாலை முதல் பெரும் போக்குவரத்து நெரிசல் கொண்டது என அனைத்து விதமான சாலைகளிலும் பயணித்த நிலையிலேயே பலேனோ இத்தகைய மைலேஜ் திறனை வழங்கியிருக்கின்றது. ஆனால், இது அராய் குறிப்பிட்டதைக் காட்டிலும் மிக மிக குறைவானது. போக்குரவத்து நெரிசல் அல்லாத சாலையில் இயக்கப்பட்டிருந்தால் சிறந்த மைலேஜை 2022 பலேனோ வெளிப்படுத்தியிருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

மாருதி சுஸுகி பலேனோ 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் பெட்ரோல் எஞ்ஜின் வசதியில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இக்காரில் வழங்கப்படுகின்றன. முன்னதாக சிவிடி வழங்கப்பட்டது.

விலை குறைப்பிற்காக 2022 வெர்ஷனில் ஏஎம்டி வசதியை மாருதி அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையிலேயே 2022 பலேனோ மேனுவல் வெர்ஷனை வைத்து இளைஞர் மைலேஜ் டெஸ்டை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த சோதனையோட்டத்தின் அடிப்படையில் காரை டெல்லி முதல் ஹரியானா வரை அவர் இயக்கியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








