HSRP நம்பர் பிளேட் சேதமடைஞ்சிருச்சா.. இல்ல காணாமல் போய்விட்டதா.. என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதில் இதோ!
உயர் பாதுகாப்பு பதிவெண் பிளேட் சேதமடைந்துவிட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வாகன திருட்டு, போலி பதிவெண் உள்ளிட்ட வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் சமூக விரோத செயல்களுக்கு தீர்வு காணும் விதமாக மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்ததே 'உயர் பாதுகாப்பு பதிவு தட்டுகள்' (High Security Registration Plate). இந்த ரக பதிவு தட்டுகள் வழக்கமான பதிவு தட்டுகளைப் போலில்லாமல் ரிவெட் முறையில் வாகனங்களில் பொருத்தப்படுகின்றன. ஆகையால், நம்பர் பிளேட்டுகள் திருடப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

அதேபோல், போலி பதிவெண்களையும் வாகனங்களில் பயன்படுத்த முடியாது. இந்த நம்பர் பிளேட்டை கழட்டவோ, அல்லது, கழட்டினால் மீண்டும் நாமாகவே பொருத்துவதோ முடியாது என்பதால் இரண்டும் சாத்தியமானதாக உள்ளது. இத்தகைய சிறப்புகளைக் காரணம் காட்டியே அரசு எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட்டை கட்டாயப்படுத்தியிருக்கின்றது. இத்தகைய நம்பர் பிளேட் சேதப்பட்டுவிட்டது என்றால் என்ன செய்ய வேண்டும்?, இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஸ்டெப் 1:
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் சேதமடைந்திருந்தாலோ அல்லது தொலைந்து போயிருந்தாலோ அதுகுறித்த தகவலை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, காவல்நிலையத்தில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்வது நல்லது. எழுத்துப் பூர்வமாக புகார் அளித்து அதற்கான ஆவணத்தைப் பெற்றுக் கொள்வதும் மிகுந்த அவசியமானது. எதிர்காலத்தில் நம்பர் பிளேட் சார்ந்து சட்ட சிக்கல் ஏதேனும் ஒன்றை சந்திக்க நேரிட்டால் அதில் இருந்து விடுபட இந்த புகார் உதவியாக இருக்கும்.

காணாமல் போன அல்லது திருடப்பட்ட நம்பர் உங்கள் நம்பர் பிளேட் போலியாக வேறொரு வாகனங்களில் பயன்படுத்த நேரிடலாம். அந்த வாகனம் ஏதேனும் சட்ட விரோத செயலில் ஈடுபடும் எனில் அந்த குற்றச்சாட்டு உங்களை வந்து சேர நேரிடலாம். இதில் இருந்து தற்காத்துக் கொள்ளவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையாக பார்க்கப்படுகின்றது. இந்த பணி முடிந்த பின்னர் உங்களுக்கான எச்எஸ்ஆர்பி-யை மீண்டும் உங்களது வாகனத்தில் பொருத்துவதற்கான பணியைத் தொடங்கலாம்.

ஸ்டெப் 2:
அரசின் அங்கீகாரம் பெற்ற எந்தவொரு மையத்திலும் எச்எஸ்ஆர்பி-யை பொருத்திக் கொள்ள முடியும். ஆனால், இந்த மையங்கள் எஃப்ஐஆரை கட்டாயம் என்கின்றன. இங்கு எந்த விதமான தவறும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக, நம்பர் பிளேட்டை பொருத்து மையங்கள் இதை அவசியம் என்கின்றன.

இதற்கு முன்னதாக ஆன்லைனில் எச்எஸ்ஆர்பி-க்கு விண்ணப்பிக்க வேண்டும். இதை செய்வதற்கு முன்னதாக ஆன்லைன்எச்எஸ்ஆர்பி.காம் (onlinehsrp.com) எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் மெயிலையும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த மெயிலில் எச்எஸ்ஆர்பி-யின் மாற்றத்திற்கான காரணம் மற்றும் எஃப்ஐஆர் நகலையும் அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தனை வழிகளையும் கடைபிடித்த பின்னரே உங்களால் உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட்டை பெற முடியும். இதோடு இது முடிந்துவிடவில்லை. இன்னும் பல சிக்கலான செயல்கள் இதற்கு பின்னால் இருக்கின்றன. இவையனைத்தும் முடிந்து புதிய நம்பர் பிளேட்டுகள் கையில் வந்து சேர போதும்போதும் என ஆகிவிடும். ஆகையால், எச்எஸ்ஆர்பி-யை சேதமடையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

இதற்கு கட்டணமாக ரூ. 400 முதல் 1,100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகின்றது. வாகனங்களின் வகையை பொருத்து கட்டணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு எச்எஸ்ஆர்பி-க்கும் 15 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. உங்கள் வாகனத்தில் உள்ள எச்எஸ்ஆர்பி சேதமடைந்தோ அல்லது தொலைந்தோ போயிருந்தால் நீங்கள் வாகனத்தை வாங்கிய டீலரை அணுகலாம். அவர்கள் உங்களுக்கான அனைத்தையும் செய்து கொடுப்பர்.

1 ஏப்ரல் 2019க்கு முன்னர் வரை வாங்கிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் அவசியம் இல்லை. ஆனால், இதற்கு பின்னால் விற்பனைச் செய்யப்பட்ட வாகனங்களுக்கு இது கட்டாயம். அதேநேரத்தில், சில மாநிலங்களில் இன்னும் இந்த திட்டம் அமல்படுத்தப்படாத நிலை தென்படுகின்றது. அந்த மாநில வாசிகள் இதை பற்றி கவலைப்பட தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்றால் என்ன?
எலக்ட்ரானிக் நம்பர் பிளேட்டான இது அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட தகடாகும். இதில், குரோமியம் ஹாலோகிராமால் உருவாக்கப்பட்ட ஸ்டாம்ப் மற்றும் லேசரால் பொறிக்கப்பட்ட 10 டிஜிட் எண் இருக்கும். இவற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது. ஆகையால், எச்எஸ்ஆர்பி விஷயத்தில் எந்தவொரு முறைகேடும் ஏற்படாது என்பது தெரிகின்றது.
மேலும், இந்த நம்பர் பிளேட்டை வழக்கமான ஸ்குரூ முறையில் இல்லாமல் ரிவெட் முறையில் வாகனங்களில் பொருத்தப்படுவதால் அவற்றை கழட்டுவது என்பது மிகவும் கடினமானது. இதனால் அரசு இந்த நம்பர் பிளேட்டை அதிக பாதுகாப்பானது என குறிப்பிடுகின்றது.


Click it and Unblock the Notifications