சேல்ஸ் ரொம்ப 'டல்' ஆயிருச்சு... இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஒரே கார் இதுதான்!
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்திற்கான ஹோண்டா நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஹோண்டா 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 7,973 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீத வீழ்ச்சியாகும்.

ஏனெனில் ஹோண்டா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 8,638 கார்களை விற்பனை செய்திருந்தது. வருடாந்திர ரீதியில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் மாதாந்திர ரீதியில் ஹோண்டா நிறுவனம் விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 5,457 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை அதன்பின் வந்த டிசம்பர் மாதம் 7,973 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர ரீதியில் ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் 46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியிருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார் என்ற பெருமையை சிட்டி பெற்றுள்ளது. கடந்த 2021 டிசம்பரில் 3,743 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,717 ஹோண்டா சிட்டி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் ஹோண்டா சிட்டி விற்பனையில் 37.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் ஹோண்டா அமேஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்த அமேஸ் கார்களின் எண்ணிக்கை 3,659 மட்டுமே. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 4,385 ஆக இருந்தது. இதன் மூலம் ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை 16.5 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த பட்டியலில் ஹோண்டா ஜாஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 602 ஆக இருந்த ஹோண்டா ஜாஸ் காரின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 486 ஆக குறைந்துள்ளது. இது 19.2 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் நான்காவது மற்றும் கடைசி இடத்தை பிடித்திருப்பது ஹோண்டா டபிள்யூஆர்-வி ஆகும்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் ஹோண்டா நிறுவனம் 930 டபிள்யூஆர்-வி கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 85 ஆக குறைந்துள்ளது. இது 90.8 சதவீத வீழ்ச்சியாகும். வருடாந்திர ரீதியில் பார்த்தால், சிட்டி காரை தவிர இந்த பட்டியலில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் மற்ற அனைத்து கார்களும் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளன.

இந்தியாவில் சமீப காலமாகவே கார் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களால் கார்களை அதிகமாக உற்பத்தி செய்ய முடியவில்லை. இதன் விளைவாக விற்பனையும் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








