கஷ்டமருக்கு ரூ.95,000 வழங்கிட ஓலாவுக்கு உத்தரவு!.. 5கிமீ பயணத்துக்கு இவ்ளோ கட்டணம் கேட்டா இப்படிதான் நடக்கும்!
பயணி ஒருவருக்கு ரூ. 95 ஆயிரம் வழங்கிட ஓலா கேப்ஸுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் தொகை வழங்க உத்தரவிட்டதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வண்டில போனதுக்கு கட்டணத்தை வாங்க சொன்னா ஒரு நாளுக்கான வாகன வாடகையை வசூலிக்கும் விதமாக சமீப சில காலமாக கால் டாக்சி நிறுவனங்கள் கட்டணம் வசூலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மக்கள் கடும் அவஸ்தைக்கு ஆளாகி வருகின்றனர். ஆரம்பத்தில் மலிவு கட்டணத்தில் சேவையை வழங்கி வந்த ஓலா, ஊபர் கால் டாக்சி நிறுவனங்கள் இப்போதெல்லாம் இரண்டு கிமீட்டருக்கும் குறைவான பயணங்களுக்கு நூற்றுக்கணக்கான ரூபாயை கட்டணமாக வசூல் செய்து வருகின்றன.

இந்த நிலையிலேயே பயணி ஒருவரிடத்தில் அதிகக் கட்டணத்தை வசூல் செய்ததாகக் கூறி ஓலா கேப்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது. கடந்த அக்டோபர் 19, 2021 அன்று ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜாபஸ் சாமுவேல் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் பயணிப்பதற்காக ஓலா கேப்ஸ் வாயிலாக 4 மணி நேர பேக்கேஜ் திட்டத்தின்கீழ் கார் ஒன்றை புக் செய்திருக்கின்றார்.

இவரை பிக்-அப் செய்வதற்காக வந்த ஓட்டுநர் ஜாபஸ் சாமுவேல் இடத்தில் முறையாக நடந்துக் கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. குறிப்பாக, அவர் பயணிகள் இடத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ஏசியை ஆன் செய்யாமல் தவிர்த்தது என பல்வேறு பிரச்னைகளை அவர் செய்ததாக ஜாபஸ் சாமுவேல் கூறியிருக்கின்றார். ஆகையால், பயணம் தொடங்கி 4-5 கிமீ இடைவெளியிலேயே ஜாபஸ் சாமுவேல் தன்னுடைய பயணத்தை இப்போதே முடித்துக் கொள்ளும் எண்ணத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்.

சௌகரியம் இல்லாத பயணத்தைத் தொடர மனமில்லாத காரணத்தினால் தன்னுடைய பேக்கேஜ் புக்கிங்கை கேன்சல் செய்து கொள்வதாக அவர் கூறியிருக்கின்றார். ஆனால், இந்த குறைவான பயணத்திற்கு ஓலா தரப்பில் ரூ. 861 கட்டணமாகக் கேட்கப்பட்டிருக்கின்றது. இதனைக் கேட்டு ஜாபஸ் சாமுவேல் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

மேலும், "4-5 கிமீ பயணித்ததற்கு ரூ. 861 கட்டணமா, இதை எங்களால் கட்ட முடியாது" என எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும், வாடிக்கையாளர் ஓலா மணி கிரெடிட் சேவையை ஆக்டிவேட் செய்து வைத்திருந்ததால், அந்த தொகை அந்த கணக்கில் இருந்து பிடிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த தொகையை மீண்டும் திருப்பி செலுத்துமாறு பலமுறை ஜாபஸ் சாமுவேலுக்கு ஓலாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கின்றது.

ஆனால், முற்றிலுமாக இந்த கட்டடணத்தைச் செலுத்த அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும், இதுகுறித்து ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு அவர்களிடத்தில் புகார் தெரிவித்திருக்கின்றார். ஆனால், புகாருக்கு உரிய நடவடிக்கையை எடுக்க ஓலா நிர்வாகம் தவறிவிட்டது. அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக பில் கட்டணத்தைச் செலுத்துமாறு ஜாபஸுக்கு அவ்வப்போது அவர்கள் அழைப்பை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த ஜாபஸ், இதுகுறித்து ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கின்றார். இந்த சம்பவம்குறித்து விசாரித்து வந்த நீதிமன்றம், ஓலா நிறுவனத்தை ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், நிறுவனம் சார்பில் ஒருவரும் ஆஜராகவில்லை என தெரிகின்றது. இந்த நிலையிலேயே ஜாபஸ் சாமுவேலின் புகாருக்கு பின்னால் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, அவரின் மன வேதனைக்கு ஆறுதலளிக்கும் பொருட்டு ரூ. 88 ஆயிரம் இழப்பீட்டை வழங்க ஓலா கேப்ஸுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, விசாரணைக்கான கட்டணமாக ரூ. 7 ஆயிரத்தைச் செலுத்தவும் அது உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் இந்த அனைத்தும் செலுத்த வேண்டும் என ஓலாவிற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மீறும் பட்சத்தில் அந்நிறுவனம் வட்டியுடன் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கையையும் விடுத்தது. இதுமட்டுமின்றி, கட்டணமாக வசூலிக்கப்பட்ட 861 ரூபாயை 12 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் அது உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டியானது பயண தேதியில் இருந்து கணக்கிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கூடுதல் வட்டி மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டண விதிமீறலில் ஈடுபட்டிருக்கும் ஓலா நிறுவனத்தின்மீது கன்ஸ்யூமர் கோர்ட் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

பொது போக்குவரத்தில் ரயில், பேருந்து ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பங்களிப்பை ஆட்டோ மற்றும் கார்கள் அதிக பங்களிப்பை வழங்குகின்றன. ஆனால், இந்த தனியார் போக்குவரத்து சேவையானது அரசு நிர்ணயித்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிக கட்டண வசூலில் ஈடுபடுகின்றன. தற்போதையே நிலவரப்படி ஆட்டோக்களில் முதல் 1.8 கிமீ பயணத்திற்கு ரூ. 25ம், அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ. 12 வரையிலும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

ஆனால், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் ஓரிரு கிமீ பயணங்களுக்கே நூற்றுக் கணக்கில் கட்டணத்தைக் கேட்கின்றனர். சமீப காலமாக உயர்ந்து வரும் ஆட்டோ கேஸ் விலை உயர்வைக் காரணம் காட்டி ஒரு சிலர் மீட்டருக்குமேல் கூடுதல் கட்டணத்தைக் கேட்பதையும் நம்மால் காண முடிகின்றது. இந்த நிலையிலேயே அதிக கட்டண வசூலில் ஈடுபட்ட ஓலா நிர்வாகம் மீது நுகர்வோர் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.

மேலே பார்த்த கட்டண திட்டம் கடைசியாக கடந்த 2013ம் ஆண்டில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது வரை இந்த கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என கூறி, உடனடியாக ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசை அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








