ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது? ரொம்ப நாளா காத்திட்டுகிடந்த தகவல் வெளியாகிருச்சு!
ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 (Hyundai IONIQ 5) எலெக்ட்ரிக் காரை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கான பதில் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

கியா நிறுவனம் அதன் புகழ்மிக்க இவி6 (Kia EV6) மின்சார காரை விரைவில் இந்தியா கொண்டு வர இருக்கின்றது. நிறுவனம் இதுகுறித்த தகவலை வெளியிட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில் தற்போது ஹூண்டாய் நிறுவனமும் அதன் பங்காக ஓர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐயோனிக் 5 (Hyundai IONIQ 5) எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை நிறுவனம் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காரின் வருகையை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், இப்போதே எப்போது கொண்டு வரப்பட இருக்கின்றது என்பது பற்றியதகவலை அது வெளியிட்டுள்ளது. ஆகையால், இந்த தகவல் இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹூண்டாய் வாகன பிரியர்களை இந்த தகவல் குஷியில் ஆழ்த்தியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் வேர்ல்டு கார் ஆஃப் தி இயர் 2022 (World Car of the Year 2022) விருதை வென்ற காராகும். இத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் மிக சிறந்த டிசைன் கொண்ட கார் மற்றும் வேர்ல்டு எலெக்ட்ரிக் வெயிக்கிள் ஆஃப்தி இயர் ஆகிய மகுடங்களையும் இந்த காரே சூடியிருக்கின்றது.

இத்தகைய சிறப்புமிக்க எலெக்ட்ரிக் காரையே ஹூண்டாய் இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இக்காரை ஹூண்டாய் நிறுவனம் ஸ்கேட்போர்டு மற்றும் எலெக்ட்ரிக்கல் குளோபல் மாடுலர் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் கோனா இவி எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இதன் வரிசையில் புதிதாக ஐயோனிக் 5 இரண்டாவது தயாரிப்பாக நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரை அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட வாகனமாக ஹூண்டாய் உருவாக்கியிருக்கின்றது. யு வடிவ இரட்டை எல்இடி மின் விளக்கு, ஸ்வூப் ரக பானெட், பாப்-அவுட் வசதிக் கொண்ட கதவு கை பிடிகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்டவை இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவையே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளன. இத்துடன், 20 இன்ச் வீல்களும் கவர்ச்சியான தோற்றத்தில் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இன்டக்ரேடட் ஸ்பாய்லர், சுறாவின் துடுப்பு போன்ற ஆன்டெனா உள்ளிட்ட கூடுதல் கண்கவர் அம்சங்களாக ஐயோனிக் 5 எலெக்ட்ரிக்க காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தைப் போலவே பன்மடங்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் உட்பக்கம் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, ஸ்போர்ட்டியான தோற்றத்தில் காரின் உட்பகுதி காட்சியளிக்கிறது. இருப்பினும் அதிக இட வசதி மற்றும் பிரீமியம் தரத்திற்கு சற்றும் குறைச்சலின்றி காணப்படுகின்றது.

ஹெட்ஸ்-அப் திரை, இரட்டை 12 அங்குல திரை உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பெரிய திரை இரண்டும் ப்ளூலிங்க் இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது உலக சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார கார் இரு விதமான பேட்டரி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

72.6 kWh என்ற பெரிய பேட்டரி பேக் மற்றும் 58 kWh சிறிய பேட்டரி பேக் தேர்விலும் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெரியது என கருதப்படும் அந்த பேட்டரி பேக் ஓர் முழுமையான சார்ஜில் 481 கிமீ ரேஞ்ஜையும், சிறிய பேட்டரி பேக் ஒற்றை முழுமையான சார்ஜில் 385 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

இந்த காரை 2 வீல் டிரைவ் மற்றும் அனைத்து வீல் டிரைவ் தேர்விலும் ஹூண்டாய் விற்பனைக்கு வழங்குகின்றது. இதன் 2 வீல் டிரைவ் தேர்வில் மின் மோட்டாரானது பின் பக்க ஆக்ஸில்களில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த மோட்டார் அதிகபட்சமாக 217 எச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும். ஆனால், அனைத்து வீல் டிரைவ் தேர்வில் இரண்டு மின் மோட்டார்கள் வழங்கப்பட்டிருக்கும்.

முன் மற்றும் பின் பக்க ஆக்ஸில்களில் இந்த மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், இது உச்சபட்சமாக 305 எச்பி பவரையும், 605 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்தகைய சூப்பரான திறனை வெளிப்படுத்தக் கூடிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரையே ஹூண்டாய் நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதனை சிகேடி வாயிலாக நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆகையால், அதிக விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 35 லட்சம் தொடங்கி ரூ. 45 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை மட்டுமின்றி இன்னும் சில சிறிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








