டீசல் கார்களை ஒட்டுமொத்தமா தூக்க ஹோண்டா நிறுவனம் திட்டமா? இந்திய வாகன உலகத்தை அனல் பறக்க செய்திருக்கும் தகவல்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அதன் டீசல் கார்களுக்கு ஒட்டுமொத்தமாக முற்று புள்ளி வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒருவராக ஹோண்டா விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம் தற்போதைய நிலவரப்படி அமேஸ் (Amaze), நான்காம் தலைமுறை சிட்டி (4th Gen City), ஐந்தாம் தலைமுறை சிட்டி (5th Gen City), சிட்டி இ:எச்இவி (City Hybrid eHEV) (இது ஒரு ஹைபிரிட் கார் ஆகும்), டபிள்யூஆர்-வி (WR-V) மற்றும் ஜாஸ் (Jazz) உள்ளிட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றில் டபிள்யூஆர்-வி, அமேஸ் மற்றும் புதிய சிட்டி கார் மாடல்களில் டீசல் மோட்டார் தேர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகளையே விற்பனையில் நிறுவனம் அகற்ற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோண்டா குறித்து வெளிாயகியிருக்கும் இந்த தகவல் இந்தியர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏற்கனவே இம்மாதிரியான நடவடிக்கையை இந்தியாவின் பிற முன்னணி கார் உற்பத்தியாளர்களான மாருதி சுஸுகி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இதேமாதிரியான நடவடிக்கையை தற்போது ஹோண்டா நிறுவனமும் கையில் எடுக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுகுறித்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டகுயா சுமுறா-வின் சமீபத்திய பேட்டி இருக்கின்றது. அண்மையில் நடைபெற்ற பிரபல ஊடகம் ஒன்றின் பேட்டியின்போது, "நிறுவனம் டீசல் எஞ்ஜின்கள் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.

ஆயில் பர்னருடன் மாசு (Real Driving Emissions) -கட்டுப்பாட்டை முழுமையடையச் செய்ய முடியவில்லை. இதன் காரணமாகவே ஐரோப்பாவில் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் டீசல் மோட்டார் கொண்ட வாகன தேர்வுகளை வெளியேற்றியிருக்கின்றனர்" என தெரிவித்தார்.

இந்தியாவில் மாசு உமிழ்வு தரக்கட்டுப்பாடு விதிகள் வெகுவிரைவில் கடுமையாக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் கடுமையாக்கப்பட்ட விதிகள் அமலுக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஹோண்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி டீசல் எஞ்ஜின்களைக் கைவிட இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

மாசு உமிழ்வை குறைக்கும் பொருட்டு தற்போது நடைமுறையில் இருக்கும் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த விதியே விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதன் முக்கிய நோக்கமே வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதாகும்.

இதற்காக கஃபே 2 (Corporate Average Fuel Efficiency 2)-வும் உருவாக்கப்பட்டுள்ளது. இன் கீழ், கார் உற்பத்தியாளர்கள் 113gm CO2/km என்ற உமிழ்வு அளவை எட்ட வேண்டும். அதாவது, வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகனங்களை ஒரு கிமீட்டருக்கு 113 கிராம் CO2-வை மட்டுமே வெளியேற்றும் வகையில் உருவாக்குதல் வேண்டும் என்பதையே இந்த விதி கட்டாயமாக்கியிருக்கின்றது.

இந்த புதிய விதியின் வாயிலாக எரிபொருள் பயன்பாடும் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது, வாகனங்கள் அதிகம் மைலேஜ் தரக்கூடிய மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 13 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனம் செய்யப்படலாம். இத்தகைய விதியே விரைவில் நடைமுறைக்கு வர இருக்கின்றது. இந்த விதி காரணமாகவே ஹோண்டா நிறுவனம் அதன் டீசல் கார்களை வெளியற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேலையில், நிறுவனம் அதன் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றின் வருகைக்கு பின்னரே படிபடியாக டீசல் வாகனங்களின் வெளியேற்றத்தை ஹோண்டா நிகழ்த்த வாய்ப்புகள் உள்ளன. ஹைபிரிட் வாகனங்கள் மட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்களையும் ஹோண்டா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றது. நாட்டின் இந்த தேவையை உணர்ந்து டாடா மோட்டார்ஸ் தொடர்ச்சியாக மின்சார கார்களைக் களமிறக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. ஏற்கனவே நிறுவனத்தின்கீழ் டிகோர் இவி, நெக்ஸான் இவி ஆகிய கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வரிசையில் விரைவில் டியாகோ இவி அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
Source: TOI


Click it and Unblock the Notifications








