உண்மையிலேயே இந்த அமேஸ் மிக சிறந்த போட்டியாளன்தான் போலிருக்கே... விற்பனையில் சூப்பரான சாதனை படைச்சிருக்கு!
விற்பனையில் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) சூப்பரான சாதனையைப் படைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா (Honda) நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக அமேஸ் (Amaze) இருக்கின்றது. இது ஓர் செடான் ரக கார் மாடலாகும். இந்த வாகனமே விற்பனையில் தற்போது புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோண்டா நிறுவனமும் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் அமேஸ் கார் விற்பனையாகியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எஸ்யூவி கார்களின் வருகைக்கு பின்னர் ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக கார்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டன என்றே கூறலாம். இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே இந்தியாவில் இப்போதும் செடான் ரக கார்களை விரும்புவர் இருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் வாயிலாகவே இது தெரிய வந்துள்ளது.

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருப்பது இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் ஆகும். இதனை நிறுவனம் 2013ம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இதன் வருகையே ஹோண்டா நிறுவனத்தை இந்தியாவில் நிலைத்து நிற்க செய்திருக்கின்றது. ஆமாங்க, நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக அமேஸ் இருக்கின்றது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 40 சதவீதம் விற்பனையை இந்த காரே பிடித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா அமேஸ் 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் ஐ-விடெக் டீசல் மோட்டார் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய இரு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் அமேஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் பெட்ரோல் மோட்டார் 88 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. டீசல் மோட்டாரானது அதிகபட்சமாக 98.6 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வரை வெளியேற்றும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இதுமாதிரியான சூப்பரான திறன் கொண்ட காராக அமேஸ் இருப்பதனாலயே இந்தியாவில் அதற்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் டைர் 1, 2 மற்றும் 3 ஆகிய நகர்புறங்களிலேயே அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. முதல் முறையாக காரை வாங்குவோர்களே இந்த காரை அதிகம் தேர்வு செய்துக் கொண்டிருக்கின்றனர். ஹோண்டா நிறுவனத்தின் மீதிருக்கும் நம்பிக்கையும், அமேஸ் காரின் தரமுமே இந்த காரை அதிகளவில் இந்தியர்கள் வாங்க காரணமாக இருக்கின்றது.

இந்த கார் விற்பனைக்கு வந்த புதிதில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 9 சதவீதம் மட்டுமே இடம் பிடித்திருந்தது. ஆனால், இப்போது 30 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை அது பிடித்திருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹோண்டா அமேஸ் 5 லட்சம் யூனிட்டுகள் விற்பனை எண்ணிக்கையை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோண்டா அமேஸ் காரில் 7 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வெப்லிங்க் உள்ளிட்ட இணைப்பு வசதிகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஏசி கன்ட்ரோல்கள் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை இன்ஃபோடெயின்மென்டிற்கு கீழ் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

டிஜிட்டல் அனலாக் கன்சோல் மற்றும் எம்ஐடி திரையும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் அளவு, பயண தூரம், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும். இக்காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர்பேக், தானியங்கி ஹெட்லைட், பின்பக்க பார்க்கிங் கேமிரா, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் மவுண்ட் சிறுவர்களுக்கான இருக்கை, எஞ்ஜின் இம்மொபிளைசர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோண்டா அமேஸ் காரின் வருகை இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), டாடா டிகோர் (Tata Tigor) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








