பொங்கி எழுந்தது ஹூண்டாய்... நம்ப முடியாத குறைவான விலையில் புதிய கார்... டாடாவை ஓரமா உட்கார வைக்க திடீர் அதிரடி
டாடா நிறுவனத்திற்கு மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விஷயத்தில் ஹூண்டாய் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சிறிய தோற்றத்தில் அறிமுகம் செய்யப்படும் எஸ்யூவி கார்கள் விற்பனையில் தூள் கிளப்புகின்றன. டாடா பன்ச் (Tata Punch) கார் இதற்கு ஒரு உதாரணம். கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில்தான் டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்று என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது. எனவே டாடா பன்ச் போன்ற அளவில் சிறிய எஸ்யூவி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. இந்த பந்தயத்தில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் முந்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிறிய எஸ்யூவி கார் ஒன்றை உருவாக்கும் பணியில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சந்தையில் டாடா பன்ச், சிட்ரோன் சி3 (Citroen C3), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுடன் இது போட்டியிடும்.

ஹூண்டாய் நிறுவன கார்களின் லைன்-அப்பில் வெனியூ காருக்கு கீழாக, இந்த புதிய எஸ்யூவி கார் நிலை நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo), ஹூண்டாய் நிறுவனம் கான்செப்ட் வடிவில் இந்த எஸ்யூவி காரை காட்சிக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கான்செப்ட் மாடல் என்றாலும் கூட, கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலையில் இது இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே 2023ம் ஆண்டின் பண்டிகை காலத்திலேயே இந்தியாவில் இந்த சிறிய எஸ்யூவி காரை ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என்று தெரிகிறது. ஹூண்டாய் நிறுவனம் தற்போது காஸ்பர் (Hyundai Casper) என்ற காரை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்கிறது.

இது சிறிய எஸ்யூவி கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டுதான் ஹூண்டாய் நிறுவனம் காஸ்பர் காரை சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்தது. இதன் நீளம் சுமார் 3.5 மீட்டர்கள் மட்டுமே. ஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய மாடல், இதை காட்டிலும் சற்று நீளமாக இருக்கலாம் என தற்போது வெளியாகி கொண்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இந்த சிறிய எஸ்யூவி காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ஆரம்பத்தில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைத்தாலும், பின் நாட்களில் சிஎன்ஜி வேரியண்ட்டையும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய எஸ்யூவி கார் என்பதால், ஹூண்டாய் நிறுவனம் விலையை மிகவும் குறைவாக நிர்ணயிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. விலை குறைவானதாக இருந்தாலும் கூட, அதற்கு ஏற்ற வகையிலும், ஹூண்டாய் கார்களுக்கே உரிய வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை இந்த சிறிய எஸ்யூவி கார் பெற்றிருக்கும்.

எனவே டாடா பன்ச் காருக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை இந்த ஹூண்டாய் எஸ்யூவி கார் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு பலருக்கும் ஹூண்டாய் நிறுவன காரை சொந்தமாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், இந்த புதிய மாடல் பலரின் ஹூண்டாய் கார் ஆசையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடிப்பதற்கு சமீப காலமாக டாடா மற்றும் ஹூண்டாய் ஆகிய 2 நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு வருவதை காண முடிகிறது. இதற்கு டாடா பன்ச் காரின் வருகை மிக முக்கியமான காரணம் ஆகும்.

பன்ச் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதால், டாடா தரப்பில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு பதில் சொல்லும் விதமாகவே ஹூண்டாய் நிறுவனம் விலை குறைவான சிறிய எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எனவே இனிமேல் டாடா, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை 5.93 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் ஹூண்டாய் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள சிறிய எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 5-5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் (எக்ஸ் ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








