கார் ஏசி திடீர்னு வேலை செய்ய மாட்டேங்குதா... அப்போ இதுல ஏதாவது ஒன்னுதான் காரணமாக இருக்கும்!
காரில் திடீர்னு ஏசி வேலை செய்யாமல் போகுவற்கான காரணங்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த விரிவான பதிவை பார்க்கலாம்.

கோடை ஆரம்பித்த முதலில் இருந்தே கத்திரி வெயில் தொடங்கியதைப் போல் சுட்டெரிக்கும் வெயில் வாட்டிவதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த மாதிரியான நேரத்தில்தான் பல பல பிரச்னைகள் புதுசு புதுசா நமக்குனு உருவாகும். குறிப்பாக, எலெக்ட்ரிக்கல் பிரச்னை, ஃபேன் ரிப்பேர், வீட்டு ஏசி வேலை செய்யாது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இதுமட்டுமா, சில நேரங்கள்ல கார்கள்ல கூட ஏசி வேலை செய்யாம போகலாம். சரி இந்த வெயிலை சமாளிக்க ஏதாவது குளிர்ச்சியான இடத்துக்கு ஒரு ரைடு போகலாம்னு பார்த்தா அந்த நேரம் பாத்து கார் ஏசி காலை வாரிவிடுற மாதிரி சம்பவத்தை செஞ்சிடும். இந்த நிலைமை, பக்கத்துல இருக்க மார்கெட்டுக்குகூட போக ஒத்துழைக்காது.

ஏன்னா வெயில் ரொம்பவே இப்போ வாட்டி வதைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த மாதிரியான நேரத்துல போய் ஏசி வேலை செய்யாம போய்ருச்சே... இதுக்கு என்ன காரணமா இருக்கும்னு தலை போட்டு பிச்சுக்கிறீங்களா?, அவை பற்றிய தகவலைதான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதாவது, கார் ஏசியில் என்னென்ன மாதிரியான காரணங்களால் பிரச்னைகள் ஏற்படும் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். தொடர்ந்து, கார் ஏசியில் இருந்து சில நேரங்களில் வெப்பமான காற்று வெளியேறும் இதற்கான காரணங்களை இப்பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார் ஏசியில் இருந்து ஏன் வெப்பமான காற்று வெளியேறுகிறது?
கம்ப்ரஸ்ஸர், கன்டன்சனர், ட்ரையர், எக்ஸ்பேன்சன் வால்வ் மற்றும் எவபோரடர் உள்ளிட்ட கருவிகளால் ஆனதே காரில் உள்ள ஏசி சிஸ்டம். இவற்றில் ஏதேனும் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் கார் ஏசி சரியாக வேலை செய்யாது. குறிப்பாக, குளிர்ச்சியான காற்றுக்கு பதிலாக வெப்பமான காற்றை வெளியேற்றும். இது காரின் சூழலையே வெப்பமானதாக மாற்றிவிடும்.

குளிரூட்ட உதவும் பொருளின் கசிவு (Leaking refrigerant):
குளிரூட்டியில் (ரெஃப்ரிஜரண்டில்) தானியங்கி மறு-சுழற்சி பொறிமுறை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், கசிவு என்பதே இந்த சிஸ்டத்தில் பெரும் தலை வலியாக இருக்கின்றது. பெரும்பாலான வாகனங்களில் இந்த பிரச்னையே அதிகளவில் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக சூடான காற்று, ஏசி ஆன் செய்திருக்கின்ற போதிலும் வெளியாகும். தேய்ந்த அல்லது பாதிக்கப்பட்ட பாகத்தை நீக்கி, கசிவை நிறுத்துவதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்து கொள்ள முடியும்.

கன்டென்சனரில் கோளாறு (Malfunctioning Condenser)
இதன் முக்கிய பணியானது சூடான காற்றை வெளியேற்றுவதாகும். இந்த பணி நிறுத்தப்படுமானால், அதாவது, கன்டென்சனரில் கோளாறு ஏற்படும் எனில் வெப்பமான காற்று வெளியேறாமல் தேக்கமடையத் தொடங்கும். இதன் விளைவாக அந்த தேக்கமடைந்த காற்று மீண்டும் ஏசி வாயிலாக காருக்குள்ளேயே வெளியேறும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.

கன்டென்சனரில் தூசி மற்றும் பிற அழுக்குகள் அதிகளவில் சேருவதனால் அவை எளிதில் பாதிக்கப்படுகின்றன. ஆகையால், அவ்வப்போது அதனை பராமரிக்க வேண்டும் என்பது அவசியமானதாக இருக்கின்றது. அதேநேரத்தில், பாதிப்புக்குள்ளாகிய கன்டென்சனர் இருப்பின், அதனை அகற்றுவதன் வாயிலாக சூடான காற்று காருக்குள் வருவதைத் தவிர்க்க முடியும்.

எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் கோளாறு ஏற்படுதல் (Electrical System Issues)
எல்லாமே நல்ல இருக்கு ஆனாலும் ஏசி சரியா வேலை செய்யலையா?, அப்போ கட்டாயம் எலெக்ட்ரிக்கலில் பிரச்சனை ஏற்பட்டிருக்கக் கூடும். மின்சார விநியோகம் துண்டிப்பு அல்லது மின்சார ஒயர்கள் சேதம் உள்ளிட்ட காரணங்களினால் எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் கோளாறு ஏற்படுகின்றது. இவற்றின் பாதிப்பினாலும் காற்று சூடானதாக வர வாய்ப்பிருக்கின்றது. இந்த சிக்கலைத் தீர்ப்பதன் வாயிலாக ஏசியை சிறப்பாக இயங்க செய்யலாம்.

கூலிங் ஃபேன் கோளாறு (Cooling Fan Issues)
கன்டென்சரில் இரு கூலிங் ஃபேன்கள் வழங்கப்பட்டிருக்கும். அவற்றின் ஏதேனும் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் கூட கார் ஏசியின் செயல் திறனில் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் அதிகப்படியான தூசி உள்ளிட்ட காரணங்களினாலேயே கூலிங் ஃபேனில் கோளாறு ஏற்படுகின்றது. ஆகையால், இந்த பகுதியிலும் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது.

கம்ப்ரஸ்ஸர் பழுதடைதல் (Faulty Compressor)
கம்ப்ரஸ்ஸரின் முக்கிய பணியே குறைந்த பிரஸ்ஸர் மற்றும் குறைந்த டெம்ப்ரேச்சர் வாயுக்களை உயர் பிரஸ்ஸர் மற்றும் உயர் டெம்ப்ரேச்சர் கொண்ட வாயுக்களாக மாற்றுவதாகும். இந்த பிரச்னையில் சிக்கல் என்றால் பெரும் தலைவலிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட கால பயன்பாட்டில் இருக்கும் கம்ப்ரஸ்ஸர்களே இந்த பணியை தொய்வுடன் செய்கின்றன.

ஏசி மெக்கானிக்குகள் வாயிலாக இந்த பிரச்னையை எளிதில் கையாள முடியும். அதேநேரத்தில், ஏசியை பயன்படுத்தாமலே இருப்பதும் கம்ப்ரஸ்ஸர்களில் பிரச்னையை ஏற்படுத்திவிடும் என கூறப்படுகின்றது. வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறையாவது ஏசியை பயன்படுத்துவதன் மூலம் அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








