ஹூண்டாய் க்ரெட்டாவில் புதியதாக நைட் எடிசன்!! ரூ.13.51 லட்சத்தில் அறிமுகம்!
புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் கார் இந்தியாவில் ரூ.13.51 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய க்ரெட்டா ஸ்பெஷல் எடிசனை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் க்ரெட்டா, இந்தியாவில் அதிக பேரால் தேர்வு செய்யப்படுகின்ற எஸ்யூவி மாடல்களுள் முதன்மையானதாக விளங்குகிறது. கடைசியாக கடந்த 2020இன் துவக்கத்தில் புதிய தலைமுறை அப்கிரேடை பெற்றிருந்த இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காரில் தற்போது புதியதாக நைட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசனின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13,51,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு பெட்ரோல் & இரு டீசல் என க்ரெட்டாவின் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் & டீசல் என்ஜின்களுடன் கிடைக்கும் எஸ்+ வேரியண்ட்டில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
| Engine | Transmission | S+ | SX (O) |
| 1.5 L MPi Petrol | 6 MT | ₹13,51,200 | - |
| IVT | - | ₹17,22,000 | |
| 1.5 L U2 CRDi Diesel | 6 MT | ₹14,47,200 | - |
| 6 AT | - | ₹18,18,000 |

அதுவே பெட்ரோல் என்ஜின் உடனான எஸ்.எக்ஸ் (ஆப்ஷனல்) வேரியண்ட்டில் புதிய இண்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வும், டீசல் என்ஜின் உடனான எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட உள்ளது. பெயருக்கு ஏற்ப புதிய நைட் எடிசன் முழுவதுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் முன்பக்க க்ரில்லின் கிடைமட்ட ஸ்லாட்களின் மீது சிவப்பு நிற தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க & பின்பக்க மோதல்-தடுப்பு தட்டுகள், C-பில்லர் மற்றும் பக்கவாட்டு சில் கார்னிஷ்கள், மேற்கூரை கம்பிகள், பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா மற்றும் டெயில்லேம்ப் உள்ளீடுகள் உள்ளிட்டவை பளபளப்பான கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

வெளிப்பக்க கதவு கைப்பிடிகள் காரின் உடற்நிறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. காரில் இருந்து தனித்து தெரியும் வகையில் பிரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் க்ரெட்டா காரில் அலாய் சக்கரங்கள் எஸ்+ வேரியண்ட்டில் 16 இன்ச்சிலும், எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் 17 இன்ச்சிலும் கொடுக்கப்பட உள்ளன. அப்படியே காரின் உள்ளே சென்றால், வெளிப்பக்கத்தை போல் உட்புற கேபினும் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முன்பக்க க்ரில்லை போன்று, ஏசி காற்றுத்துளைகள் மற்றும் இருக்கைகள் & ஸ்டேரிங் சக்கரத்திற்கான தையல்கள் சிவப்பு நிற ஹைலைட்களுடன் வழங்கப்பட்டுள்ளன. புதிய க்ரெட்டா நைட் எடிசனில் நிலையான அம்சமாக பனோராமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட உள்ளது. இதனுடன் முழு எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டிஆர்எல்கள் போன்ற அசரடிக்கக்கூடிய அம்சங்களையும் க்ரெட்டாவின் இந்த ஸ்பெஷல் எடிசன் பெற்றுவந்துள்ளது.

மற்றப்படி என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஹூண்டாய் நிறுவனம் புதிய க்ரெட்டா நைட் எடிசனை 1.5 லிட்டர் பெட்ரோல் & டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்ய உள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6,300 ஆர்பிஎம்-இல் 113 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-இல் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஐஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. க்ரெட்டா நைட் எடிசனின் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 4,000 ஆர்பிஎம்-இல் 113 பிஎச்பி மற்றும் 1,500 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

புதிய க்ரெட்டா நைட் எடிசனின் அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் சேவை பிரிவின் முதன்மை அதிகாரி தருண் கார்க் பேசுகையில், "இந்தியாவில் ஹூண்டாயின் 25 ஆண்டுகால வளமான பாரம்பரியத்தின் ஒவ்வொரு தருணத்திலும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை தூண்டுவது எங்களின் உறுதியான முயற்சியாகும்.

அட்டகாசமான எஸ்யூவியை தேடும் லட்சக்கணக்கான இந்திய எஸ்யூவி பிரியர்களின் மத்தியில் ஆர்வத்தை க்ரெட்டாவுடன் ஹூண்டாய் நிறுவனம் அதிகரித்துள்ளது. புதிய க்ரெட்டா நைட் எடிசனை அறிமுகப்படுத்துவதின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தைரியமான மற்றும் ஸ்போர்டியான டிசைன் மேம்பாடுகளுடன் அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ற எஸ்யூவியின் தேர்வை நாங்கள் மீண்டும் வழங்குகிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications








