ஹூண்டாய் எலண்ட்ராவின் விற்பனை இந்தியாவில் நிறுத்தமா? ஸ்டைலிஷான செடான் கார் ஆச்சே!!
எலண்ட்ரா செடான் காரின் பெயர் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி தொடர்ந்து பார்ப்போம்.

இந்திய சந்தை மட்டுமின்றி, உலகளவில் ஒரு சமயத்தில் சி-பிரிவு செடான் கார்களின் ஆதிக்கமாகவே இருந்து வந்தது. மிடில்-கிளாஸில் இருந்து மில்லியனர் வரையில் அளவில் பெரிய பிரீமியம் தர செடான் காரை வாங்குவதையே விரும்பினர். ஆனால் கடந்த சில வருடங்களில் அதிகளவிலான எஸ்யூவி கார்களின் வருகையினால் வாடிக்கையாளர்களின் எண்ணம் பெரிய அளவில் மாறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனாலேயே தற்போதைக்கு மிக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சி-பிரிவு செடான் கார்களே இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இத்தகைய எக்ஸிக்யூட்டிவ் செடான் கார்களுள் ஒன்று ஹூண்டாய் எலண்ட்ரா ஆகும். ஆனால் தற்போது எலண்ட்ராவின் விற்பனையை ஹூண்டாய் எந்தவொரு அறிவிப்புமின்றி நிறுத்தி கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் வெளிப்பாடாக, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து எலண்ட்ராவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாம்.

பல ஹூண்டாய் டீலர்கள் இந்த எக்ஸிக்யூட்டிவ் செடான் காருக்கான முன்பதிவுகளை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. ஆதலால் எலண்ட்ரா செடான் காரை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப் மையத்தினை அணுகுவது நல்லது. ஏனெனில் ஒரு சில ஷோரூம்களில் இன்னமும் சில எலண்ட்ரா செடான் கார்கள் ஸ்டாக்கில் இருக்க வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் எலண்ட்ராவின் தயாரிப்பு & விற்பனை நிறுத்தப்பட்டிருந்தால், இந்திய சந்தையில் சி-செடான் கார்கள் பிரிவில் ஸ்கோடா ஆக்டேவியா மட்டுமே விற்பனையில் இருக்கும். ஆக்டேவியாவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டில்தான் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அப்கிரேடை வழங்கி இருந்தது. அதேநேரம் பாகங்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக கூட எலண்ட்ராவின் தயாரிப்பை ஹூண்டாய் நிறுத்தியிருக்கலாம்.

இல்லையென்றால், நம் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் விரைவில் புதிய தலைமுறை எலாண்ட்ரா காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தலாம். ஏனெனில் சில வெளிநாட்டு சந்தைகளில் எலண்ட்ராவின் புதிய தலைமுறை மாடல் ஏற்கனவே களமிறக்கப்பட்டுவிட்டது. ஒரு சமயத்தில், இந்திய சி-செடான் கார்கள் பிரிவில் ஹோண்டா சிவிக், டொயோட்டா கரோல்லா போன்ற முன்னணி பிராண்ட்களின் எக்ஸ்க்யூட்டிவ் செடான் கார்களும் விற்பனையில் இருந்தன.

ஆனால் தற்போது எலண்ட்ராவின் விற்பனை நிறுத்தத்தால் ஆக்டேவியா மட்டுமே உள்ளது. எலண்ட்ராவின் விற்பனை நிறுத்தம் குறித்து இதுவரையில் ஹூண்டாய் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் எலாண்ட்ரா காரில் இரு என்ஜின் தேர்வுகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கி வந்தது. இதில் ஒன்றான 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 192 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

மற்றொரு 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் 114 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. பிரீமியம் தரத்திலான செடான் கார் என்பதால், எலண்ட்ராவின் வெளிப்புற தோற்றமும், உட்புற பயண சவுகரியமும் மிக சிறப்பாக வழங்கப்பட்டு இருந்தது.

எலண்ட்ராவின் கேபினில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உடன் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப், இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், வயர் இல்லா சார்ஜிங், இணைப்பு கார் தொழிற்நுட்பம் மற்றும் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்கு எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், 6 காற்றுப்பைகள் மற்றும் முன்& பின்னால் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் முதலியவற்றை எலண்ட்ரா கொண்டிருந்தது.

எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ்(O) என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டுவந்த ஹூண்டாய் எலண்ட்ரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.85 லட்சங்களில் இருந்து ரூ.21.12 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. ஒருவேளை புதிய தலைமுறை எலண்ட்ரா இந்தியாவில் களமிறக்கப்பட்டால், அந்த எலண்ட்ரா மாடல் ஹூண்டாயின் தற்போதைய டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் புதிய வெளிப்புற தோற்றத்தை கொண்டிருக்கும்.

அதேபோல் உட்புற கேபினிலும் சில புதிய வசதிகள் சேர்க்கப்படலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக புதிய தலைமுறை எலண்ட்ராவில் வழக்கமான என்ஜின் தேர்வுகளுடன் புதியதாக 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உள்பட ஹைப்ரீட்-என்ஜின் தேர்வும் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் டிரான்ஸ்மிஷனுக்கு டிசிடி, டார்க் கன்வெர்டர் மற்றும் சிவிடி போன்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் புதியதாக சேர்க்கப்படலாம்.


Click it and Unblock the Notifications