ரோல்ஸ் ராய்ஸ் காரின் கேபினை போல் உங்கள் காரையும் அமைதியானதாக மாற்ற வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்கள்!
உங்களின் காரின் கேபினை அமைதியானதாக மாற்றுவதற்கான டிப்ஸ்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

காரில் பயணிக்கும்போது மத்த வாகனங்களால் ஏற்படும் சத்தம் நம்மை ஒரு பக்கம் எரிச்சலுக்கு ஆளாக்குகின்றது என்றால், மறு பக்கம் நாம் பயணிக்கும் நம்முடைய வாகனத்தில் இருந்தே சில விநோத ஒலிகள் வெளியேறக் கூடும். இது நம்மை கூடுதல் எரிச்சலடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சில நேரங்களில் இந்த அதிகப்படியான சத்தங்கள் நம்மை விரக்தியின் உச்சத்திற்கே எடுத்து செல்லும்.

ஆனால், இந்த ஒலிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆம், நம்முடைய கேபினை அதிக அமைதியான ஒன்றாக நாம்மால் மாற்ற முடியும். மிக அமைதியான கேபின்களைக் கொண்ட கார்களாக ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு வாகனங்கள் இருக்கின்றன. இவற்றின் அளவிற்கு இல்லை என்றால் கணிசமான அளவு அமைதியான வாகனமாக நம்முடைய வாகனங்களையும் மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வழிமுறைகளைதான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

காருக்குள் அதிகம் கேட்கக் கூடிய சத்தங்களில் காற்றின் சத்தமே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக வாகனங்களைக் காட்டிலும் எஸ்யூவி மற்றும் எம்பிவி வாகனங்களில் காற்றின் ஒலி மிகவும் அதிகமாகவே இருக்கும். இதற்கு, அக்கார்களின் ஏரோடைனமிக்கே தோற்றமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த மாதிரியான வாகனங்களில் வெதர் ஸ்ட்ரிப் டேப் அல்லது சீல்களை கதவின் ஃப்ரேம்களில் பயன்படுத்துவதனால் இதில் தீர்வை எட்ட முடியும்.

இதற்கு அடுத்தபடியாக டயரில் இருந்து வெளிவரும் சப்தமும் அதிக எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. அதிலும், கார் சற்று அதிக வேகத்தில் செல்லும்போது சொல்லவே வேண்டாம். அந்த ஊரையே கூட்டிவிடும். அதேநேரத்தில், டயரின் தன்மையைப் பொருத்து இந்த ஒலியின் தன்மை மாறுபடுகின்றது. காற்று குறைவு, பழுதடைந்து காணப்படும் டயர்களில் மிக அதிகளவில் சத்தம் எழும்புகின்றது.

மென்மையான கலவை மற்றும் தடினமான சுவர்களைக் கொண்ட டயர்களில் குறைவான ஒலியையே எழும்புகின்றன. ஆனால், இவற்றின் விலை சற்று அதிகம். அதேவேலையில், ஆயுட்காலம் மிகக்குறைவு. ஆகையால், இதனைக் கையாள டேம்பிங் மெட்டீரியலை காரின் தரை பகுதியில் பயன்படுத்தலாம் அல்லது ரப்பர் கோட்டிங்கை தெளிக்கலாம். இதன் வாயிலாக பெருமளவில் சத்தத்தை நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும்.

அதேநேரத்தில் சந்தையில் காரின் கேபினை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான பொருட்கள் பல விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றை காருக்குள் பயன்படுத்துவதனாலும் பெருமளவில் ஒலியைக் கட்டுப்படுத்த முடியும். சந்தையில் தற்போது டைனமேட் (Dynamat) எனும் பொருள் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதனை காரின் கதவுகள், தரை, ரூஃப் மற்றும் ஃபையர்வால் பகுதியில் பயன்படுத்துவதன் மூலம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இணையான அமைதியை விலை குறைவான கார்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். காற்றின் சத்தத்தை மிக சூப்பராக இது வடிகட்டும். பெரும்பாலும் குறைந்த விலை கார்களில் சற்று மலிவான சீலண்டுகளே பயன்படுத்துகின்றன. இதன் விளைவாகவே பட்ஜெட் கார்களின் கேபினில் அதிகளவில் சத்தம் கேட்கின்றன.

இதுமட்டுமின்றி, எஞ்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் எக்சாஸ்ட் ஆகியவற்றில் இருந்து கடுமையான சத்தங்கள் வெளிவருகின்றன. இதில் எஞ்ஜினில் இருந்து வெளிவரும் அதிக சத்தத்தை கட்டுப்படுத்த சிறந்த தரம் கொண்ட சிந்தடிக் ஆயிலை பயன்படுத்தினாலே போதும். பெருமளவில் எஞ்ஜினில் இருந்து வெளிவரும் இரைச்சலைக் கட்டுப்படுத்த முடியும்.

தொடர்ந்து, எஞ்ஜினை தாங்கியிருக்கும் மற்றும் இணைக்கும் ஸ்க்ரூக்கள் போன்றவற்றை அவ்வப்போது கவனித்தாலே பெருவாரியான தேவையற்ற சத்தத்தை கன்ட்ரோலுக்கு கொண்டு வரலாம். எக்சாஸ்டில் இருந்து வெளிவரும் அதிக சப்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. மஃப்ளர் கோளாறு மற்றும் எக்சாஸ்டில் துளைகள் ஏற்படுவது போன்ற காரணத்தினால் அதிக சத்தம் வெளியாகின்றது. இந்த கோளாறுகளை சரிசெய்தாலே கடுமையாக வெளிவரும் சத்தத்தைச் சற்றே குறைக்க முடியும்.

அதேநேரத்தில், கார் அதிக பயன்பாட்டின் காரணத்தினால், அதாவது, வயது முதிர்வின் காரணத்தினால் குறிப்பிட்ட சில பாகங்ககளில் இருந்து தேவையற்ற சத்தங்கள் எழும்பக் கூடும். இந்த பிரச்னையைச் சரி செய்ய சிறந்த மெக்கானிக் அல்லது நிபுணர்களினாலயே முடியும். இவற்றை சரி வர செய்தால் நம்முடைய மிக பழைய வாகனங்களைக்கூட அதிக அமைதியான வாகனங்களாக மாற்றிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








