எவ்ளோ பெரிய மோதலா இருந்தாலும் இதுஇருந்தா தப்பிச்சிடலாம்! மும்முனை சீட் பெல்டுடன் கிடைக்கும் கார்களின் பட்டியல்
மும்முனை சீட் பெல்ட் (3 Point Seatbelts) அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார்களில் அதிக பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக வழங்கப்படும் அம்சங்களில் சீட் பெல்டும் ஒன்று. விபத்து போன்ற கசப்பான நிகழ்வுகளின்போது ஏற்படும் கடுமையான பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த அம்சம் உறுதுணையாக இருக்கின்றது. வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் என இரு தரப்பினருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த அம்சத்தை முன் மற்றும் பின் இருக்கைகள் என அனைத்து இருக்கையாளர்களுக்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சீட் பெல்டை வழங்குகின்றன.

2 முனை, மும்முனை, நான்கு முனைகள் என பன்முக ரகங்களில் வாகன உற்பத்தியாளர்கள் இந்த சீட் பெல்டை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இவற்றுடன் சிறுவர்கள் மற்றும் குழைந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்கும் விதமாக ஐசோஃபிக்ஸ் மவுண்ட்களையும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

முன்னதாக பார்த்த சீட் பெல்டுகளில் இரு முனை சீட் பெல்டுகளே இந்தியாவில் விற்பனையில் பெரும்பாலான கார் மாடல்களில் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாகவே மும்முனை சீட் பெல்ட் வழங்கப்படுகின்றது. இவையிரண்டில் அதீத பாதுகாப்பை வழங்கக்கூடியதாக மும்முனைகள் கொண்ட சீட் பெல்ட்டுகள் இருக்கின்றன.

இதனுடன், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எட்டு கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். அதாவது, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தெந்த கார் மாடல்களில் மும்முனைகள் கொண்ட சீட் பெல்ட் அம்சம் வழங்கப்படுகின்றது?, அவற்றின் விலை எவ்வளவு உள்ளிட்ட முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா சிட்டி (Honda City)
இந்தியாவின் காம்பேக்ட் செடான் கார் பிரிவின் தலைவன் என்று ஹோண்டா சிட்டி காரை கூறலாம். இத்தகைய ஓர் கார் மாடலிலேயே ஹோண்டா நிறுவனம் மும்முனை சீட் பெல்ட் வசதியை வழங்குகின்றது. முன் பக்க இருக்கையாளர்கள் மட்டுமின்றி பின்பக்க இருக்கையாளர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்குகின்றது. பின்பக்கத்தின் நடு இருக்கையில் அமரும் பயணிக்கும்கூட இந்த அம்சத்தை நிறுவனம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பாதுகாப்பு அம்சத்துடன் சேர்த்து கூடுதல் பாதுகாப்பான உணர்வை வழங்கும் விதமாக 4 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், சென்சாருடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமிரா, வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் வின்ட்ஷீல்டில் டிஃபாக்கர் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா நிறுவனம் இந்த காரை ரூ. 11.57 லட்சம் தொடங்கி ரூ. 15.52 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதில், அதிக விலைக் கொண்ட தேர்விலேயே அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300)
இந்த காரின் பாதுகாப்பு திறன் பற்றிய சொல்லவே தேவையில்லை என நினைக்கின்றோம். ஏனெனில் இதன் பாதுகாப்பு திறன்குறித்து பல முறை நம்முடைய தளத்தில் நாம் பார்த்திருக்கின்றோம். இது ஓர் ஐந்து ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலாகும். இந்த சூப்பரான தர மதிப்பிற்கு அக்காரின் கட்டுமான தரமும் (பில்டு குவாலிட்டியும்), அதில் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அந்தவகையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரில் அனைத்து பயணிகளுக்கும் மும்முனை இருக்கை பெல்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங், கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பேனிக் பிரேக்கிங் சிக்னல் மற்றும் ஐசோஃபிக்ஸ் மவுண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த கார் ரூ. 8.42 லட்சம் தொடங்கி ரூ. 14.1 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus)
இந்தியாவின் பிரபலமான காம்பேக்ட் செடான் கார் மாடல்களில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்-ம் ஒன்று. இந்த கார் மாடலில் அதிக பாதுகாப்பை வழங்கும் விதமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மும்முனை சீட் பெல்டை வழங்குகின்றது. அனைத்து பயணிகளுக்கும் இந்த அம்சத்தை அது வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் சேர்த்து டூயல் ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் இருக்கை, ரியர் பார்க்கிங் சென்சார்கள் என கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 11.22 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் தற்போது இந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.

ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia)
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அதே எம்க்யூபி-ஏ0-ஐஎன் பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா காரை உருவாக்குகின்றது. ஒரே பிளாட்பாரத்தைப் பயன்படுத்துவதனால் விர்டுஸ் காரில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்கள் சில இந்த காரிலும் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், அனைத்து பயணிகளுக்குமான மும்முனை இருக்கை பெல்ட் ஸ்லேவியாவிலும் இடம் பெற்றிருக்கின்றது.

இதைப் போலவே டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் ஸ்லேவியாவில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த கார் ரூ. 10.99 லட்சம் தொடங்கி ரூ. 18.38 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

எம்ஜி ஆஸ்டர் (MG Astor)
தொழில்நுட்ப வசதிகள் நிரப்பப்பட்ட வாகனமாக எம்ஜி ஆஸ்டர் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க பாதுகாப்பு அம்சங்களிலும் பல மடங்கு சிறப்பான காராக ஆஸ்டர் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், அனைத்து இருக்கையாளர்களுக்கும் மும்முனை சீட் பெல்ட், ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் ஃபாக் லேம்ப், ஆக்டீவ் கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், டூயல் ஏர் பேக்குகள், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ. 10.32 லட்சம் ஆகும். அதேவேலையில், இதன் உயர்நிலை வேரியண்ட் ரூ. 18.23 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun)
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக டைகுன் காட்சியளிக்கின்றது. இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் அனைத்து பயணிகளுக்கும் மும்முனை சீட் பெல்ட் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மல்டி கொலிசன் பிரேக்குகள், பிரேக் டிஸ்க் வைப்பிங், டயர் பிரஷ்ஷர் டெஃப்ளேசன் வார்னிங், டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் ரூ. 11.40 தொடங்கி ரூ. 18.60 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq)
ஃபோக்ஸ்வேகன் தயாரிக்கப்படும் அதே பிளாட்பாரத்தைத் தழுவியே ஸ்கோடா குஷாக் கார் மாடலும் தயாரிக்கப்படுகின்றது. எனவே பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, அனைத்து பயணிகளுக்கும் மும்முனை சீட் பெல்ட், டூயல் ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மாணிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த கார் ரூ. 11.29 லட்சம் தொடங்கி ரூ. 18.70 லட்சம் வரையிலான விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta)
இந்தியாவின் பிரபலமான எம்பிவி கார் மாடல்களில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவும் ஒன்று. இந்த கார் மாடலிலும் அனைத்து பயணிகளுக்கும் மும்முனை சீட் பெல்ட் அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன் இந்த எம்பிவி காரில் 3 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ், எமர்ஜென்சி பிரேக் சிக்னல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த கார் தற்போதைய நிலவரப்படி ரூ. 17.45 லட்சம் தொடங்கி ரூ. 26.54 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








