ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கு புதிய பெயிண்ட் தேர்வு!! சிவப்பு நிறத்தில் வாங்க இருந்தவர்களுக்கு செம்ம ஷாக்!
ஹூண்டாய் ஐ20 என் லைன் (i20 N Line) காருக்கு புதியதாக ஸ்டார்ரி நைட் (Starry Night) என்கிற நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் மோட்டார்ஸின் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராக ஐ20 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் செயல்திறன்மிக்க வெர்சனாக ஐ20 என் லைன் கடந்த 2020இன் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கு ஒற்றை-நிற மற்றும் இரட்டை-நிற பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒற்றை-நிற பெயிண்ட் தேர்வாக தண்டர் நீலம், டைட்டன் க்ரே, போலார் வெள்ளை மற்றும் ஃபியரி சிவப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. இதில் தற்போது ஃபியரி சிவப்பு என்கிற ஒற்றை-நிற பெயிண்ட் தேர்வு வாடிக்கையாளர்களை பெரியதாக கவராததால் நீக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, புதியதாக ஸ்டார்ரி நைட் என்கிற ஒற்றை-நிற பெயிண்ட் தேர்வு இந்த செயல்திறன்மிக்க ஹேட்ச்பேக் காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ரி நைட் பெயிண்ட் தேர்வானது வழக்கமான ஐ20 மாடலுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஐ20 என் லைன் மாடலுக்கு வழங்கப்பட்டு வந்த இரட்டை-நிற பெயிண்ட் தேர்வுகளிலும் ஹூண்டாய் நிறுவனம் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.

இந்த திருத்தங்களுக்கு பிறகு தற்சமயம் தண்டர் நீலம், போலார் வெள்ளை மற்றும் ஃபியரி சிவப்பு நிறத்தேர்வுகள் பாண்டோம் கருப்பு நிற மேற்கூரை உடன் கிடைக்கும். ஏற்கனவே கூறியதுதான், வழக்கமான ஐ20 ஹேட்ச்பேக்கின் ஸ்போர்டியர் வெர்சனாக ஐ20 என் லைன் விளங்குகிறது. இதனால் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஸ்டாண்டர்ட் ஐ20 மாடலையே ஐ20 என் லைன் மாடலும் ஒத்து காணப்படுகிறது.

இருப்பினும் ஐ20 என் லைன் காரின் முன்பக்க மற்றும் பக்கவாட்டு அடிப்பேனல்களில் சிவப்பு நிற ஹைலைட்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் இந்த ஐ20 செயல்திறன்மிக்க வெர்சனில் பின்பக்கத்தில் மேற்கூரை ஸ்பாய்லர், கட்டக்கட்டமான டிசைனில் முன்பக்க க்ரில் மற்றும் காரை சுற்றிலும் ‘N Line' லோகோக்கள் வழங்கப்படுகின்றன. செயல்திறன் பண்பை மேம்படுத்தும் வகையில், ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

மேலும் இதன் 4 அலாய் சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் பிரத்யேகமாக திருத்தயமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் & ஸ்டேரிங் சக்கர அமைப்பு மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்களை இந்த கார் பெறுகிறது. இதனால் ஸ்டாண்டர்ட் ஐ20 கார் உடன் ஒப்பிடுகையில் ஐ20 என் லைன் காரில் வித்தியாசமான, உறுமும் சத்தம் வெளிப்படுகிறது. இந்த காரின் உட்புறம் முற்றிலும் கருப்பு நிறத்தில், ஆங்காங்கே சிவப்பு நிற ஹைலைட்களுடன் வடிவமைக்கப்படுகிறது.

டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்களை வெளிப்புறத்தில் பெறும் ஐ20 என் லைன் காரின் உட்புறத்தில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உடன் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக கொடுக்கப்படுகின்றன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஐ20 என் லைன் மாடலில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டி-ஜிடிஐ டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 118 பிஎச்பி மற்றும் 1,500 -4,000 ஆர்பிஎம்-இல் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

தற்சமயம் ஹூண்டாய் ஐ20 என் லைன் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.90 லட்சங்களில் இருந்து ரூ.11.97 லட்சங்கள் வரையில் உள்ளன. புதிய பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டதற்கு ஏற்ப இந்த செயல்திறன்மிக்க ஹேட்ச்பேக் காரின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. விற்பனையில் ஹூண்டாய் ஐ20 என் லைன் ஹேட்ச்பேக் மாடலுக்கு ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

இவ்வாறு வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்துக்கொண்டு விற்பனை வாகனங்களின் நிறத்தேர்வுகளிலும், வேரியண்ட் வரிசையிலும் ஹூண்டாய் தொடர்ந்து மாற்றங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. ஏனெனில் இந்த வகையில் மிக சமீபத்தில்தான், க்ரெட்டா & வென்யூ என தனது பிரபலமான எஸ்யூவி கார்களின் சில வேரியண்ட்களின் தயாரிப்பு & விற்பனையை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








