கிராஷ் டெஸ்டில் அசத்திய ஹோண்டாவின் இரு தயாரிப்புகள்... இரண்டும் இவ்ளோ பாதுகாப்பான கார்களா!.. இது வேற லெவல்!
ஹோண்டாவின் இரு தயாரிப்புகள் மோதல் ஆய்வில் அசத்தியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பான வாகனங்களின் எண்ணிக்கை சற்றே உயர்ந்திருக்கின்றது. சமீபத்தில் குளோபல் என்சிஏபி இந்தியாவில் விற்கப்படும் சில கார்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்தியாவிற்கான பாதுகாப்பான கார் என்ற நிகழ்வின் அடிப்படையில் இந்த கிராஷ் டெஸ்டை குளோபல் என்சிஏபி நடத்தியது.

அதில், ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் மற்றும் சிட்டி ஆகிய கார் மாடல்களும் அடங்கும். இந்த இரு ஹோண்டா தயாரிப்புகளும் தாங்கள் ஓர் அதிக தரமான மற்றும் பாதுகாப்பான கார்கள் என்பதை கிராஷ் டெஸ்டின்போது உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஐந்திற்கு 4 ஸ்டார் ரேட்டிங்கை இரு கார்களும் பெற்றிருக்கின்றன.

ஹோண்டா ஜாஸ் ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17 புள்ளிகளுக்கு 13.89 புள்ளிகளை பெற்று அசத்தியிருக்கின்றது. இதன் விளைவாக வயது வந்தோருக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களை அது பெற்றது.

அதேவேலையில், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் ஜாஸ் சரிவர செயல்பட தவறிவிட்டது. 49 புள்ளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் 31.54 புள்ளிகளை மட்டுமே அது பெற்றது. இதன் விளைவாக ஐந்திற்கு மூன்று ஸ்டார்கள் மட்டுமே அதற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முன் பக்க பயணி மற்றும் டிரைவரின் தொடைக்கு அதிக காயங்கள் ஏற்படும் சூழல் ஜாஸ் காரில் நிலவுகின்றது. இதுதவிர, டிரைவரின் மார்பக பகுதி, இரு கால்கள் மற்றும் முன் பக்க பயணியின் ஓர் காலுக்கு லேசான காயங்களை ஏற்படுத்தும் சூழலும் நிலவுகின்றது. இவையே ஜாஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் சில புள்ளிகளை இழக்க காரணமாக அமைந்திருக்கின்றது.

இதேபோன்று சில இடங்களில் சரிவர செயல்பட தவறியதனால் ஒரு ஸ்டாரை இழந்து நான்கு நட்சத்திரங்களை மட்டுமே பெற்றிருக்கின்றது, ஹோண்டா சிட்டி. இந்தியர்களின் பிரியமான செடான் கார்களில் ஒன்றாக காட்சியளிக்கும் சிட்டி ஒரு நட்சத்திரத்தை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அது நான்கு ஸ்டார் பாதுகாப்பான கார் என்கிற பட்டத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சிட்டியின் நான்காம் தலைமுறையையே குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியிருக்கின்றது. இக்காரின் ஐந்தாம் தலைமுறை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் பழைய தலைமுறையை மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவே தற்போது நான்கு ஸ்டார் ரேட்டிங்கை பெற்று ஒட்டுமொத்த சிட்டி கார் பிரியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.
பின் பக்க இருக்கையின் நடு இருக்கைக்கான மும்முனை சீட் பெல்ட் இல்லாத காரணத்தினால் சில புள்ளிகளை இக்கார் இழந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி மனிதர்களுக்கு பதிலாக நிலை நிறுத்தப்பட்ட டம்மிகள் கணிசமான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. இதுமாதிரியான காரணங்களினாலேயே அக்கார் ஒரு ஸ்டாரை இழந்து நான்கு நட்சத்திரங்களை பெற்றிருக்கின்றது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17 புள்ளிகளுக்கு 12.03 புள்ளிகளும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு அதிகபட்சமாக 38.27 புள்ளிகளையும் சிட்டி பெற்றிருக்கின்றது. மிக சிறப்பான புள்ளிகள் இவை ஆகும். அதேநேரத்தில் டிரைவரின் மார்பகம், கால் தொடை மற்றும் முன் பக்க பயணியின் தொடை பகுதிக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழல் சிட்டி காரில் நிலவுகின்றது. இதன் விளைவாகவே சில புள்ளிகளை அக்கார் இழந்துள்ளது. இருப்பினும் நான்கு நட்சத்திரங்களை அது பெற்று அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








