கார்கள் விற்பனையில் மீண்டும் பழைய ஃபார்ம்-மிற்கு திரும்பும் ஹூண்டாய்!! ஜனவரியில் 44 ஆயிரம் கார்கள் விற்பனை!
மாருதி சுஸுகிக்கு அடுத்து கார்கள் விற்பனையில் ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா நிறுவனம் முந்தி இருந்தது.

ஆனால் 2020 ஜனவரி மாத விற்பனையில் ஹூண்டாய் மீண்டும் தனக்கான இடத்தை இந்திய சந்தையில் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 44,022 கார்களை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்த ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 11,710 யூனிட்கள் அதிகமாகும்.

அதாவது ஹூண்டாய் கார்களின் உள்நாட்டு விற்பனை 36.24% அதிகரித்துள்ளது. இருப்பினும் 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 15.35% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 52,005 யூனிட் கார்களை இந்த தென்கொரிய நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது.

44,022 யூனிட்கள் என்பது இந்திய சந்தையில் கடந்த ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை ஆகும். அதுவே, கடந்த மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 9,405 ஆகும். இந்த வகையில் இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் மொத்தம் 53,427 யூனிட் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

2021 ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் கார்களின் ஏற்றுமதி எண்ணிக்கை 8,100 யூனிட்கள் தான் என்றாலும், அதிகப்படியான உள்நாட்டு விற்பனையினால் ஒட்டுமொத்த விற்பனை 60 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக இருந்தது. ஹுண்டாய் நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதிகள் சமீப மாதங்களாக அதிகப்படியாக இருந்து வருகிறது. கடந்த 2021ஆம் வருடத்தில் மட்டும் மொத்தம் 32,799 க்ரெட்டா கார்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஹூண்டாய் ஏற்றுமதி செய்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதுவே 2020ஆம் ஆண்டில் இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 26.17% குறைவாக 25,999 க்ரெட்டா கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2021இல் 7,698 வென்யூ மற்றும் 1,741 க்ரெட்டா க்ராண்ட் (இந்தியாவில் அல்கஸார்) என மொத்தம் 42,238 எஸ்யூவி கார்களை நம் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) நிறுவனத்தின் சிஇஓ உன் சூ கிம் கருத்து தெரிவிக்கையில், "ஆத்மநிர்பர் பாரத் என்கிற மத்திய அரசின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, HMIL 'மேக் இன் இந்தியா' விஷயத்தில் உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களின் தலைமைத்துவத்தை கொண்டிருப்பதற்கான அதன் பாரம்பரியத்தை தொடர்கிறது.

உலகளாவிய அறிமுகத்தில் இருந்து க்ரெட்டா எஸ்யூவி கார் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் ஒரே மாதிரியான வெற்றியை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் பாராட்டை தக்க வைத்து கொள்வதன் மூலம் ஹூண்டாயின் உலகளாவிய எஸ்யூவி கார்கள் வரிசையில் க்ரெட்டா முக்கிய ரோல் ப்ளே செய்து வருகிறது. க்ரெட்டா இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் எஸ்யூவி ஆக இருப்பதால், வெளிநாட்டு சந்தைகளிலும் ஹூண்டாய் மிகவும் விரும்பப்படும் எஸ்யூவி பிராண்டாக உள்ளது" என்றார்.

மேலும் இவரது பேச்சின் மூலம் இதுவரையில் ஹூண்டாய் சுமார் 2.62 லட்சத்திற்கும் அதிகமான எஸ்யூவி கார்களை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது தெரியவருகிறது. இதில் க்ரெட்டா மற்றும் வென்யூ எஸ்யூவி மாடல்களின் பங்கு மட்டுமே சுமார் 93% ஆகும். எஸ்யூவி கார்கள் ஏற்றுமதியில் மாருதி சுஸூகி கூட ஹூண்டாய்க்கு அடுத்துதான்.

உள்நாட்டு விற்பனையும் சேர்த்து, கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 1.5 லட்ச க்ரெட்டா எஸ்யூவி கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்த தென்கொரிய பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி காரின் ஆரம்ப விலை தற்சமயம் ரூ.9.99 லட்சமாக உள்ளது.

க்ரெட்டா சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் மூன்று.


Click it and Unblock the Notifications








