லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா சிட்டி ஹைபிரிட் வெளியீடு! சீக்கிரமே விற்பனைக்கு வரபோகுது!
ஹோண்டா நிறுவனம் அதன் சிட்டி ஹைபிரிட் (Honda City e:HEV) வெர்ஷனை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இக்காரின் விற்பனைக்கான அறிமுகம் வரும் மே மாதம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த இன்னும் கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) அதன் சிட்டி (City) கார் மாடலில் இ:எச்இவி (City e:HEV) எனும் புதிய வெர்ஷனை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதி கொண்ட காராகும். இந்த தொழில்நுட்பத்துடன் நாட்டில் விற்பனைக்கு வரும் முதல் செடான் ரக கார் இதுவே ஆகும்.

ஆகையால், செடான் கார் பிரியர்கள் மத்தியில் இதன் வெளியீடு இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மிக விரைவில் இக்காருக்கான விற்பனையை ஹோண்டா தொடங்க இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இக்காருக்கான புக்கிங் பணிகள் தற்போது நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. ஹோண்டா சிட்டி ஹைபிரிட் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். வி மற்றும் இசட்எக்ஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது.

புதிய வெர்ஷன் சிட்டி இ:எச்இவி மிக அதிக மைலேஜ் தரக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26.5 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சூப்பரான திறன், தற்போது இந்தியாவில் மிட்-சைஸ் செடான் கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற கார் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார் மாடல்களுக்கே போட்டிாக புதிய சிட்டி ஹைபிரிட்டின் வருகை அமைய இருக்கின்றது. இந்தியாவில் மாருதி சியாஸ் கார் மாடலும் ஹைபிரிட் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், அது மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடனேயே கிடைக்கின்றது. ஹோண்டா சிட்டி காரில் வழங்கப்பட்டிருப்பது உண்மையான மிக சிறந்த மைலேஜை வழங்கக் கூடிய ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகும்.

இதற்காக இரு மின் மோட்டார்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒன்று ஐஎஸ்ஜி (integrated starter generator)ஆக செயல்படும். ஆகையைால், இந்த மோட்டார் பெட்ரோல் எஞ்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், 108 பிஎச்பி பவர் கொண்ட மற்றுமொரு மின் மோட்டார் முன் பக்க வீலுக்கு இயங்கு திறனை வழங்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டர்களுக்கான மின்சாரம் பேட்டரி வாயிலாக கிடைக்கும். இந்த பேட்டரி பிரேக் ரீஜெனரஷேன் மற்றும் பெட்ரோல் எஞ்ஜின் வாயிலாக சார்ஜாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் 4 சிலிண்டர், நேச்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜினே சிட்டி ஹைபிரிட்டில் முக்கிய மோட்டாராக ஹோண்டா பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் 97 பிஎச்பி பவரையும், 127 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இதுமட்டுமில்லைங்க பன்முக சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இக்காரில் ஹோண்டா வழங்கியுள்ளது. அந்தவகையில், 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹோண்டா இணைப்பு வசதி, ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு, எட்டு ஸ்பீக்கர்கள், டிரைவருக்கான டிஜிட்டல் திரை மற்றும் ஆட்டோ லாக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல் பாதுகாப்பு விஷயத்திற்காகவும் பன்முக சிறப்பு வசதிகளை ஹோண்டா இக்காரில் வாரி வழங்கியிருக்கின்றது. ஹோண்டா சென்ஸிங் தொழில்நுட்பம், ஆட்டோ ஹை பீம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், பார்க்கிங் ஹோல்ட், லேன் வாட்ச் கேமிரா, மல்டி ஆங்கிள் ரியர்வியூ கேமிரா, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்ட பன்முக கூடுதல் சிறப்பு வசதிகளும் ஹோண்டா சிட்டி ஹைபிரிடில் வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூப்பரான வசதிகளுடனேயே மிக விரைவில் சிட்டி ஹைபிரிட் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. தற்போது இந்த காரை ஹோண்டா நிறுவனம் வெளியீடு மட்டுமே செய்திருக்கின்றது. மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அப்போது ரூ. 18 லட்சம் தொடங்கி ரூ. 20 லட்சம் வரையிலான விலையில் இதை எதிர்பார்க்கலாம்.

இணையத்தில் கசிந்திருக்கும் தகவல்கள் ஹோண்டா சிட்டி ஹைபிரிடில் இன்னும் பல அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தெரிவிக்கின்றன. அந்தவகையில், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், அலெக்ஸா ரிமோட், கொல்லிசன் மிடிகேஷன் பிரேக்கிங், ரோட் டிபார்ச்சர் மிடிகேஷன், 410 லிட்டர் பூட் ஸ்பேஸ், கூடுதல் பேட்டரி வசதியால் கூடுதல் 110 கிலோ எடையில் வரவிருப்பது உள்ளிட்டவை தெரிய வந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








