க்ராண்ட் க்ரெட்டா!! தென்னாப்பிரிக்காவிற்கு செல்லும் ஹூண்டாயின் இந்திய தயாரிப்பு - ரூ.23.37 லட்சத்தில் அறிமுகம்
இந்தியாவில் விற்பனையில் உள்ள அல்கஸார் 3-இருக்கை வரிசை எஸ்யூவி காரை கிராண்ட் க்ரெட்டா என்கிற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் க்ரெட்டா 5-இருக்கை எஸ்யூவி காரின் நீண்ட-வீல்பேஸ் வெர்சனாக ஹூண்டாய் அல்கஸார் கடந்த 2021இல் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் 3-இருக்கை வரிசையை கொண்ட எஸ்யூவி காராகும். இதுவே தற்போது தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் உள்ளதை போல் க்ராண்ட் க்ரெட்டா என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இதன் விலை தென்னாப்பிரிக்காவில் 449,900 ராண்ட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.23.37 லட்சமாகும். இந்தியாவில் அல்கஸாரை போல் தென்னாப்பிரிக்காவிலும் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் க்ராண்ட் க்ரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 6 இருக்கை வெர்சனில் கேப்டன் இருக்கை கிடைக்கும். 5-இருக்கை க்ரெட்டா எஸ்யூவி காரை காட்டிலும் க்ராண்ட் க்ரெட்டா 200மிமீ நீளம் அதிகம் உடையது மற்றும் 150மிமீ அதிக வீல்பேஸை (முன் & பின் இருக்கைகளுக்கு இடையேயான தூரம்) கொண்டது. ஸ்டாண்டர்டாக பின்பக்கத்தில் 180 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி வழங்கப்படுகிறது.

2வது மற்றும் 3வது இருக்கை வரிசைகளை மடக்கிக்கொள்வதன் மூலம் இதனை 1,670 லிட்டர்களாக அதிகரித்து கொள்ளலாம். க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவி கார்களின் அதே கே2 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் க்ராண்ட் க்ரெட்டா வடிவமைக்கப்படுகிறது. இந்த ப்ளாட்ஃபாரத்தை கொண்டு நீண்ட-வீல்பேஸ் கொண்ட கார்களையும் இந்த தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனங்களால் வடிவமைக்க முடிகிறது.

எந்த அளவிற்கு என்றால், இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதே சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா கேரன்ஸ் எம்பிவி ஆகும். இந்த 3-இருக்கை எஸ்யூவி கார் தென்னாப்பிரிக்காவிலும் எக்ஸ்க்யூட்டிவ் & எலைட் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதில் ஆரம்ப நிலை வேரியண்ட்டிலும் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உடன் 8-இன்ச் தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் காரின் பின்புறத்தை காட்டும் கேமிரா, எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய 17-இன்ச் சக்கரங்கள் உள்ளிட்டவையும் எக்ஸ்க்யூட்டிவ் வேரியண்ட்டில் கொடுக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் க்ராண்ட் க்ரெட்டாவின் டாப் எலைட் வேரியண்ட் 18-இன்ச் சக்கரங்கள், என்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு அழுத்து-பொத்தான், பனோராமிக் சன்ரூஃப், பார்க்கிங் சென்சார்கள், இரண்டாவது இருக்கை வரிசையில் மடக்கி வைத்து கொள்ளக்கூடிய அலமாரி ஆகியவற்றை கொண்டுள்ளது.

அத்துடன் இந்த டாப் வேரியண்ட்டில் டேஸ்போர்டில் 10.2 இன்ச்சில் பெரியதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் எலக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. அல்கஸாரை போல் புதிய ஹூண்டாய் க்ராண்ட் க்ரெட்டா காரும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போடீசல் என்ஜின் தேர்வுகளுடன் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 156 பிஎச்பி மற்றும் 191 என்எம் டார்க் திறனையும், டர்போடீசல் என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு இந்த 3-இருக்கை வரிசை எஸ்யூவி கார் மெக்பெர்சனை முன்பக்கத்திலும், முறுக்கப்பட்டது போல் இணைக்கப்பட்ட தடிமனான அச்சு-ஐ பின்பக்கத்திலும் கொண்டுள்ளது.

க்ராண்ட் க்ரெட்டாவின் எலைட் வேரியண்ட்டில் பனி, சகதி, மணல், ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் நார்மல் என்கிற 6 விதமான ட்ரைவிங் மோட்கள் கிடைக்கின்றன. இவ்வாறான தனித்துவமான எஸ்யூவி காரை சிகேடி முறையில் தென்னாப்பிரிக்காவில் புதியதாக அறிமுகம் செய்தாலும், இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை சற்று சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் பல ஹூண்டாய் கார்களின் விற்பனை எண்ணிக்கைகள் 2021 பிப்ரவரியை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. ஹூண்டாய் அல்கஸாரை பொறுத்தவரையில், இந்த கார் கடந்த பிப்ரவரியில் 2,516 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அல்கஸார் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications








