உலகின் முதல் சோலார் பேனல் எஸ்யூவி கார் ஹம்பிள் ஒன் பற்றிய 5 சுவாரஷ்ய தகவல்கள்... ஆஹா இவ்ளோ சூப்பரான காரா இது!!
உலகின் முதல் சோலார் பேனல் ஹம்பிள் ஒன் எஸ்யூவி கார் பற்றி அறிய வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த தகவலைக் கீழே காணலாம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனம் ஹம்பிள் மோட்டார்ஸ் (Humble Motors). இந்நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சோலார் வசதிக் கொண்ட மின்சார கார் ஒன்றை வெளியீடு செய்தது. ஹம்பிள் ஒன் (Humble One) எனும் பெயரிலேயே அக்கார் வெளியீடு செய்யப்பட்டது. இதன் சுவாரஷ்யமான மற்றும் முக்கியமான விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உலகின் முதல் சோலார் கார்தானா இது?
ஹம்பிள் ஒன் உலகின் முதல் சோலார் வசதி கொண்ட கார் தானா? என்கிற கேள்வி நம் அனைவருக்கும் எழும்பியிருக்கின்றது. ஏனெனில், ஹூண்டாய் சொனாட்டா (Hyundai Sonata) மற்றும் கர்மா ரெவெரோ (Karma Revero) உள்ளிட்ட கார்கள் ஏற்கனவே சோலார் வசதியுடன் அறிமுகமாகியிருக்கின்றன. ஆனால், எஸ்யூவி கார் ரகத்தில், மேற்கூரையில் சோலார் வசதியுடன் உருவாகும் முதல் கார் மாடலாக ஹம்பிள் ஒன் காட்சியளிக்கின்றது.

எனவேதான் இதனை உலகின் முதல் சோலார் வசதிக் கொண்ட எஸ்யூவி கார் என குறிப்பிடுகின்றனர். இந்த சோலார் பேனல் வாயிலாக ஒவ்வொரு நாளும் 96 கிமீ தூரம் பயணிப்பதற்கான மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். எனவே தனியாக சார்ஜிங் நிலையத்தில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஆனால், வெயில் அல்லாத காலங்களில் சார்ஜ் நிலையத்தின் உதவி அவசியமானதாக இருக்கும்.

டிசைன்:
அண்மையில் காட்சிப்படுத்தப்பட்ட ஹம்பிள் ஒன் சோலார் காரின் தோற்றம், ஆரம்ப நிலை உருவாக்கத்திற்கான வடிவமைக்கப்பட்டதாகும். அதாவது, உற்பத்தி தயாராக இருக்கும் மாடலை இன்னும் நிறுவனம் காட்சிப்படுத்தவில்லை. அது பல்வேறு மாற்றங்களுடனேயே உருவாக இருக்கின்றது. இருப்பினும், ஸ்லோப் ரக ரூஃப்லைன், பெரிய கருப்பு நிற க்ரில் மற்றும் மெல்லிய எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை அப்படியே இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, பில்லர்கள் இல்லாத கதவுகள் கன்வென்ஷனல் விங் ரக கண்ணாடிகள் உள்ளிட்டவையும் எதிர்பார்க்கப்படுகின்றன. தொடர்ந்து, பக்கவாட்டு பகுதிகளில் ஏர் ஸ்கூப்புகள் மற்றும் கருப்பு நிற அலாய் வீல்களால் இக்கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறத்தில் டயர்கள் தெரிகின்ற வகையிலும், பூமராங் வடிவ டெயில் லைட் உள்ளிட்டவற்றாலும் ஹம்பிள் ஒன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ரியர் ஸ்பாய்லர், ஸ்பிளிட்டர் உள்ளிட்டவையும் இக்காரின் ஸ்போர்டியான தோற்றத்தை மெருகேற்றும் வகையில் பயனப்டுத்தப்பட்டுள்ளன.

ஸ்பெஷிகேஷன்ஸ்:
ஹம்பிள் ஒன் காரின் மேற்கூரையில் 80 சதுர அடிக்கும் மேல் அளவு கொண்ட சோலார் பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சூரிய ஒளியை அப்படியே மின்னாற்றலாக மாற்றும். ஒரு நாளைக்கு 96 கிமீ தூரம் பயணிப்பதற்கான மின்சார திறனை இது வழங்கும். நிறுவனத்தின் கூற்றுபடி, இந்த காரில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 805 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கக் கூடிய பேட்டரிபேக் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 1,020 வரையிலான பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த சூப்பரான திறனை வெளியேற்றுவதற்கு காரின் ஏரோடைனமிக்ஸ் தோற்றமும் உதவியாக இருக்கின்றது.

எப்போது இதன் வருகையை எதிர்பார்க்கலாம்?
ஹம்பிள் ஒன் சோலார் கார் இப்போதே பலரின் எதிர்பார்ப்பை ஈர்த்திருக்கின்றது. இதன் விளைவாக சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான இணையான ப்ரீ-ஆர்டர்களை அது கவர்ந்திருக்கின்றது. இதன் இந்திய ரூ. 146 கோடி ஆகும். ஆனால், இக்காரின் வருகையோ 2024ம் ஆண்டில் அல்லது அதற்கு பின்னரே அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அமெரிக்காவிலும், இதன் பின்னர் உலக நாடுகளிலும் ஹம்பிள் ஒன் விற்பனைக்கு வரும்.

விலை எதிர்பார்ப்பு:
இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 81 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் பிற மின்சார கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இதன் வருகையை அமைய இருப்பதை இந்த விலை உறுதிப்படுத்துகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








