ஷோரூம்ல இப்பவே துண்டை போட்டு வைப்போம்! புது எலெக்ட்ரிக் காரால் கூட்டம் அலை மோத போகுது! இன்னும் 20 நாள்ல லான்ச்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் கார் (Electric Car), அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முக்கியமான போட்டியாளராக கருதப்படும் கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா இவி6 எலெக்ட்ரிக் கார், இந்தியாவிற்கு சிபியூ (CBU - Completely Built Unit) வழியில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், எஸ்கேடி (SKD - Semi Knocked Down) வழியில் கொண்டு வரப்படுகிறது.

எனவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு சவாலான விலையை நிர்ணயம் செய்வது எளிமையானது. இதன் காரணமாகவே விலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் வாடிக்கையாளர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. நமது இந்த கேள்விக்கு இன்னும் சில நாட்களில் பதில் கிடைக்கவுள்ளது. ஆம், பொங்கல் (Pongal) பண்டிகையையொட்டி ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், வரும் ஜனவரி 11ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், கார் நிறுவனங்கள் விலையை அறிவிக்கும். எனவே வரும் ஜனவரி 11ம் தேதி, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு தற்போது முன்பதிவுகளை ஏற்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், ஹூண்டாய் டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் 72.6 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். 631 கிலோ மீட்டர்கள் என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ரேஞ்ச்தான். அத்துடன் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதும் எளிமையான ஒரு விஷயம்தான்.
ஆம், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதற்கு 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்த வேண்டும். ரேஞ்ச் போதுமானதாக இல்லை, சார்ஜ் ஏற அதிக நேரம் ஆகிறது ஆகியவைதான், எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்னைகள் ஆகும். ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதால், அனைத்து நிறுவனங்களும் தற்போது எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டில் போட்டி போட்டு கொண்டு நுழைந்து வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மற்ற நிறுவனங்கள் எல்லாம் தயங்கி கொண்டிருந்த சமயத்திலேயே, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தைரியமாக நுழைந்த கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய். இந்திய சந்தைக்கான இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் கோனா (Hyundai Kona) ஆகும்.
இதை தொடர்ந்து சந்தை சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது தனது இரண்டாவது எலெக்ட்ரிக் தயாரிப்பாக ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் முழுமையாக தயாராகி விட்டது. பிரீமியமான காராக வரவுள்ளதால், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் 2023ம் ஆண்டை ஹூண்டாய் நிறுவனம் வெற்றிகரமாக தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








